privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமேய்ச்சல் வேலையாகிப் போன ஆசிரியப் பணி !

மேய்ச்சல் வேலையாகிப் போன ஆசிரியப் பணி !

-

ஆசிரியர்கள் தரம் – கொஞ்சம் லாஜிக்கலா பேசுவோமா?

மீபத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த மாணவர்கள் தற்கொலையின்போது அதன் காரணமாக சொல்லப்பட்டவை ஆசிரியர்களின் நடத்தை (அவர்கள் மாணவர்களை கையாளும் முறை மற்றும் தண்டிக்கும் முறைகள்). பெரும் பணத்தை செலவிட்டு பிள்ளைகளை படிக்கவைக்கும் நடுத்தர வர்க்க பெற்றோர்களின் வழக்கமான கல்விசார் புலம்பல் ஆசிரியர்களின் தரம் பற்றியதாகவே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னால் நடந்த ஆசிரியர் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது வெளிப்பட்ட பொது விமர்சனமும் நவீன நாட்டாமைகளான நீதிபதிகளின் விமர்சனமும் ஆசிரியர்கள் தரம் பற்றிய அங்கலாய்ப்பாகவே இருந்தன. சில இடதுசாரி கண்ணோட்டமுள்ள பெற்றோர்களின் கருத்துக்களும் இவ்வாறாகவே இருந்ததையும் பார்த்திருக்கிறேன். இவற்றை ஒருங்கிணைத்து பார்க்கையில் நாம் ஆசிரியர்கள் மீது மிகவும் மோசமான அபிப்ராயம் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

இவற்றை முழு உண்மை என்றோ அல்லது முழுப்பொய் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால் இத்தகைய நம்பிக்கையானது எவ்வித பகுப்பாய்வும் இல்லாமல் ஒரு தரப்பு பார்வையோடு வலுப்படுவது மிகவும் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும், அல்லது அவ்வாறான விளைவுகளை அது முன்பே உருவாக்கத் துவங்கி விட்டது. இப்படியான ஒருதரப்புப் பார்வையும் ஆய்வு பூர்வமற்ற அவநம்பிக்கையும் தீர்வை நோக்கிய திசையில் நம்மை ஓரங்குலம்கூட நகர்த்தாது என்பதையும் கவலையோடு பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. உணர்வுபூர்வமான எதிர்வினைகளை கடந்து நாம் இதனை தர்க்க பூர்வமாக அணுகவேண்டிய மிக அவசரமான காலத்தில் இருக்கிறோம். அதற்கான சமிஞைகளும் எச்சரிக்கைகளும் நமக்கு நாள்தோறும் வந்துகொண்டே இருக்கிறது.

ஆசிரியர்கள் மீதான அபிப்ராயங்களை நாம் ஊடக செய்திகள் வாயிலாகவும் மாணவர்களின் அறிவு, மதிப்பெண் மற்றும் நடத்தை வாயிலாகவும் உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால் இவற்றுக்கு எல்லாம் ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பா எனும் கேள்வியை நாம் எழுப்புவதே இல்லை. காரணம் அதற்கான பதிலுக்கு நீங்கள் உழைக்க வேண்டும். வெறும் புலம்பலை அந்தக் கேள்வி ஏற்றுக் கொள்வதில்லை.

ஆத்திரத்தை இறக்கி வைக்கும் ஒற்றை எதிரி போதும் எனும் சமாதானத்துக்கு அந்தக் கேள்வி இடையூறாக இருக்கிறது. இருந்தாலும் நமக்கு வேறு வழியில்லை, நாம் அந்த கேள்விகளை நேர்மையாக எதிர்கொண்டே ஆகவேண்டும். முன்னேற்றத்துக்கான பயணம் ஒருபோதும் இனிமையானதாக இருக்காது.

முதலில் பள்ளிச்சூழல் பற்றிய சில கேள்விகளை பார்ப்போம்.

