Thursday, May 1, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் !

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் !

பொதுத் துறை வங்கிகளில் நடைபெரும் முறைகேடுகளைத் தடுக்க வங்கிகளை தனியாமயமாக்க சொல்கின்றனர், தனியார்மய தாசர்கள். அப்படி செய்தால் என்ன ஆகும்? அலசுகிறது இந்த கட்டுரை.

-

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் !

பொதுத்துறை வங்கிகளில் கடனை வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் நாமம் போட்டுவிட்டுத் தரகு முதலாளிகள் நாட்டை விட்டு நைசாக வெளியேறிவிடும்போதும், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அலசும்போதும், பொருளாதார நிபுணர்கள் என்ற பெயரில் உலாவரும் தனியார்மயத்தின் கைத்தடிகள் அனைவரும் கீறல் விழுந்த ரெக்கார்டு போல உபதேசிக்கும் ஒரே ஆலோசனை, பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்பதுதான்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் முகத்திரையை மட்டுமின்றி, வங்கிகளைத் தனியார்மயமாக்க முயன்று வரும் மோடி அரசின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறது.

மோடி அரசு நிதி ஆயோக்கை அமைத்த பிறகு, இத்தனியார்மயக் கைக்கூலி நிபுணர்களின் கருத்தே அரசின் கருத்தாகவும் மாறிவிட்டது.

‘‘வாராக் கடன் பிரச்சினையால் பொதுத்துறை வங்கிகள் நட்டமடைந்திருப்பதாலும் அவற்றின் பங்கு மதிப்பு சரிந்திருப்பதாலும், அவற்றை உடனடியாகத் தனியார் முதலாளிகள் வாங்க விரும்பமாட்டார்கள். அதனால், அரசு பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்து, அவற்றைக் கொஞ்சம் தூக்கி நிறுத்திய பிறகுதான் விற்க முடியும்” என்கிறார், பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் தெபராய்.

மோடி அரசும் 2.11 இலட்சம் கோடி ரூபாயைப் பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்யப் போவதாக இந்த பட்ஜெட்டில் அறிவித்துவிட்டது.

உங்கள் வீட்டில் புகுந்து திருடியவனை நீங்கள் போலீசில் பிடித்துக் கொடுப்பீர்களா, அல்லது திருடியதற்கு மேலும் சன்மானம் கொடுத்து அவனை வழியனுப்பி வைப்பீர்களா? இந்த மறுமுதலீடு என்பது திருடனுக்குச் சன்மானம் கொடுப்பதற்குச் சமமானது.

இதுவொருபுறமிருக்கட்டும். ‘‘வாராக் கடன் பிரச்சினையைக் காட்டிப் பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போலாகாதா” என எதிர்க் கேள்வி கேட்டால், பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்க வேண்டிய அவசியத்திற்குத் தனியார்மய ஆதரவாளர்கள் அடுக்கும்

காரணங்கள் இவைதான்:

‘‘பொதுத்துறை வங்கிகளின் உயர் நிர்வாகிகளுள் பெரும்பாலோர் திறன் வாய்ந்த தொழில்முறை நிபுணர்கள் கிடையாது. அவர்களுள் பெரும்பாலோர் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்து, நிர்வாகப் பதவிகளைப் பிடிக்கிறார்கள்.

இதனால் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் யாருக்கெல்லாம் கடன் கொடு எனக் கைகாட்டுகிறார்களோ, அவர்களுக்குக் கடன் கொடுத்து பொதுத்துறை வங்கிகளை நெருக்கடிக்குத் தள்ளிவிடுகிறார்கள். ஆனால், தனியார் வங்கிகள் தகுதியும் திறமையும் கொண்ட தொழில்முறை பொருளாதார நிபுணர்களால் நிர்வகிக்கப்படுவதால், அவ்வங்கிகளில் கண்டவனெல்லாம் கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட முடியாது.”

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்துத் தனியார்மய விசுவாசிகள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும், தனியார்மயத்தை அவர்கள் சர்வரோக நிவாரணியாகக் காட்டுவதற்குக் கூறும் காரணங்கள் ‘‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும்” என்ற நகைச்சுவையை விஞ்சக்கூடியவை.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது கஜானா சாவியைத் திருடனிடம் கொடுப்பதற்கு ஒப்பானது என நாம் கூறி வருகிறோமே, அதற்கொரு சான்றாக அம்பலமாகியிருக்கிறது, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் கொடுத்த விவகாரம்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனியார் வங்கி என்றபோதும், அதில் புழங்கும் பணம் பொதுமக்களின் பணம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டுதான் இந்தப் பிரச்சினயை நாம் அணுக வேண்டும்.

எப்படிப்பட்டவர்களை வங்கி நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் எனத் தனியார்மய ஜால்ராக்கள் சொல்லி வருகிறார்களோ, அந்தத் தகுதிகள் அனைத்தையும் கொண்டவர்தான் ஐ.சி.ஐ.சி.ஐ. தலைமைச் செயல் அலுவலர் (சி.இ.ஓ.) சாந்தா கோச்சார்.

