புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவரும், கோவை மாவட்டத் தலைவருமான தோழர். விளவை இராமசாமி அவர்கள் 11.06.2019 அன்று காலை அவரது இல்லத்தில் காலமானார்.

1980-களிலேயே மாற்று அரசியலை முன்னெடுத்துக் களமாடியவர். தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஒரு தொழிலாளியாக பணியாற்றி, தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தார். புரட்சிகர அரசியலில் ஈர்க்கப்பட்டு பின்னர் தன்னை பு.ஜ.தொ.மு.வுடன் இணைத்தார்.

தோழர் விளவை இராமசாமி அவர்கள் ஒரு சிறந்த மார்க்சியவாதி. பரந்து, விரிந்த அரசியல் கருத்துடையவர். சங்கம் ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு மில் கேட்டிலும் போய் நின்று தொழிலாளர்களிடையே சங்கமாக இணைவதன் அவசியத்தைப் பேசுவார்.

தொழிலாளர்களின் சட்டம் குறித்து மிகுந்த அறிவுடையவர். NTC தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற தொழிற்சங்க தலைமைகள் போலல்லாது பொருளாதாரத்தை தத்துவதோடு இணைத்துப் பணியாற்றியவர். தொழிலாளர்கள் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளோடு மட்டும் நின்று விடாமல் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கி செயலாற்றவேண்டும்,  அதற்காக மார்க்சிய  ஆசான்களிடமிருந்தும், களப்போராட்டத்திலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர்.

தோழர்களின் குறைகளை தயவு தாட்சணியமின்றி விமர்சிக்கக்கூடியவர். அதேசமயம் மென்மையாகவும்; இணக்கமாகவும்; தோழர்களை விட்டுக்கொடுக்காமலும் பேசக்கூடியவர். தலைவர் என்ற இறுமாப்பு கொஞ்சம் கூட கொள்ளாதவர். பல முதலாளிகளுக்கும், நிர்வாகிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதற்காக குண்டர் சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர். தொழிலாளர் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை சென்றவர்.

கம்யூனிஸ்டுகள் மனிதகுல விடுதலைக்காக பல தத்துவங்களையும், விசயங்களையும் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்பார். NTC, CRI Pumps, GTN, SRI போன்ற பல நிறுவனங்களில் பு.ஜ.தொ.மு. சங்கத்தை நிறுவினார். தொழிலாளர்கள் சங்கத்திலிருந்து விலகிச்சென்றாலும் இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடியவர்.

சங்கத்தின் மூலமாக பல நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சட்டப்படியே கிடைக்கவேண்டிய பல சலுகைகளை பெற்றுத்தந்தவர். தொழிலாளர்களுக்கு துணிவும், அரசியலுணர்வும், நிர்வாகத்தின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வழிமுறைகளையும், ஆற்றலையும் கற்றுத் தந்தவர்.

தனது குடும்ப வாழ்விலும், அரசியல் வாழ்விலும் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாதவர். வழக்கு, கைது, சிறைக்கு அஞ்சாதவர். தொழிலாளர் வர்க்க விடுதலையை தனது இறுதி நாள்வரை முன்னெடுத்துச் சென்றவர்.

அரசியல் வாழ்க்கையில் மட்டும் தோழர் போராடவில்லை, தனது மரணத்தோடும் அவர்  இறுதிவரை போராடினார். மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு ஏறக்குறைய 2  ஆண்டுகளாக போராடிவந்தார். நோயிலிருந்து படிப்படியாகத் தேறிவந்த வேளையில் எதிர்பாராதவிதமாக 11.06.2019 அன்று காலையில் மரணமடைந்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பாசிசம் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் இவ்வேளையில் ஒரு மிகச்சிறந்த போர்வீரனை இழந்திருக்கிறோம். ஆனாலும், தொழிலாளிகளின் விடுதலை என்ற தோழரின் இலட்சியத்தை என்றும் நெஞ்சில் ஏந்தி இன்னும் வேகமாக செயல்படுவோம்.

தோழரின் இரங்கல் கூட்டத்தில் பல்வேறு தொழிற்சங்க தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், மக்கள் அதிகாரம், ம.க.இ.க. தோழர்களும், உறவினர்களும், நண்பர்களும் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான வர்க்க உணர்வூட்டப்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு : 95974 22584.