privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !

ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !

-

“ தோழர் பிரபு “- ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !

ம்மூரில் பண்ணையார்கள், நிலவுடைமையாளர்கள் போன்றோர், சொத்துக்களை ஆண்டு அனுபவிப்பவர்கள், ஏன் கம்யூனிசத்தை வெறுக்கிறார்கள் என்ற காரணம் தெரிய வேண்டுமா? இலங்கையிலோ, இந்தியாவிலோ கம்யூனிச ஆட்சி வந்தால், தமது சொத்துக்களைப் பறித்துக் கொண்டு சிறையில் அடைத்து விடுவார்கள் அல்லது கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். இதற்கு முன்னர் சோஷலிச நாடுகளில் தமது வர்க்கத்தினருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அஞ்சி நடுங்குகிறார்கள்.
ருமேனியாவிலும், ஹங்கேரியிலும் சொகுசாக வாழ்ந்து வந்த நிலப்பிரபுக்கள் வர்க்கம் (கவனிக்கவும்: “வர்க்கம்”, மனிதர்கள் அல்ல.), எவ்வாறு கம்யூனிஸ்டுகளால் இல்லாதொழிக்கப் பட்டது என்பதை ஆய்வு செய்து எழுதப் பட்ட நூல் “Kameraad Baron” (தோழர் பிரபு). இதை எழுதிய டச்சு எழுத்தாளர் Jaap Scholten, பல மாதங்களாக ருமேனியாவில் சுற்றுப் பயணம் செய்து, அங்கு வாழ்ந்த நிலப்பிரபுக் குடும்பங்களில் இன்னமும் எஞ்சியிருக்கும் நபர்களை சந்தித்துப் பேசி, அவர்களது கதைகளை எழுதி உள்ளார்.
இந்தப் புத்தகமானது நிலப்பிரபுக்கள் மீதுள்ள கரிசனையால், ஒரு காலத்தில் மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் சாதாரண மக்களாக தெருவுக்கு வந்து விட்டார்களே என்ற சுய கழிவிரக்கம் காரணமாக எழுதப் பட்டது.  கம்யூனிஸ்டுகளால் பிரபுக் குடும்பத்தினருக்கு நடந்த கொடுமைகளை விவரித்துக் கூறுவது தான் நூலின் நோக்கம். ஆனால், நிலப்பிரபுக்கள் தமக்குக் கீழே வேலை செய்த பண்ணையடிமைகளுக்கு செய்த கொடுமைகள் பற்றி ஒரு வரி கூட  இல்லை. (ஆண்டாண்டு காலம் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வை, கம்யூனிஸ்டுகள் ஒரே நாளில் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டார்கள் என்ற உண்மையை மறைக்க வேண்டுமே?)
Jaap Scholten

இன்றைக்கும் வாழும்  முன்னாள் நிலப்பிரபுக்களின் வாரிசுகள், தமது வாழ்க்கைக் கதைகளை கூறுகின்றனர். தமது பிரபுக் குடும்பத்தினரின் அருமை பெருமைகளை, சிறுவயதில் அனுபவித்த ஆடம்பரங்களை மட்டுமே நினைவு கூறுகின்றனர். கிழக்கில் இருந்து மேற்கு வரையிலான, ஐரோப்பிய மன்னர் குடும்பங்களுக்குள் நடந்த கலப்புத் திருமணங்கள், பன்மொழித் தேர்ச்சி இவை போன்ற பழம் பெருமைகளை சொல்லி மகிழ்கிறார்கள்.

