privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாமொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !

மொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !

-

மொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !

ருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மொங்கோலியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. பெருமளவில் நாடோடி இடையர்களை கொண்ட மக்கள் சமூகத்தில் இருந்து சோஷலிசப் புரட்சி வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

(மார்க்சிய – லெனினிய பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள். தகவல்: Mongolia Today, January 1963)

முதலில், மொங்கோலிய சோஷலிசப் புரட்சிக்கு காரணமாக இருந்த, டம்டின் சுக்பதார் பற்றி சில குறிப்புகள். டம்டின் சுக்பதார் ஒரு சாதாரண ஏழை இடையர் குடும்பத்தில் பிறந்தவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில், முகாமில் நிலவிய ஊழல், வசதிக் குறைபாடுகளுக்கு எதிரான சிப்பாய்க் கலகத்தில் பங்கெடுத்தவர். பிற்காலத்தில் பௌத்த மத நூல்களை அச்சிடும் அரசு அச்சகத்தில் வேலை செய்த பொழுது மார்க்சியத்தை அறிந்து கொண்டார்.

அப்போது தலைநகர் உலான் பட்டாரில் தங்கியிருந்த ரஷ்ய மார்க்சிஸ்டுகள் மூலம் மார்க்ஸிய நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கலாம். டம்டின் சுக்பதார் பிற மார்க்ஸிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் புரட்சிகர கட்சியை உருவாக்கினார். மொங்கோலிய நாடோடி இன மக்களை அணிதிரட்டி, கெரில்லாப் படை ஒன்றை அமைத்தார்.

இதே நேரம், ரஷ்யப் புரட்சியின் தாக்கம் மொங்கோலியாவில் எதிரொலித்தது. போல்ஷெவிக் செம்படைகளால் தோற்கடிக்கப் பட்ட ஸார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள், மொங்கோலியாவுக்குள் நுழைந்து பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினர். அதற்கெதிராக மொங்கோலிய மக்கள் கிளர்ச்சி செய்தனர். டம்டின் சுக்பதார் தலைமை தாங்கிய மொங்கோலிய நாடோடிகளின் கெரில்லா இராணுவம், ரஷ்ய செம்படை உதவியுடன் போராடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மொங்கோலியாவில், 1924 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக, அந்த நாடு கம்யூனிசப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகில் சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக தோன்றிய, இரண்டாவது சோஷலிசக் குடியரசு அதுவாகும்.

அதுவரை காலமும், திபெத்திய பௌத்த மதத்தை பின்பற்றும் மதத் தலைவர்களாலும், சீன மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த மொங்கோலியா நாட்டில், எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. பெரும்பாலான மொங்கோலிய மக்கள், நாடோடி கூட்டங்களாக வாழ்ந்ததால், பாடசாலைகளும் கட்டப் படவில்லை. பௌத்த துறவிகளும், மேட்டுக்குடியினரும் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.

மொங்கோலியா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், மாலை நேர பாடசாலைகள் அமைக்கப் பட்டன. பகலில் வேலை செய்து விட்டு வரும், தொழிலாளர்கள், விவசாயிகள், இடையர்கள் அந்த மாலை நேரப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி கற்றனர். உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் “மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்” அமைக்கப் பட்டது.

இது பிற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்டது. கல்வி கற்கும் வயதில் உள்ள சாதாரண மாணவர்களுக்காக அமைக்கப் படவில்லை. வறுமை காரணமாக இளம் வயதில் வேலைக்கு போக வேண்டியிருந்த இளம் வயதினர் முதல், முதுமையிலும் அறிவைத் தேடுபவர்கள் வரையிலான பலதரப் பட்டோர் அங்கே கல்வி கற்றனர். மாலை நேர பாடசாலைகளில் சித்தி பெற்ற தொழிலாளர்களும் மேற்படிப்புக்காக வந்தனர்.

மார்க்சிய – லெனினிய பல்கலைக்கழகத்தில், வெறும் கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே போதிப்பார்கள் என்று, தவறாக நினைத்து விடக் கூடாது. சாதாரண பல்கலைக் கழகத்தில் போதிக்கப் படும் அனைத்து பாடங்களையும் அங்கே பயில முடியும். அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர், பொறியியலாளர்களாக, பொருளியல் நிபுணர்களாக, விவசாய நிபுணர்களாக, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றனர். 1953 ம் ஆண்டு, உலான் பட்டார் நகரில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, பத்து வருடங்களுக்குள் 900 பேர் பட்டதாரிகளாக வெளியேறினார்கள்.

-கலையரசன்

நன்றி : கலையகம்