  • கடந்த 60 வருடங்களில் வகுப்பறை வடிவமைப்பு மற்றும் பாடம் நடத்தும் முறைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் என்னென்ன?
  • ஒரு கிராமப்பள்ளி ஆசிரியருக்கும் நகரப்பள்ளி ஆசிரியருக்கும் உள்ள பணியிட சவால்கள் முற்றிலும் வேறானவை. இங்கே ஆசிரியரின் திறனை அளவிடும் மதிப்பீட்டு முறைகளில் செய்யப்பட்ட மேம்பாடுகள் என்னென்ன?
  • பள்ளிகளில் உள்ள கற்றல் குறைபாடுள்ள சிறார்களை கண்டறியவும் அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளுக்கும் விதிமுறைகள் ஏதும் வகுக்கப்பட்டிருக்கிறதா?
  • பொதுப்பள்ளிகளில் படிக்க இயலாத சிறப்பு நிலை சிறார்களுக்கு அரசு உருவாக்கியிருக்கும் வாய்ப்புக்கள் என்ன? அல்லது அதற்கான திட்டங்களேனும் இருக்கிறதா?
  • ஆசிரியர்கள் தமது திறனை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள என்னென்ன வசதிகள் இருக்கின்றன?
  • ஒரு பாடத்தை ஏன் படிக்கவேண்டும் என்பதையும் எந்த கண்ணோட்டத்தோடு அப்பாடம் நடத்தப்படவேண்டும் என்பதையும் நாம் ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்றுவித்தாக வேண்டும். அப்படி ஏதேனும் பயிற்சிகளோ கையேடோ இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
  • நீண்டகால அடிப்படையிலான- கல்வித்துறை சார்ந்த மாற்றங்கள் பற்றிய வரைவுகளோ அல்லது இலக்குகளோ நம்மிடம் இருக்கிறதா?
  • வகுப்பு விதிகளுக்கு கட்டுப்படாத, இடையூறான நடத்தை கொண்ட (அல்லது பிறரை மோசமாக நடத்தும் இயல்பு கொண்ட) மாணவர்களை கையாள்வதற்கான நெறிமுறைகள் ஏதேனும் பயன்பாட்டில் இருக்கிறதா?

அனேகமாக எல்லா கேள்விகளுக்கும் நம்மிடையே பதில் இருக்காது. மாணவர்களது சிந்தனையை, ஆளுமையை பெருமளவு மாற்றவல்ல அசுரத்தனமான மாற்றங்கள் சமூகத்திலும் தொழில்நுட்ப தளங்களிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவற்றை கவனத்தில் கொண்டு செய்யப்பட வேண்டிய எந்த ஆய்வும் சீர்திருத்தங்களும் பள்ளிக் கல்வியில் செய்யப்படவே இல்லை.

இந்தியாவின் பிரத்யேக இயல்பு ஒன்று உண்டு, அது இருப்பதில் பலவீனமானவர்கள் மீது பழியைப் போட்டு மற்றவர்கள் தப்பித்துக் கொள்வது. இந்த வழக்கம் இல்லாத துறையே இங்கு இல்லை. அதுதான் பள்ளிச் சூழல்களிலும் நிகழ்கிறது. அரசு, பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் எனும் கல்வியின் அதிகார அடுக்கில் கடைசியாக இருக்கும் ஆசிரியர்கள் மீது பழி போட்டு மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வது சுலபமான இந்திய பாணி தப்பித்தலாக இருக்கிறது.

எல்.கே.ஜி வகுப்பில் இருந்து துவங்கும் பிரச்சினைகளை பார்ப்போம். பெரும்பாலான எல்.கே.ஜி வகுப்பு பாடங்கள் பிளே ஹோம்கள் மற்றும் ஆர்வமிகுதி அம்மாக்களால் (பாதிக்கும் மேலான குழந்தைகளுக்கு) பள்ளியில் சேரும் முன்பே கற்றுத் தரப்பட்டுவிடுகின்றன. ஆக ஒரு கே.ஜி ஆசிரியர் ஒரே நேரத்தில் ஒரே பாடத்தை நன்கு படித்த குழந்தைகள் மற்றும் அதில் அறிமுகமே இல்லாத குழந்தைகள் என இரண்டு வகையான சிறார்களுக்கும் கற்றுத்தர வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். படிக்கத் தெரியாத குழந்தைகளுக்கு கவனம் செலுத்தினால் ஏற்கனவே பாடம் படித்த குழந்தைகள் சும்மாயிருக்கும். ஆகவே அவர்களுக்கு குறும்பு செய்யும் அவகாசம் கிடைக்கிறது.