இன்றைக்கு ருமேனியாவுக்கு சுற்றுலா செல்வோர், ஐரோப்பாவிலேயே அழகான கோட்டைகள், மாளிகைகளை கண்டு களிக்கலாம். மன்னர் காலத்து வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நேரில் பார்க்கலாம். அவை இன்று சுற்றுலா மையங்களாக அனைவருக்கும் திறந்து விடப் பட்டாலும், 1949 ம் ஆண்டு வரையில் அங்கு உள்ளூர் நிலப்பிரபுக்களின் குடும்பங்கள் வசித்து வந்தன.
இரண்டு உலகப் போர்களை கண்ட போதிலும், நிலப்பிரபுக் குடும்பங்கள் எந்தக் குறையும் இல்லாமல் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தன. இதிலே குறிப்பிடத் தக்கவர்கள் ஹங்கேரிய நிலப்பிரபுக்கள். ஏனெனில், முதலாம் உலகப் போர் நடக்கும் வரையில், ருமேனியாவின் பெரும் பகுதி, குறிப்பாக மத்திய டிரான்ஸ்சில்வேனியா பிரதேசம், ஹங்கேரி சாம்ராஜ்யத்திற்குள் அடங்கியது. ருமேனியாவின் வட மேற்குப் பகுதியில் ஹங்கேரி மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்.
இரண்டாம் உலகப் போர் முடிவில், சோவியத் செம்படைகளால் விடுதலை செய்யப் பட்ட ருமேனியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்தனர். அவர்கள் நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளை வர்க்க எதிரிகளாக பிரகடனம் செய்தனர். இதிலே இன்னொரு பிரச்சினையும் சேர்ந்து ஹங்கேரி நிலப்பிரபுக்களை ஒடுக்கியது. அவர்கள், முன்னை நாள் ஆஸ்திரிய – ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் என்பதால், பெரும்பாலான ருமேனிய மக்களால் வெறுக்கப்பட்டு வந்தனர்.
கம்யூனிஸ்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்றதும், மாளிகைகளில் வசித்து வந்த நிலைப்பிரபுக் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒரே இரவில் வெளியேற்றப் பட்டனர். அரை மணி நேரம் மட்டுமே நேரம் ஒதுக்கி, உடுப்புகள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை மட்டுமே ஒரு பெட்டியில் எடுத்துச் செல்ல அனுமதித்தார்கள். எல்லோரையும் டிரக் வண்டியில் ஏற்றி தடுப்பு முகாம்களுக்கு அனுப்பினார்கள்.
பல நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக, “ஆண்ட பரம்பரை” என்ற மிதப்பில், செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், ஒரே நாளில் “அடிமைப் பரம்பரையாக” வறுமைக்குள் தள்ளப் பட்டனர். ஆடம்பரமான மாளிகைகளில் வசதியாக வாழ்ந்த பணக்காரக் குடும்பங்கள், அடிப்படை வசதிகள் இல்லாத சிறை முகாம்களில் அடைக்கப் பட்டன. ஒரு நாள் கூட உடல் வருந்தி உழைத்திராத அரச வம்சத்தினர், இளவரசர்கள், நிலவுடைமையாளர்கள், வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் ஆனார்கள். கட்டாய வேலை முகாம்களில் கால்வாய் தோண்டுவது போன்ற கடின உடல் உழைப்பை செலுத்த நிர்ப்பந்திக்கப் பட்டனர்.
ருமேனியப் புரட்சியின் ஆரம்ப காலங்களில், நிலப்பிரபுக்களுக்கு எதிரான நடவடிக்கையில் பலர் கொல்லப் பட்டுள்ளனர். மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. அவர்கள் பெரும்பாலும் வர்க்க எதிரிகளாகவோ, அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்ததாகவோ குற்றம் சாட்டப் பட்டவர்கள். அதே நேரம், சித்திரவதை தாங்க முடியாமல், அல்லது பொருள் இழப்புகளால் மனமுடைந்து  தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.
அதற்காக, ருமேனியாவின் எல்லா நிலப்பிரபுத்துவக் குடும்பங்களும் கொல்லப் பட்டனர் என்று கூறுவது ஒரு மிகைப் படுத்தல். கைது செய்யப் படுவதற்கு முன்னரே ஆஸ்திரியாவுக்கு தப்பியோடியவர்கள் பலருண்டு. அவர்கள் பின்னர் மேற்கத்திய நாடுகளில் அடைக்கலம் கோரி அங்கேயே தங்கி விட்டனர். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கம்யூனிச ஆட்சி கவிழும் வரையில் நாடு திரும்பவில்லை.
சுற்றிவளைப்பில் பிடித்துச் செல்லப் பட்டவர்களும், சில வருட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலை செய்யப் பட்டவர்கள் ஏராளம் பேருண்டு.விடுதலை செய்யப் பட்ட பின்னர், ஒவ்வொரு வாரமும் போலிஸ் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
இருப்பினும் “செகுரிதாத்தே” (Securitate) என்ற உளவுப் பிரிவு அவர்களை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருந்தது. தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் பட்டன. இப்படியானவர்கள் அரசில் உள்ளவர்களை குறை கூறினாலும், சந்தேகத்தில் திரும்பவும் கைது செய்யப் பட்டனர். ஒரு தடவை, பாடசாலை ஆசிரியையாக பணியாற்றிய ஒருவர் ஸ்டாலினை பற்றி அவதூறு செய்த குற்றத்திற்காக சக ஆசிரியரால் காட்டிக் கொடுக்கப் பட்டார். நல்ல வேளையாக, அந்த ஆசிரியையின் பிரியத்துக்குரிய வகுப்பு மாணவியின் தந்தை உளவுப்பிரிவில் வேலை செய்த படியால் தண்டனையில் இருந்து தப்பினார்.
பெரும்பாலும் எந்தக் குற்றமும் இல்லாமல் விடுதலை செய்யப் பட்ட நிலப்பிரபுத்துவக் குடும்பத்தினர், சாதாரண மக்களைப் போன்று ஏதோ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு, அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.  அவர்களது பிள்ளைகள் பாடசாலையில் படிக்கும் காலத்தில், தமது நிலப்பிரபுத்துவ பின்னணியை மறைத்து வந்தனர்.
முன்னாள் நிலப்பிரபுக்களின் பிள்ளைகள் படிக்க அனுமதிக்கப் பட்டாலும், ஆரம்பப் பாடசாலைக் கல்வியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி கற்கும் உரிமை பாட்டாளிவர்க்க குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமே உண்டு. (புரட்சிக்கு முன்னர் இது நேர்மாறாக இருந்ததை இங்கே சொல்லத் தேவையில்லை.) “நிலப்பிரபுவின் பிள்ளைகள்” என்றால் அது சமூகத்தில் தாழ்வானவர்கள் என்ற அர்த்ததில் பார்க்கப் பட்டது. அதனால், தமது குடும்பம் பற்றிய உண்மை ஏனைய பிள்ளைகளுக்கு தெரிய விடாமல் மறைத்தனர். சிலநேரம், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் சொல்லி இருப்பார்கள்.
முன்பு மாளிகையில் வாழ்ந்த நிலப்பிரபுக் குடும்பங்கள், தற்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இருப்பினும், வீடுகளில் தமது நிலப்பிரபுத்துவ கடந்த காலத்தை நினைவுபடுத்தும் படங்கள், நினைவுச் சின்னங்களை வைத்திருந்தனர். சிலநேரம், முன்னாள் நிலப்பிரபுக்கு விசுவாசமான சாமானியர்கள் அவற்றை பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்து கொடுத்தனர்.
நிலப்பிரபுக்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் வெளிப்படையாக நடந்தன. அந்தக் காலத்தில் ருமேனியாவில் சுற்றுப் பயணம் செய்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் Wilfred G. Burchett அவற்றை நேரில் கண்டு குறிப்பெடுத்துள்ளார். அந்தக் கட்டுரைகள் 1951 ம் ஆண்டு வெளியான Peoples Democracies சஞ்சிகையில் பிரசுரிக்கப் பட்டன.
அதில் அவர் முன்னாள் நிலப்பிரபுக்களின் அவல நிலை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “அவர்கள் தாம் ஏழ்மையில் வாடுவதாக குறைப் படுகின்றனர். எந்தக் காலத்திலும் கஷ்டப் பட்டு உழைத்து வாழாதவர்கள், இப்போதும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு, தம்மிடம் இருந்த நகைகளை விற்று சாப்பிடுகிறார்கள் அல்லது சட்டவிரோத சந்தைகளில் பொருட்களை விற்றுப் பிழைக்கிறார்கள்.”
Margit Odescalchi – The red princess

