privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !

காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !

காஷ்மீரில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது கூட பெரும் குற்றமாகிப் போயுள்ளது. இது தான் காஷ்மீரின் ‘இயல்பு நிலை’.

-

ம்மு – காஷ்மீரில் ‘இயல்பு நிலை’ திரும்பிவிட்டதாக ஆளும் அரசும் அதன் அடிவருடி ஊடகங்களும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆனால், நாளுக்கு நாள் காஷ்மீரில் அடக்குமுறைகளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது மோடி அரசு.

சமூக ஊடக வலைத்தளங்களைப் பயன்படுத்த வி.பி.என் அல்லது ப்ராக்ஸி சேவையகங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீரில் போலீசு இந்தியாவின் ‘அசாதாரண சட்டங்களில்’ ஒன்றான கடுமையான சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்துக் கொண்டுள்ளது.

காஷ்மீரில் இணைய சேவைகளை ஓரளவு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 350 ‘அனுமதிப்பட்டியல்’ இணைய தளங்களை மட்டுமே அணுக முடியும். அனைத்து சமூக ஊடக தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்தத் தடையை மீறியதற்காக காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சுயாட்சியை பறித்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கு முன்னதாக மொபைல் மற்றும் இணைய சேவைகளுக்கு தடை விதித்தது. 3 ஜி மற்றும் 4 ஜி சேவைகளுக்கான தடை பிப்ரவரி 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 2 ஜி சேவைகள் மட்டுமே கிடைக்கின்றன.

ஹுரியத் தலைவர் சையத் அலி கிலானியின் வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டபோது, வி.பி.என் சேவையகங்களைப் பயன்படுத்துவோருக்கு எதிராக போலீசு வழக்கு பதிவு செய்யப்பட்ட விசயம் வெளியாகியுள்ளது. “சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதை தீவிரமாக கவனித்து, அரசாங்க உத்தரவுகளை மீறி சமூக ஊடக தளங்களை தவறாக பயன்படுத்திய பல்வேறு சமூக ஊடக பயனர்களுக்கு எதிராக சைபர் காவல் நிலையம், காஷ்மீர் மண்டலம், ஸ்ரீநகர் நிர்வாகம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளன” என போலீசு தரப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரிவினைவாத சித்தாந்தத்தை பரப்புவதற்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் சமூக ஊடக தளங்களை; துஷ்பிரயோகம் செய்பவர்கள் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. சமூக ஊடகங்களில் பயனர்கள் அநாமதேயமாக இயங்க முடியும் என்பதால் பலரும் இவற்றை சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.” என்று அறிக்கை தொடர்கிறது.

“காஷ்மீர் பள்ளத்தாக்கின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை குறித்து வதந்திகளை பரப்புதல், பிரிவினைவாத சித்தாந்தத்தை பரப்புதல் மற்றும் பயங்கரவாத செயல்களை / பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துதல்” என பல்வேறு வி.பி.என்-களைப் பயன்படுத்தி குற்றவாளிகளால் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடப்பட்டுள்ளதால் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்டுள்ளது என போலீசு அறிக்கை கூறுகிறது.

படிக்க:
♦ காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !
♦ அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

UAPA 13, 188 மற்றும் 505 இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் 66-ஏ (பி) பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. UAPA -இன் பயன்பாடு கேள்விக்குரியது என்றாலும், இந்த பிரிவுகளும் மற்றொரு சிக்கலை எழுப்புகின்றன. எனவே, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவைப் பயன்படுத்தி காவல்துறை மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

மார்ச் 24, 2015 அன்று உச்சநீதிமன்றம் சட்டத்தின் பிரிவு 66 ஏ -வை நிறுத்தியது. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள போலீசார் தொடர்ந்து இந்தப் பிரிவின் கீழ் வழக்கு தொடுத்து கைது செய்கிறார்கள். கடந்த ஆண்டு பிப்ரவரியில், உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசாங்கங்களும் தங்களுக்குக் கீழ் உள்ள போலீசாருக்கு இது குறித்து அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

நியாயமற்ற இணைய கட்டுப்பாடுகளை மீறி ஏராளமான காஷ்மீரிகள் வி.பி.என் சேவையகங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது ஐடி பிரிவின் கீழே வழக்கு தொடுக்க முடியாது என்னும்போது உபா சட்டத்தில் வழக்கு போட்டுள்ளது போலீசு. காஷ்மீரிகளுக்கு இந்தியா அளித்திருக்கும் ‘சுதந்திர’த்தின் லட்சணம் இதுதான்.


கலைமதி
செய்தி ஆதாரம் :  தி வயர்.