“குழந்தைகளை மேய்க்கும்” வேலையாக மாறிப்போன ஆசிரியர் பணி

படிக்கத் தெரிந்த குழந்தைகளை இன்னும் மேம்படுத்த முயல்கையில் புதிதாக கற்கும் மாணவர்கள் குறும்பு செய்வார்கள். இந்த அலைக்கழிப்பு ஒரு ஆசிரியருக்கு “குழந்தைகளை மேய்க்கும்” வேலையை பிரதானமாக்குகிறது. அப்படி ஆரம்பிக்கும் இந்த மேய்ச்சல் வேலை 10 ஆம் வகுப்புவரை நீடிக்கிறது. உஷ், சைலன்ஸ், ஏய் போன்ற (ஆசிரியர்களின்) வார்த்தைகளை நீங்கள் பள்ளி வராண்டாக்களில் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

எல்லா பள்ளிகளிலும் உத்தேசமாக 10 – 15 சதம் குழந்தைகள் மிகைக் குறும்பு குழந்தைகளாக, கற்பதில் சிரமம் உள்ள குழந்தைகளாக இருக்கிறார்கள். ஓரிடத்தில் 10 நிமிடம் தொடர்ந்து அமர இயலாத பிள்ளைகளை 8 வகுப்பில்கூட பார்க்க முடிகிறது. இவர்களைக் கையாள்வதற்கென்று வழிகாட்டும் நெறிமுறைகள் இங்கே இல்லை. இந்த வகை சிறார்களை கையாள்வது என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு. அதற்கு போதிய அவகாசம் மற்றும் கூடுதல் பணியாளர்கள் தேவை. ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தும் அளவுக்கு மாணவர் – ஆசிரியர் விகிதம் இருக்க வேண்டும்.

கற்றல் குறைபாடுகளை ஓரளவு சரியாக கண்டறியும் வகையில் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சிகள் தரப்பட வேண்டும். அப்படி கண்டறியப்படும் சிறார்களின் பிரச்சினையை உறுதி செய்யவும் அதனை சரி செய்யும் வழிகளை பரிந்துரைக்கவும் உரிய நிறுவனங்கள் தேவைப்படும். மேலும் பள்ளிகளில் சிறப்பு சிறார்களுக்கான தனிப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆற்றுப்படுத்துனர்கள் வேண்டும்.

இவற்றை மாநிலம் முழுக்க கொண்டு வருவது என்பது மலையை நகர்த்தும் வேலை. தற்போதைய நிலையில் இதனை செய்யும் அளவுக்கு அரசு இல்லை, செய்ய நினைத்தாலும் சிறப்பு ஆசிரியர்கள், ஆய்வு மையங்கள் மற்றும் ஆற்றுப்படுத்துனர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை. இது வெறும் 15 சதவிகிதம் குழந்தைகளின் சிக்கல்தானே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அவர்களை கையாள்வதில் ஆசிரியரின் நேரம் அதிகம் செலவாகிறது.

உட்கார மறுக்கிற, அடுத்த குழந்தைகளிடம் எளிதில் சண்டையிடும் சிறார்கள் குறித்து ஆசிரியர் அதீத கவனம் செலுத்த நேர்கிறது. இது ஒரு ஆசிரியரின் செயல்திறனை பெருமளவு பாதிக்கிறது. எல்லா அமைப்புக்களின் ஒட்டு மொத்த தோல்வியின் கனத்தை ஆசிரியர் மட்டும் சுமக்க நிர்பந்திக்கப்படுகிறார். இந்நிலையில் அவருக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எக்கேடும் கெட்டு ஒழிஞ்சு போ என நினைத்து மேய்ச்சல் வேலையை செய்து மாணவர்களை அடுத்த ஆண்டில் மேல் வகுப்புக்கு தள்ளலாம்.

