Thursday, May 1, 2025
முகப்புசெய்திஉலகம்குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சியாட்டில் மாநகர கவுன்சில் தீர்மானம் !

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சியாட்டில் மாநகர கவுன்சில் தீர்மானம் !

இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் ஒரு ‘மக்கள் பிரதிநிதிகள் சபையில்’ தீர்மானம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறையாகும்.

-

ந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக அமெரிக்க நகரமான சியாட்டிலின் மாநகர கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு ‘மக்கள் பிரதிநிதிகள் சபையில்’ தீர்மானம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தத் தீர்மானம் இந்திய – அமெரிக்க கவுன்சிலின் உறுப்பினரான க்‌ஷாமா சாவந்த்தால் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீர்மானம், பாகுபாடுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இந்திய நாடாளுமன்றத்தை வலியுறுத்துகிறது. “இந்தத் தீர்மானம் அனைவரையும் வரவேற்கும் இடமாக சியாட்டில் மாநகர் இருக்கும் என்றும், சாதி மதம் கடந்து சியாட்டிலில் உள்ள தெற்காசிய சமூகத்தினரோடு சியாட்டில் நகரம் உறுதியாக நிற்கிறது என்றும் உறுதியளிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தத் தீர்மானத்தில், பாஜகவின் தீவிர வலதுசாரி அரசியல், பாகுபாடுமிக்கதாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, “பெரும்பாலான இந்தியர்கள் பிறப்புச் சான்று போன்ற ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றனர். நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை விரிவுபடுத்துவதானது, முசுலீம்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர், பெண்கள், பழங்குடியினர், LGBT சமூகத்தினர் உட்பட கோடிக்கணக்கானவர்களை தங்களது குடி உரிமையை இழக்கச் செய்யும்.” என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடி வரும் இந்திய – அமெரிக்கர் குழுக்கள் சியாட்டில் மாநகர கவுன்சிலின் இந்தத் தீர்மானத்தை பல வகைகளில் கொண்டாடுகின்றனர்.

சமத்துவ சோதனைகளம் என்ற தெற்காசிய மனித உரிமைகள் அமைப்பு சியாட்டில் கவுன்சிலின் இந்த தீர்மானத்திற்கும், சியாட்டில் நகர மக்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்மானம் அமெரிக்காவின் பிற நகரங்களுக்கு முன் மாதிரியாக இருப்பதாகவும், நாம் இனப் படுகொலையின் பக்கம் நிற்க மாட்டோம் என்பதைப் பறைச்சாற்றுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

படிக்க :
CAA –க்கு எதிராக மலெர்கொட்லா வீதிகளில் திரண்ட 20,000 பஞ்சாப் உழவர்களும் பெண்களும் !
எல்.ஐ.சி தனியார்மயம் : 1 லட்சம் ஊழியர்கள் வெளிநடப்புப் போராட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிராக உறுதியான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுப்பதை உறுதி செய்யும் நோக்குடன் பெரும் எண்ணிக்கையிலான இந்திய – அமெரிக்கர் குழுக்கள் பல்வேறு தளங்களை பயன்படுத்துகின்றனர்.

இதற்கு முன்னர் மோடியின் குஜராத் படுகொலைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட, “இனப்படுகொலைக்கு எதிரான கூட்டணி” எவ்வாறு அமெரிக்க காங்கிரசை மோடிக்கு விசா மறுக்கச் செய்ய நிர்பந்தித்ததோ, அது போன்றதொரு நிலைமை மீண்டும் எழுவதாக சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


நந்தன்
நன்றி :  தி வயர்.