இன்றைக்கு எஞ்சியிருக்கும் நிலப்பிரபுக்களின் வாரிசுகள், தாம் “கம்யூனிச கொடுங்கோன்மைக்கு” அடிபணியாமல் தப்பிப் பிழைத்து விட்டதாக சொல்லிப் பெருமைப் படுகின்றனர். “கொலை செய்தார்கள், சித்திரவதை செய்தார்கள், சிறுமைப் படுத்தினார்கள், ஒதுக்கி வைத்தார்கள். ஆனால், ருமேனிய நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் எதுவுமே கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை…” என்று இறுமாப்புடன் கூறுகின்றனர்.

இந்த நூலை எழுதியவரும் அது உண்மை என்றே நம்பி இருக்கிறார். ஆனால், நாடு முழுவதும் பலரது சாட்சியங்களை கேட்டு பதிவு செய்த பின்னர், எல்லாமே கருப்பு, வெள்ளை இல்லை என்ற உண்மை தெரிய வந்தது. பலர் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டனர். ருமேனியாவில் புதிய கம்யூனிச ஆட்சியாளர்களை ஆதரித்த முன்னாள் நிலப்பிரபுக்களும் இருந்தனர்.
பாட்டாளிவர்க்கத்தின் பக்கம் நின்ற ஒரு “கம்யூனிச இளவரசி” இன் கதை பிரபலமானது. மார்கிட் (Margit Odescalchi), ஒரு குறுநில மன்னர் குடும்பத்தில் இளவரசியாக பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் காலத்தில், நாஸிகள் இவரது சகோதரனை சித்திரவதை செய்ததை கண்டதில் இருந்து தீவிர பாசிச எதிர்ப்பாளராக மாறியவர். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததும் தனது பரிபூரண ஆதரவை வழங்கினார்.
அதற்காக, கம்யூனிச ஆட்சியாளர்கள் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 150 ஹெக்டேயர் நிலத்தை வைத்திருக்க அனுமதித்து இருந்தனர். இருப்பினும், அவர் அந்த நிலங்களை தானாகவே ஏழை விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து விட்டு, ஒரு தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாக வேலை செய்து வாழ்ந்தார். ஒரு நிலப்பிரபுக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பாட்டாளிவர்க்கத்தில் ஒருவராக மாறிய இளவரசி மார்கிட், சோஷலிச ஹங்கேரி நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
 ( நன்றி: Kameraad Barron, Jaap Scholten நூலில் இருந்து சில பகுதிகள். ) 
நன்றி : தோழர் கலையரசன், கலையகம்