அவரைவிட பலவீனமான பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் மீது தமது சுமையை தள்ளிவிடலாம்.

அல்லது மேற்சொன்ன இரண்டையும் வேறு வேறு விகிதங்களில் கலந்து செயல்படவும் முடியும்.

விவாதம் யாருக்கு பொறுப்பு அதிகம் என்பதோ யார் பெரிய குற்றவாளி என்பதோ அல்ல. அது எளிதில் முடியக் கூடியதும் அல்ல. ஆனால் இதனை மாற்றுவதற்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டியது பெற்றோர்கள்தான். காரணம் மற்றவர்களுக்கு அது ஒரு வேலை மட்டுமே.

இங்கே பெரிய பிரச்சினை மோசமான ஆசிரியர்கள் அல்ல, மாறாக சரியாக வேலை செய்ய விரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய களம் இல்லை. அது அவர்களது ஆர்வத்தைக் கொல்கிறது. சலிப்படைய வைக்கிறது இறுதியில் அவர்களும் ரிஸ்க் இல்லாத ஆசிரியப்பணி எனும் பாதுகாப்பு வளையத்துக்குள் செல்கிறார்கள். ஒப்பீட்டளவில் இதுதான் அதிகம் சிக்கலானது.

நன்றி : வில்லவன்

பின் குறிப்பு :

இந்த கட்டுரைத்தொடர் பள்ளிச்சூழல் பற்றிய சில அம்சங்களை விவாதிக்கும் நோக்கில் எழுதப்படுகிறது. மே இறுதி வரை வேறு வேறு தலைப்புக்களில் தொடரும்.

எனது தனிப்பட்ட அனுபவத்திற்கு உட்பட்ட பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப்படவிருக்கின்றன. ஆகவே இது முழுமையானதோ முழுக்க சரியானதோ அல்ல. வேறு சூழலில் உள்ள பிரச்சினைகளும் தீர்வுகளும் வேறாக இருக்கலாம்.

ஆசிரியர் மற்றும் மாணவர் தரப்புக்கு வக்காலத்து வாங்க இப்பதிவுகள் எழுதப்படவில்லை. அந்தத் தரப்பின் பார்வையையும் விவாதத்துக்கு கொண்டுவருவது மட்டுமே நோக்கம்.

  1. ஆசிரியர் பணிக்கு செல்லும் வரை துடிப்பாய் இருப்பவர்கள்
    பணியில் சேர்ந்ததும் நொடிந்து போகிறார்கள் ?

  2. நீட் தேர்வுகான பாடத்திட்டத்தை கொண்டுவந்து விட்டு
    அதற்கு தகுதியான ஆசிரியர்களை ஒரு நீட் தேர்வுக்கும் மேலான தேர்வின் மூலமாகத்தானே கொண்டு வர முடியும் ?

  3. கல்வி குறித்தும், பள்ளிகள் குறித்தும் பொதுமக்களுக்கு புரிதல் பெரிதாக இல்லை.

    சமீபத்தில் ஒரு ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, கற்றுக்கொடுப்பதில், மாணவர்களிடத்தில், அரசு அணுகுகின்ற மோசமான முறை என பல பிரச்சனைகளை பட்டியலிட்டு சொன்னார்.

    ரஜினி ஸ்டைலில் சொன்னால், கொஞ்சம் தலைச்சுற்றித்தான் போய்விட்டது.

    வில்லவன் எழுத தொடங்கியிருக்கும் இந்த தொடர் அதற்கான விவாதத்தை, புரிதலை துவக்கி வைக்கும் என நம்புகிறேன்.

    சமூக அக்கறை கொண்ட, துறை சார்ந்த நபர்கள் இப்படி தொடர் எழுதுவது மிகவும் முக்கியமானது.

    வில்லவன் தொடர்ந்து எழுதுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  4. What is big about NEET,
    out of 11 lakhs candidates appeared 6.5 lakhs students made pass,
    with even less than 25% marks, as qualified,
    whereas only one lakh and odd medical seats are available through out India.

Leave a Reply to இராக்கண்ணன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க