Friday, May 2, 2025
முகப்புசெய்திதமிழ்நாடுதூத்துக்குடி : பு.இ.மு தோழர்கள் - ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினரைக் கடத்திக் கைது செய்கிறது போலீசு...

தூத்துக்குடி : பு.இ.மு தோழர்கள் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினரைக் கடத்திக் கைது செய்கிறது போலீசு !

துப்பாக்கிச் சூட்டின் மூலம் 'அமைதியை நிலைநாட்ட' நினைத்தது அரசு அது முடியவில்லை. தற்போது கைதுகள் மூலம் 'அமைதியை' நிலைநாட்டப் பார்கிறார்கள்.

-

“தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது” என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முதல் அ.தி.மு.க அமைச்சர்கள் வரை பலரும் சொல்லி வருகின்றனர். அவர்கள் நடத்தும் மோசடி நாடகத்தை ஊடகங்களும் வாந்தி எடுத்து வருகின்றன.

உண்மையில் தூத்துக்குடியில் என்ன நடக்கிறது? போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை வீடு வீடாக சென்று கைது செய்து வருகிறது போலீசு. அதற்கு தகுந்தார் போல் FIR-ல் “அடையாளம் காணத்தக்க நபர்கள்” என குறிப்பிட்டிருப்பதன் மூலம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் போராட்டத்தின் முன்னணியாளர்களை ஒடுக்கப் பார்க்கிறது.

இந்த பாசிச நடவடிக்கையின் நீட்சியாக தூத்துக்குடி சில்வர் புரம் பகுதியைச் சார்ந்த மக்கள் கூட்டமைப்பின் முன்னணியாளர்கள் கார்த்திக் மற்றும் அருள் ஆகிய இருவரை வீடு புகுந்து கைது செய்துள்ளது போலீசு.

அராஜகத்தின் உச்சமாக துப்பாக்கிச்சூட்டில் பலியான பு.இ.மு. அமைப்பை சேர்ந்த தோழர் தமிழரசனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லப்போன அவரது சக தோழர்கள் முருகன், மணி, சமயன், கோவேந்தன் மற்றும் நன்னி பெருமாள் ஆகியோரையும், உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் முனியசாமி, கணேசன் மற்றும் வழக்கறிஞர் சரவணன் ஆகியோரை நேற்று நள்ளிரவு தாக்கி கைது செய்துள்ளது போலீசு. மீண்டும் இன்று காலை (01.06.2018) தமிழரசனின் வீட்டிற்கு வந்து மிரட்டிச் சென்றுள்ளது. தற்போது அவர்கள் எந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரத்தைக் கூட வெளியிட மறுக்கிறது போலீசு.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாரை குற்றவாளிகள் போல கண்காணிப்பது, உடலை வாங்கச் சொல்லி மிரட்டுவது என அரசின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்கிறது. போலீசின் மிரட்டல்களைத் தொடர்ந்து ஒரு சிலர் உடல்களை வாங்கிவிட்டனர்.

இருந்தாலும் பலர் உடல்களை வாங்க மறுத்து போராடி வருகின்றனர். தங்கள் கோரிக்கையாக “உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும், அப்போது பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பில் ஒரு மருத்துவர் உடன் இருக்க வேண்டும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இறந்தவர்களுக்கு தூத்துக்குடி பகுதியில் நினைவிடம் அமைக்க வேண்டும்.” அதுவரை அவர்களது உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என வழக்கு தொடுத்து போராடுகின்றனர். இவை இந்த அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது அதனால் தான் இந்த மிரட்டல் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

துப்பாக்கிச் சூட்டின் மூலம் ‘அமைதியை நிலைநாட்ட’ நினைத்தது அரசு. அது முடியவில்லை என்பதால் தற்போது கைதுகள் மூலம் ‘அமைதியை’ நிலைநாட்டப் பார்கிறார்கள்.

– வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க