Thursday, May 1, 2025
முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !

காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !

ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகராஜா ஹரிசிங் மருத்துவமனையில் மட்டும் இதுவரையில் இருபதுக்கும் மேற்பட்டோர், பெல்லட் குண்டடிபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

-

காஷ்மீரில் சரத்து 370, 35A ஆகியவற்றை நீக்குவதாக கடந்த 05-08-2019 அன்று மோடி அரசு அறிவித்த பின்னர் மூன்று நாட்களில் மட்டும் குறைந்தபட்சம் 21 இளைஞர்களும், சிறுவர்களும் ஸ்ரீநகரின் பிரதான மருத்துவமனையில் பெல்லட் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மோடி அரசு சரத்து 370, 35A –வை ரத்து செய்வதற்கு காஷ்மீரை மாநிலத் தகுதியில் இருந்து நீக்கி ஐக்கியப் பிரதேசமாக அறிவித்து முன்பேயே காஷ்மீரில் படையணிகளைக் குவித்து வைத்து அங்கு அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தியிருந்தது. அங்கு தொலைதொடர்பு, இணையம் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடந்த 05-08-2019 அன்று நாடாளுமன்றத்தில் இச்சட்டம் சதித்தனமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.

ஆனால் மத்திய அரசும், அதற்கு ஆமாம் சாமி போடும் ஊடகங்களும், காஷ்மீர் மக்கள் இந்த அறிவிப்பைக் கொண்டாடுகிறார்கள் என்றும், அங்கு அமைதி நிலவுவதாகவும் கட்டுக்கதைகளைப் பரப்பி வந்த நிலையில், ஆகஸ்டு 8-ம் தேதி முதல் படிப்படியாக மக்கள் போராட்டங்களும், அரசு வன்முறைகளும் தெரியவந்தன. இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு தி வயர் இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் அங்கு சென்று அச்சூழல் குறித்து எழுதியுள்ளார்.

“நான் டில்லியிலிருந்து வரும் யாரிடமும் பேசத் தயாராயில்லை. பேசுவதால் என்ன பயன்? உங்களில் யாராவது நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைக் கேட்கவாவது தயாராக இருக்கிறீர்களா?”

அவர் கொடுத்துள்ள தகவலின் படி ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகராஜா ஹரிசிங் மருத்துவமனையில் (SMHS Hospital) கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியன்று மட்டும் சுமார் 13 பேர் பெல்லட் குண்டடிபட்டு அனுமதிக்கப்பட்டதாகவும், மறுநாளான ஆகஸ்ட் 7-ம் தேதியன்று மேலும் எட்டு பேர் பெல்லட் குண்டடிபட்டு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மருத்துவமனை நிர்வாகம் தர மறுத்துவிட்டாலும், அங்கிருக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் இத்தகவலை கொடுத்திருக்கின்றனர்.

பெல்லட் குண்டுத் தாக்குதல்களால் சிலருக்கு ஒரு கண் பார்வை முழுமையாகப் போய்விட்டது என்றும், சிலருக்கு இரண்டு கண்களும் சரிபடுத்தப்பட முடியாத பிரச்சினைகளோடு அபாய கட்டத்தில் இருக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வயர் இணையதளத்தைச் சேர்ந்தவர்கள் பெல்லட் குண்டுகளால் காயமுற்றவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசியதில் சிலர், தாங்கள் நகர்ப்பகுதியில் போராட்டம் நடத்திய போது சுடப்பட்டதாகவும், சிலர் ஏதுவும் செய்யாமல் இருந்த போதே பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு பிரிவு ஊடகங்கள் காஷ்மீரில் அமைதி நிலவுவதாகக் கூறுகையில் அங்கிருக்கும் யதார்த்த நிலை நேர்மாறானதாக இருக்கிறது. சரத்து 370, 35A நீக்கம் குறித்த மோடி அரசாங்கத்தின் அறிவிப்புக்குப் பின்னர் அங்கு நிச்சயமற்ற நிலையே நீடிக்கிறது என்பதை இந்த பெல்லட் குண்டுக் காயங்கள் உறுதிபடுத்துகின்றன.