அவர் சி.ஏ. படிப்பும், நிர்வாக மேலாண்மை படிப்பும் முடித்தவர் என்றும், தனது உழைப்பு மற்றும் திறமையால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் செயல் தலைவராக உயர்ந்தவர் என்றும் கூறுகிறது, அவரைப் பற்றிய விக்கி பீடியா பக்கம்.

அதாவது, அவர் அரசியல் தலைமையைக் காக்காய் பிடித்து, வங்கியின் தலைமைப் பதவிக்கு வரவில்லை. எந்த அரசியல்வாதியும் சொல்லி வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் கடனை வழங்கவில்லை. அது அவரால் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்ட நிர்வாக முடிவு.

பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் அரசியல் நெருக்கடிக்கு ஆளாகிக் கொடுத்த கடன்கள்தான் வாராக் கடனாக நிற்கிறது எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள். ஆனால், அரசியல் நெருக்கடியோ, வேறு எந்த சிபாரிசோ இல்லாமல் சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்குக் கொடுத்த கடனும் வாராக் கடனாகி நிற்கிறது.

இதற்குக் காரணம் சாந்தா கோச்சார் குடும்பத்தின் சொந்த ஆதாயம் என்பதும் அம்பலமாகிவிட்டது. கையூட்டு வாங்கிக் கொண்டு காரியத்தை முடித்துக் கொடுப்பதற்கும் சாந்தா கோச்சார் குடும்பத்தினர் அடைந்திருக்கும் ஆதாயத்திற்கும் அடிப்படையில் எந்தவொரு வேறுபாடும் கிடையாது.

அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் கொடுக்கப்படும் கடன்களைவிட, சொந்த ஆதாயத்தின் பொருட்டு வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கும் சாந்தா கோச்சாரின் நிர்வாக முடிவுதான் மிகக் கேடானது.

‘‘நிதி அமைச்சகத்திலிருந்து சில சலுகைகளைப் பெற்றுத் தந்ததற்காகக் கையூட்டுப் பெற்றார்” என்பது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டு.

சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் மீதான குற்றச்சாட்டு அதைவிட மோசமானது. வங்கியில் உள்ள பொதுமக்களின் பணத்தை வீடியோகான் முதலாளி கொள்ளையடிக்க விட்டுவிட்டு, அதற்குச் சன்மானம் வாங்கியிருக்கிறார்கள்.

அலைக்கற்றை வழக்கில் 200 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியதாக ஆ.ராசாவையும் கனிமொழியையும் கைது செய்தார்கள். வழக்கு தோற்றதும் மேல்முறையீடும் செய்கிறார்கள். அரசியல் நிர்பந்தம் காரணமாக நிரவ் மோடிக்கு வங்கிப் பணத்தை வாரிக் கொடுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது வழக்கும் விசாரணையும் நடந்து வருகிறது.

ஆனால், தனது குடும்பத்தின் சொந்த ஆதாயத்திற்காகக் கடன் கொடுத்த சாந்தா கோச்சார் மீது ரிசர்வ் வங்கியோ, நிதி அமைச்சகமோ, புலன் விசாரணை அமைப்புகளோ எந்தவொரு விசாரணையும் இதுவரை நடத்தவில்லை.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிர்வாகமோ சாந்தா கோச்சாருக்கு அப்பழுக்கற்றவர் எனச் சான்றிதழ் வழங்கிவிட்டது. அவருக்குப் பணி நீட்டிப்பு கிடைக்காது என்றொரு செய்தி வதந்தியாக உலா வருகிறது. சொந்த ஆதாயத்திற்காக வங்கிப் பணத்தை எடுத்துச் சூறைவிட்டவருக்குக் கிடைக்கவிருக்கும் ‘‘தண்டனை” மரியாதைக்குரிய பணி ஓய்வு.

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்தத் தயங்காத ஊடகங்களும், பொருளாதார நிபுணர்களும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சாந்தா கோச்சார் குடும்பம் நடத்திய மோசடி குறித்து மூச்சுகூட விடவில்லை.

திருடனைத் தேள் கொட்டினால், வாயைத் திறந்து கத்தவா முடியும்?

வங்கிகள் பொதுத்துறையாக இருக்கும் வரைதான் அவற்றின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி கேட்க வாய்ப்புண்டு. அவற்றைத் தனியாரிடம் தூக்கிக் கொடுத்துவிட்டால் கேள்விக்கிடமற்ற கொள்ளைதான் நடக்கும் என்பதை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சாந்தா கோச்சார் வீடியோகான் கூட்டணி நடத்தியிருக்கும் கொள்ளை எடுத்துக்காட்டிவிட்டது.

-ஆர்.ஆர்.டி.

-புதிய ஜனநாயகம் மே 2018