குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (19-12-2019) நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு மோடி அமித்ஷா கும்பலின் பாசிச சட்டத்திற்கு எதிராக தங்களது குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இன்று காலையில் அனைத்து இந்திய மாணவர் கழகம் (AISA) மற்றும் ஸ்வராஜ் அபியான் – இரண்டு அமைப்பினரும் இணைந்து டில்லி செங்கோட்டை அருகே போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து டில்லி செங்கோட்டையில் போலீசைக் குவித்தது மத்திய அரசு. அப்பகுதியில் 144 தடை உத்தரவையும் அமல்படுத்தியது. அதையும் மீறி மாணவர்கள், இளைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் டில்லி செங்கோட்டை அருகே குவியத் தொடங்கினர்.
படிக்க :
♦ முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !
காலை 11 மணியளவில் திட்டமிடப்பட்ட இந்த போராட்டத்தை முடக்க ஸ்வராஜ் அபியான் அமைப்பின் நிறுவனர் யோகேந்திர யாதவைக் கைது செய்தது. மேலும் டில்லியில் உள்ள பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களையும் மூடியது மத்திய அரசு. இதன் மூலம் போராட்டக்காரர்கள் செங்கோட்டையை அடைய முடியாது எனக் கனவு கண்டது. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்தலாம் என்ற அடிமுட்டாள் சிந்தனையில் மண்ணை அள்ளிப் போட்டனர் போராட்டக்காரர்கள்.
மேலும், செங்கோட்டைப் பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களை முடக்கச் சொல்லி ஏர்டெல், வோடபோன், உள்ளிட்ட அனைத்து செல்போன் நிறுவனங்களுகும் உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் செல்பேசி, இணைய இணைப்புகள் தடைபட்டுள்ளன. இதனை வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் உறுதி செய்துள்ளன.
ஜியோவிற்கு ஒருதலைப்பட்சமாக சாதகமாக நடந்து வந்த மோடி கும்பலை ‘போட்டுப் பார்க்க’ இதை ஒரு வாய்ப்பாக ஏர்டெல் நிறுவனமும், வோடபோன் நிறுவனமும் பயன்படுத்திக் கொண்டதைப் போலவே அவர்களது சமூக வலைத்தள அறிவிப்பு இருந்தது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கூறுகையில், “அரசாங்கத்தின் உத்தரவுக்கு நிறுவனம் கட்டுப்பட்டது” என்று மறைமுகமாக போட்டுக் கொடுத்தார்.
டில்லி செங்கோட்டையில் கூடிய போராட்டக்காரர்கள், அப்பகுதியில் உள்ள ஷஹீத் பூங்காவை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை இடையில் தடுத்த போலீசு, அவர்களை டில்லியில் போராட்டங்களுக்காகவே ஒதுக்கப்பட்ட பகுதியான ஜந்தர் மந்தருக்கு திருப்பிவிட்டது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்கட்சித் தலைவர்களையும் ஆங்காங்கே கைது செய்து கொண்டிருந்தது போலீசு.. சமூகச் செயற்பாட்டாளர் ஹர்ஷ்மந்தர் , வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோரையும், போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களையும் கைது செய்தது. இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜே.என்.யூ ஆய்வு மாணவரும் செயற்பாட்டாளருமான உமர் காலித்தைக் கைது செய்தது போலீசு. டில்லியின் புறநகர்ப் பகுதியான குர்கானிலிரிந்து டில்லிக்கு வரும் பாதையை நிரந்தரமாக மூடியதால், இன்று காலையில் டில்லி – குர்கான் எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதன் பின்னர் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் எழுத்தாளர் அருந்ததிராய் கலந்து கொண்டார். இந்தப் போராட்டம் குறித்து அருந்ததிராய் பேசுகையில், “இந்தியாவே எழுந்து நிற்கிறது. இந்த அரசாங்கம் அம்பலப்பட்டும், அசிங்கப்பட்டும் நிற்கிறது. அன்பும் ஒற்றுமை உணர்வும் இணைந்து பாசிசத்தையும், சகிப்பின்மையையும் வீழ்த்தியிருக்கும் நாள் இது” என்று கூறினார்.
மேலும் இதுகுறித்துக் கூறுகையில், “அரசியல்சாசன விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிரான போராட்டத்தில் ஒவ்வொருவரும் இணைந்துள்ளனர். நாங்கள் – தலித்துகள், முஸ்லீம்கள், இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், ஆதிவாசிகள், மார்க்சியவாதிகள், அம்பேத்கரியர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் மற்றும் பேரதிகமான மாணவர்களாகிய நாங்கள்தான் – இந்த நாட்டின் எதிர்காலம். இந்த முறை உங்களால் எங்களை தடுத்து நிறுத்தமுடியாது” என்றார்.
டில்லியில் மட்டுமல்ல, ஹைதராபாத், பெங்களூரு, உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் 144 தடை உத்தரவு போட்டு போராட்டங்களை முடக்கி விடலாம் எனக் கனவு கண்டன மத்திய அரசும், காவிப் போலீசும். ஆனால் 144-வது ‘ஹைகோர்ட்டாவது’ என இந்தியா முழுவதும் வீதியில் களமிறங்கிவிட்டனர் மாணவர்களும், இளைஞர்களும் !!
நந்தன்
படிக்க : தி வயர்