Friday, May 2, 2025
முகப்புசெய்திஇந்தியாஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !

ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !

காவி குண்டர்களின் அட்டூழியங்கள் வீடியோ ஆதாரங்களாக சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பிறகு, போலீசார் இப்போது குண்டர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றனர்.

-

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போலீசுக்கும் மாணவர்களுக்குமான தாக்குதலாக பெரும்பாலான சமூகம் நம்பியது. போராட்டத்தை வீரியத்தோடு முன்னெடுக்கும் மாணவர்களை ஒடுக்க அரசு ஏவிவிட்டுள்ள குண்டர்படையே முதன்மையான காரணம் என ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூர கொலைவெறி தாக்குதல்கள் நிரூபித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதிக்குள் முகமூடி அணிந்து கைகளில் ஆயுதங்களை வைத்திருந்த குண்டர்படை நுழைந்து அங்கிருந்த மாணவர்கள், பேராசிரியர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியது.

இதில் மாணவர் சங்க தலைவர் ஐசே கோஷ், பேராசிரியர் சுசரிதா சென் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 23 பேர் படுகாயங்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர் சங்கம், இந்தத் தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யே காரணம் என குற்றம்சாட்டியுள்ளது.  அந்த அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் விடுதிக்குள் நுழைந்து சரமாரியாக தாக்கியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்கப்பட்ட மாணவர் சங்கத்தின் தலைவி ஐஷ்சே கோஷ் !

விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் பேரணியாகச் சென்றபோது, ஏபிவிபி குண்டர்கள் கற்களை வீசத்தொடங்கியதாக மாணவர்கள் கூறுகின்றனர்.  இந்தத் தாக்குதல்களை வளாகத்தில் இருந்த பாதுகாவலர்கள் தடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

நூறுக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த குண்டர்படை ‘பாரத் மாதா கி ஜெய்’ என கத்திக்கொண்டே ஜேஎன்யூ முதன்மை நுழைவாயில் அருகே கூடியதாகவும் திட்டமிட்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

’ஆர்.எஸ்.எஸ்.-ன் நண்பர்கள்’ என்கிற வாட்சப் குழுமத்தில் ஜேஎன்யூவில்  ‘இடது தீவிரவாத’த்தை எதிர்கொள்வது எப்படி என விவாதிக்கப்பட்டுள்ளதும் அதில் இடதுசாரி மாணவர்களை அடித்து நொறுக்குவதே அவர்களுக்கு தரப்படும் ஒரே மருந்து என காவிகள் பேசியுள்ளனர்.  வன்முறையை அரங்கேற்றும் முன் வாட்சபில் எழுதப்பட்டவை சமூக ஊடகங்களில் வெளியாகி, ஏபிவிபி-ன் திட்டத்தை அம்பலப்படுத்தின.

 

மாணவர்கள் மட்டுமல்லாது, ஜேஎன்யூ பொருளாதார துறை பேராசிரியர் ஜெயதி கோஷ் போன்றோர் வெளி ஆட்கள் ஆயுதங்களுடன் வளாகத்துக்கு வெளியே கட்டளைக்காக காத்திருந்ததாக தெரிவிக்கின்றனர்.

ஜேஎன்யூ பேராசிரியர் அதுல், மாணவர்களும் பேராசிரியர்களும் கற்களால் தாக்கப்பட்டதாக கூறுகிறார். “சிறிய கற்கள் அல்ல, ஒரே தாக்குதலில் மண்டை பிளக்கும் பெரிய கற்களால் எங்களை தாக்கினார்கள். தப்பித்து வெளியே வந்தபோது, என்னுடைய கார் உள்பட கார்கள் அனைத்தும் நொறுக்கப்பட்டிருந்தன” என்கிறார்.

கட்டளையை ஏற்று வளாகத்துக்குள் நுழைந்த குண்டர்படை, எதிரே வந்த மாணவர்கள், உணவருந்திக்கொண்டிருந்த மாணவர்கள், கண் பார்வை குறைபாடுள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளது. இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அடிபட்ட மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கச் சென்ற மருத்துவ குழுவினரின் வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, நொறுக்கியுள்ளது.

ஜாமியா, அலிகர் பல்கலைக்கழகங்களில் எதுவுமே செய்யாத மாணவர்களை அடித்து நொறுக்கிய போலீசு, ஜேஎன்யூவில் நடந்த தாக்குதலை கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்துள்ளது.

காவி குண்டர்களின் அட்டூழியங்கள் வீடியோ ஆதாரங்களாக சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பிறகு, வெளி சமூகம் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்திய பிறகு போலீசார் இப்போது குண்டர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றனர்.

உலக அளவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழக வளாகத்துக்குள் பயங்கரவாதிகளைப்போல நுழைந்து கொடூரமாக தாக்கும் துணிச்சல் ஆட்சி அதிகாரத்தின் ஆசிபெற்ற கும்பலாலேயே முடியும்.  மக்கள் போராட்டங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத பாசிஸ்டுகள் இப்போது தங்களது காவி குண்டர்களை களமிறக்கி இருக்கிறார்கள்.


கலைமதி

நன்றி :
ஸ்க்ரால், ஹஃபிங்டன் போஸ்ட்