ஸ்ரீநகரில் உள்ள நடிபொரா பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவர் நதீம், தனது சக நண்பனுடன் டியூசன் முடித்து விட்டு வீடு திரும்புகையில் பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது வலதுகண் பார்வை பறிபோய்விட்டது.

கன்ந்தெர்பாலைச் சேர்ந்த இரண்டுபேர் அங்கு சிகிச்சை பெற்றுவந்தனர். அதில் ஒரு  இளைஞர் பேக்கரியில் பணிபுரிபவர். “நான் டில்லியிலிருந்து வரும் யாரிடமும் பேசத் தயாராயில்லை. பேசுவதால் என்ன பயன்? உங்களில் யாராவது நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைக் கேட்கவாவது தயாராக இருக்கிறீர்களா?” என்று கடும் கோபத்துடன் பேச மறுத்துள்ளார்.

எனக்கு சரத்து 370, 35A ஆகியவற்றில் அமித்ஷா என்ன செய்தார் என்பது தெரியாது. ஆனால் அவர் செய்ததெல்லாம், தந்தையிடமிருந்து மகனையும், கணவனிடமிருந்து மனைவியையும், சகோதரனிடமிருந்து சகோதரியையும் பிரித்துள்ளார்.

அந்த இருவரில் மற்றொருவர் நடந்த சம்பவங்களைக் கூறினார். “பேக்கரியில் ரொட்டி சுட்டுக் கொண்டு இருந்தோம். அப்போது வந்த படையினர், ‘காஷ்மீரிகளுக்கு ரொட்டி செய்து தரப் போகிறீர்களா? அவர்களுக்கு விசம்தான் தரவேண்டும்” என்று சொல்லி, கடைக்குள் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.” என்றார்.

இந்த சம்பவத்தை உறுதி செய்ய முடிகிறதோ இல்லையோ, ஆனால் பெல்லட் குண்டுகளால் இவர்கள் சுடப்பட்டார்கள் என்பதும் காஷ்மீரிகள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

பெல்லட் குண்டுதாக்குதலில் காயமடைந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், தங்களுக்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழி ஏதும் தெரியவில்லை என்கிறார்.

படிக்க:
Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !
ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !

ஒரு இளைஞரின் தந்தை கூறுகையில், “ எனக்கு சரத்து 370, 35A ஆகியவற்றில் அமித்ஷா என்ன செய்தார் என்பது தெரியாது. ஆனால் அவர் செய்ததெல்லாம், தந்தையிடமிருந்து மகனையும், கணவனிடமிருந்து மனைவியையும், சகோதரனிடமிருந்து சகோதரியையும் பிரித்துள்ளார். எங்களுக்கு எங்களது தாயாரும், சகோதரியும் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது. அவர் இணையத்தை முடக்கி வைத்திருந்தால் கூட செய்யட்டும். ஆனால் தொலைபேசி இணைப்புகளை முடக்கியிருக்கக் கூடாது. இது சியோனிஸ்டுகள் (இஸ்ரேலியர்கள்) செய்யக்கூடிய காரியம். அமித்ஷா ஒரு அசலான இந்து அல்ல. ஏனெனில் ஒரு இந்து இவ்வாறு செய்யவே மாட்டார். அமித்ஷா ஒரு சியோனிஸ்டைப் போல நடந்து கொள்கிறார். “ என்றார்.

காஷ்மீரில் ஸ்ரீநகரில் ஒரு மருத்துவமனையிலேயே இத்தனை தாக்குதல் சம்பவங்கள் பற்றிய தரவுகள் இருக்கையில், மொத்த காஷ்மீரிலும் எத்தனை தாக்குதல் சம்பவங்கள், எத்தனைக் கொலைகள் நடந்தன என்பது குறித்து இன்று வரை யாருக்கும் தெரியாது. அது வெளியே வரக்கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது.

நந்தன்
நன்றி : the wire