முகப்புசெய்திஇந்தியாரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !

ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !

ஆளும்உத்தி என்ற பெயரில் ரவுடித்தனம் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எவ்விலை கொடுத்தேனும் அதிகாரத்தில் உள்ள குண்டர்களை நாம் எதிர்கொண்டு வீழ்த்தவேண்டும்.

-

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலை நரேந்திர மோடியின் ஒப்புதலுடன்தான் நடந்தது என்று அம்பலப்படுத்திய குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு 30 ஆண்டு பழமையான வழக்கில், கடந்த ஜூன் மாதத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சஞ்சீவ் பட், சிறையில் இருந்து தனது மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடிதத்தைத் தொடங்குகையிலேயே கடிதம் எழுதப்பட்ட இடம் மற்றும் நாள் குறித்து எழுதுவதிலேயே தனது சூழலை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

இடம் : இருளின் இதயத்திலிருந்து
நாள்: போர்க்களத்தில் மற்றுமொரு நாள்

அக்கடிதத்தில் தமது இலட்சியத்திற்கு உறுதுணையாக நின்ற தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ள சஞ்சீவ்பட், தவறுகளுக்கு எதிரான தனது நேர்மையான நிலைக்கும், தனது இலட்சத்திற்கும் எரிபொருளாய் இருந்த தனது மனைவி ஸ்வேதாவை தனது பலம் என விளிக்கிறார்.

மேலும் தனது மனைவியிடம் சில நிகழ்வுகளை நினைவுகூர்கிறார். “கடந்த ஓராண்டு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கடினமானதாக இருந்திருக்கிறது.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பழிவாங்கும் விதமாக நமது சட்டப்பூர்வமாக கட்டப்பட்ட நமது வீட்டின் பகுதிகளை சட்டவிரோதமாக இடிப்பதை தடுப்பதற்குக்கூட வாய்ப்புத்தராமல் வீட்டின் பகுதிகளை அரசு இடித்ததில் இருந்து தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட சாட்சியங்களைக் கொண்டு 24 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் நான் கைது செய்யப்பட்டேன். விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்ட தடா கைதி ஒருவர் 18 நாட்கள் கழித்து மரணமடைந்த 29 ஆண்டுகள் பழமையான வழக்கில் அநியாயமாக தண்டனை வழங்கப்பட்டது.

இந்த துன்பகாலங்களில் எல்லாம் தன்னந்தனியாக அனைத்தையும் கருணையுடனும் மனோபலத்துடனும் நீ எதிர்கொண்டாய். உனது பலம், தைரியம், உறுதி மற்றும் அநியாயத்திற்கெதிராக நிற்கவும் போரிடவும் கொண்ட பற்றுறுதி ஆகியவற்றை ஒட்டுமொத்த நாடே பார்த்தது.

ஒன்றுகுவிக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட வன்முறைகளின் பிரதிநிதியாக அரசு நிற்பது ஒவ்வொரு நாளும் அதிக வெளிப்படையாகத் தெரியும் நிலைக்கு இன்று இந்தியா வந்தடைந்துள்ளது. ரவுடித்தனமே ஆளும்உத்தி என்ற அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது. ஜனநாயகத்தின் கண்காணிப்பாளர்கள் என்று சொல்லப்படும் நிறுவனங்கள் அனைத்தும் பயந்து பணிந்திருப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன.  ஜனநாயக நிறுவனங்களை வலுவற்றதாகச் செய்யும், கட்டமைப்புக் கவிழ்ப்புக் காலகட்டத்தில், எந்த ஒரு நிறுவனமும், அமைப்பும் பாதுகாப்பானதாக இல்லை.

நமது நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தும் வெளிப்படையாகத் தீர்ப்பளிக்கின்றன. ஆனால் அத்தீர்ப்புகளின் சூத்திரத்தில் உண்மையும் நீதியும் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அநியாயத்திற்கு எதிராக நிற்பதையும், சண்டையிடுவதையும் நீ தெரிவு செய்திருக்கிறாய். ஒரு பெரும் விலையைக் கொடுக்க வேண்டிய தெரிவு இது. உனது இந்த முன்னுதாரணமிக்க தைரியம் கண்டிப்பாக பலருடைய முதுகெலும்பையும் நேர்ப்படுத்தும். இத்தகைய இருண்ட காலத்தில் உனது போர்க்குணமிக்க போராட்டம், நம்பிக்கையின் கலங்கரை விளக்காக அமையும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அநியாயத்திற்கு எதிராக நிற்பதையும், சண்டையிடுவதையும் நீ தெரிவு செய்திருக்கிறாய். ஒரு பெரும் விலையைக் கொடுக்க வேண்டிய தெரிவு இது. உனது இந்த முன்னுதாரணமிக்க தைரியம் கண்டிப்பாக பலருடைய முதுகெலும்பையும் நேர்ப்படுத்தும். இத்தகைய இருண்ட காலத்தில் உனது போர்க்குணமிக்க போராட்டம், நம்பிக்கையின் கலங்கரை விளக்காக அமையும்.

அக்கடிதத்தில் தனக்கு ஆதரவாக நிற்கும் தனது நண்பர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எழுதுகையில், “இறுதியாக, இந்த இருண்டகாலத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உறுதுணையாக இருந்த தைரியமான நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது மனைவி ஸ்வேதாவிற்கு தேவையான பலத்தை நீங்கள் அளித்துள்ளீர்கள். அவருக்கு உங்களில் ஒவ்வொருவரும் தைரியத்தை வழங்கியிருக்கிறீர்கள்.

