Saturday, July 31, 2021
முகப்பு செய்தி இந்தியா எல்.ஐ.சி தனியார்மயம் : 1 லட்சம் ஊழியர்கள் வெளிநடப்புப் போராட்டம் !

எல்.ஐ.சி தனியார்மயம் : 1 லட்சம் ஊழியர்கள் வெளிநடப்புப் போராட்டம் !

எல்.ஐ.சி. தனியார்மயத்தைக் கண்டித்து சுமார் 1 லட்சம் பேர் இந்த வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-

ந்திய அரசு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக மோடி அரசு அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று சுமார் ஒரு லட்சம் எல்.ஐ.சி ஊழியர்கள் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்.ஐ.சி நிறுவன ஊழியர்களிடையே இயங்கிவரும் 13 தொழிலாளர் சங்கங்களும், 11 அலுவலர் சங்கங்களும் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த பிப்ரவரி 1, அன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்.ஐ.சி நிறுவனத்தில் அரசாங்கத்திடம் உள்ள 100% பங்குகளில் இருந்து ஒரு பகுதியை ஆரம்ப பொது விடுப்புகள் (IPO) மூலம் விற்கவுள்ளதாக அறிவித்தார்

இதனைக் கண்டித்துதான் இந்த வெளிநடப்புப் போராட்டம். கிட்டத்தட்ட 1 லட்சத்து 8 ஆயிரமாக இருக்கும் எல்.ஐ.சி. ஊழியர் எண்ணிக்கையில், சுமார் 1 லட்சம் பேர் இந்த வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தகட்டமாக மார்ச் 16 – 18-ல் நடக்கவிருக்கும் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அனைத்து இந்திய எல்.ஐ.சி. ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக இக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்.ஐ.சி பங்குகளை சந்தையில் விற்பனை செய்வது தேசிய நலனுக்கு எதிரானது. இந்த தேசத்தை கட்டியமைக்கும் பணிகளில் பல்லாண்டுகளாக பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது எல்.ஐ.சி. இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி-யை தனியார்மயப்படுத்துவது பொதுமக்களின் நம்பிக்கையை உலுக்கிவிடும். நமது நிதி இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும். சமூக மற்றும் பொருளாதாரரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கும் சகாயமான விலையில் காப்பீடு கொடுப்பது என்ற எல்.ஐ.சி-யின் நோக்கம் தோற்கடிக்கப்படுவதோடு சேவை என்பதிலிருந்து இலாபம் என்பதாக இலக்கு மாறிவிடும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி நிறுவனத்தை வெறூம் ரூ. 5 கோடி மூலதன அடித்தளத்தில் அரசாங்கம் தொடங்கியது. 2018-19-ம் ஆண்டு கணக்கீட்டின் படி, எல்.ஐ.சி-யின் மதிப்பீட்டு உபரி மட்டுமே ரூ. 53,211.91 கோடியாகவும் ஜீவ நிதியின் மதிப்பு ரூ. 26.28 லட்சம் கோடியாகவும், சொத்தாக ரூ. 31.11 லட்சம் கோடியாகவும் இருக்கிறது. எனில் எல்.ஐ.சி-யின் பிரம்மாணடத்தையும் அதன் லாபகரமான செயல்பாட்டையும் புரிந்து கொள்ளலாம்.

படிக்க :
கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?
♦ LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு

எல்.ஐ.சி-யை பங்குச் சந்தையில் விற்பனை செய்வது அதிகமான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதிலும், பொது மக்கள் பங்கேற்பு மற்றும் பங்குச் சந்தையை ஆழப்படுத்துவதற்கும் உதவி புரியும். மேலும் எல்.ஐ.சி நிறுவனம் மற்றும் காப்பீட்டாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.

அடுத்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இந்த பங்குவிற்பனை நடைமுறைக்கு வரலாம் என்று நிதித்துறைச் செயலர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை மொட்டையடித்து நமது சேமிப்புகளையும், முதலீடுகளையும் கார்ப்பரேட் சூதாட்டத்திற்குத் தாரைவார்க்கத் தயாராக இருக்கிறது மோடி அரசு.

எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா?

வினவு செய்திப் பிரிவு
நந்தன்
நன்றி :  தி வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க