privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநேரலைமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog

மே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog

மே 22 அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டால் உறைந்து போயிருக்கும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பலர் போராடுகிறார்கள். அதை பின்தொடர்கிறது இன்றைய நேரலைப் பதிவு!

-

நேற்று மே 22, 2018 அன்று தூத்துக்குடி நகரமே மரண ஓலத்தில் அலறியது. ஸ்டெர்லைட்டை மூடு என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள். இந்த போராட்டத்தை அவர்கள் ரகசியமாக நடத்தவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பே அறவித்து விட்டார்கள். திங்கள் மே 21 அன்று மாலை 144 தடை உத்திரவை பிறப்பிக்கிறார் மாவட்ட ஆட்சியர். மறுநாள் அவர் கோவில்பட்டிற்கு ஜமாபந்தியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். தூத்துக்குடியில் ஒரு நீரோ மன்னன்!

இந்தி மொழி மட்டுமே அறிந்த காவல் துறை உயர் அதிகாரியின் தலைமையல் போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகையை அனுமதித்திருந்தால் மக்கள் அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தியிருப்பார்கள். ஆனால் வேதாந்தா முதலாளியின் சொத்துரிமையை அதாவது மக்கள் மரணத்தை பணயமாக்கி ‘தொழில்’ செய்யும் உரிமையை எப்பாடு பட்டாவது காப்பாற்ற நினைத்த எடப்பாடி அரசு, போலீசு எனும் வெறிபிடித்த விலங்குகளை ஏவிவியது. அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்ற உத்தரவுடன் ஆங்காங்கே மக்களை தடுத்தும், அடித்தும், கண்ணீர் குண்டு வீசியும் கலைக்க முயன்றது போலீசு.

அமைதியாக வந்து கொண்டிருந்த மக்களை சீண்டியதோடு, தற்காப்பு நிலைக்குத் தள்ளியது போலீசு. சில வாகனங்கள் எரிக்கப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அவ்வளவுதான். இதைத்தான் வன்முறை, தீவிரவாதிகள் ஊடுருவிட்டார்கள் என அரசும், போலீசும், ஊடகங்களும், அதிமுக – பா.ஜ.கவினரும் அதிகாரத் திமிருடன் பிரச்சாரம் செயகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிய பல்லாயிரக்கணக்கான மக்கள், இவர்கள் சொல்வது போல வன்முறையை மேற்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? அதனால்தான்  ஒரு போலீசுக்காரருக்கோ இல்லை ஒரு அரசு ஊழியருக்கோ குறிப்பிட்டுச் சொல்லும்படி காயமோ, அடியோ இல்லை.

மனுக்கொடுத்து, மன்றாடி தமது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனும் போது இயல்பாகவே மக்கள் ஸ்டெர்லைட்டை மூடும் வரை போராடுவோம், முற்றுகையிடுவோம் என்று முடிவு செய்ததற்கு காரணம் இந்த அரசுதான். இதில் என்ன தீவிரவாதம் இருக்கிறது, அல்லது ‘வெளி நபர்கள்’ வந்து மக்களை மாற்றி விடுவதற்கு?

நேற்று நடந்த போலீசின் கொலைவெறித் தாக்குதலில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வாயிலும், நெஞ்சிலும், தலையிலும் குண்டடிபட்டுச் செத்தனர் மக்கள். அதில் 17 வயது மாணவியும் உண்டு. இன்று அவரது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வருகிறது. அதற்குள் அவரது வாழ்வை முடித்து விட்டார்கள், அரச பயங்கரவாதிகள்!

மருத்துவமனையில் இருப்போரில் படுகாயமடைந்தோரின் நிலையைப் பார்த்தால் பலி எண்ணிகை கூடுமென்கிறார்கள். இதற்குள் கையில் கிடைப்போரை கைது செய்து வழக்குப் போட்டு சிறையில் அடைக்கிறது போலீசு. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் போராடுபவர்களையும் அப்படி கைது செய்கிறார்கள். சென்னையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 36 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலண்டனில் இருக்கும் வேதாந்தா தலைமை நிலையத்திலேயே இந்தப் படுகொலையை கண்டித்து தமிழ் மக்கள் போராடியிருக்கிறார்கள். இன்றும் பல இடங்களில் தூத்துக்குடியில் நடைபெற்ற அரச பயங்கரவாதத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. தூத்துக்குடியில் கடையடைப்பு நடைபெறுகிறது. எமது செய்தியாளர்களின் நேரடி தகவல்களோடும் சமூகவலைத்தளங்களின் செய்திகளோடும் இன்றைய நேரலையை துவங்குகிறோம்.

தூத்துக்குடி மக்களுக்கு தோள் கொடுப்போம்! ஸ்டெர்லெட்டை மூடுவோம்! அரச பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

#Sterlite #BanSterlite #SterliteProtest #SterliteProtestMay22nd2018 #Thoothukudi
#SaveThoothukkudi #PoliceAtrocities #ThoothukudiMassacre #StateTerrorism