நண்பர்களே, இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இன்று நாம் எடுக்கும் முடிவுகள், அடுத்த சில பத்தாண்டுகளுக்கான நமது தலையெழுத்தை தீர்மானிக்கப்போகிறது. நாம் பார்வையாளர்களாகவே இனியும் தொடர்ந்து நீடிக்க முடியாது. நாம் போரில் இறங்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். அரசியல் என்பது பார்வையாளர் விளையாட்டு அல்ல. நாம் அரசியலைத் தவிர்க்கலாம்; ஆனால் அரசியல் நம்மைத் தவிர்க்காது. நாம் இந்த குண்டர்களை அனைத்து மட்டங்களிலும் எதிர்கொள்ள உறுதியெடுக்க வேண்டும். ஆளும்உத்தி என்ற பெயரில் ரவுடித்தனம் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எவ்விலை கொடுத்தேனும் அதிகாரத்தில் உள்ள குண்டர்களை நாம் எதிர்கொண்டு வீழ்த்தவேண்டும். கடினமான தெரிவுகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது இருக்கலாம். ஆனால் இறுதியில் நாம் தேர்ந்தெடுக்கும் தெரிவுகளின் விளைவை சந்திக்கப் போவது நாம்தான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “உங்களையும் என்னையும் போன்றவர்கள், நாம் கொண்ட நம்பிக்கையை சாதிக்க துணிந்து முடிவெடுக்கத் தயங்கினால் எதுவும் எப்போதும் மாறப் போவதில்லை. நாம் உண்மையைக் கண்டபின் அதற்காக குரல் கொடுக்காமல் விலகிச் செல்லும் ஒவ்வொருமுறையும் நாம் படிப்படியாக மரித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் இந்த குண்டர்களை அனைத்து மட்டங்களிலும் எதிர்கொள்ள உறுதியெடுக்க வேண்டும். ஆளும்உத்தி என்ற பெயரில் ரவுடித்தனம் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எவ்விலை கொடுத்தேனும் அதிகாரத்தில் உள்ள குண்டர்களை நாம் எதிர்கொண்டு வீழ்த்தவேண்டும்.

நல்லவர்கள் தங்களால் செய்யக் கூடியவற்றையும் செய்யாமல் ஒதுங்கி நிற்பதுதான், தீயவை மிக ஆழமாக வேரூன்றுவதற்கான அடிப்படைத் தேவையாக அமைகிறது. தீயவற்றையும் அநியாயத்தையும் எதிர்த்து நிற்க வேண்டியது கட்டாயமல்ல என்று கருதினால், நாம் ஒரு ஜனநாயக நாடாக நிலைத்து நிற்பதும் கட்டாயமல்ல என்பதே எதார்த்தமாகும். சரியானதைத் தேர்ந்தெடுக்கும் அறிவையும் தைரியத்தையும் நாம் காண்போம் என நம்புகிறேன்.

படிக்க:
காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை !

நண்பர்களே, இந்திய ஜனநாயகம் பல்வேறு வழிகளிலும் அஸ்தனமத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் உங்களைப் போன்றவர்களால், இந்தியா தப்புவதற்கும் இன்னும் வாய்ப்பிருக்கிறது. தீய சக்திகளை எதிர்ப்பது என்று பார்க்கையில் நமது ஒவ்வொரு எதிர்ப்பு நடவடிக்கையும் குறிப்பிடத்தக்கதே, நமது ஒவ்வொரு சண்டையும் மிகப்பெரியதே. மிகப்பெரும் பனிச்சரிவுகள் அனைத்தும் சிறுசிறு பனித்துகள்களால்தான் ஏற்படுகின்றன. நம்மால் எதிர்க்க முடியும், நம்மால் சண்டையிட முடியும், நம்மால் அனைத்திலிருந்தும் மீள முடியும். அது உறுதி …” என்கிறார் சஞ்சீவ் பட்.

சஞ்சீவ் பட்டின் இந்தக் கடிதம் நாட்டின் இன்றைய யதார்த்த சூழலையும், நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் உணர்த்துகிறது. மொத்த சமூகமும் விழித்துக் கொள்ளவேண்டிய நேரம் இது !

சுருக்கப்பட்ட தமிழாக்கம: நந்தன்
நன்றி : nationalheraldindia

  1. தங்கள் துறையின் மறுசீரமைப்பைப் பற்றிய கவலையின்றி, மாணவர்கட்கு சுயமுன்னேற்றத்தை நடப்பு சமூக அவலங்களிலிருந்து பிரித்துத் தரும் ஓய்வு பெற்ற காவலர்கள்,
    தண்டிக்கும் அதிகாரத்தை நீதிமன்றத்திலிருந்து கைப்பற்றும் பணியிலுள்ளோர் மத்தியில் பட் ஒரு மக்கள் காவலர். விழுமியங்கள் என்றவொன்று இன்று இல்லை என்று உணர்த்திய நேர்மையாளர்.
    இவரும் பேரா.சாய்பாபாவும் நாடு விடுதலை பெறுவதற்குப் போராடியவர்களை நினைவூட்டுகின்றனர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க