Wednesday, January 19, 2022
முகப்பு செய்தி தமிழ்நாடு கொரோனா நிவாரணம் : ஏப்ரல் 26 ஞாயிறு அன்று தமிழக அளவில் அரசை வலியுறுத்தும் கவன...

கொரோனா நிவாரணம் : ஏப்ரல் 26 ஞாயிறு அன்று தமிழக அளவில் அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நிகழ்வு

தமிழகம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களும் வருகிற ஏப்ரல் 26 ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 5-30 வரை நடைபெறும் கவன ஈர்ப்பு இயக்கத்தில் பங்கேற்க வேண்டும்.

-

நாள் 22-4-2020

அன்புடையீர், வணக்கம்!

கொரோனா நெருக்கடியையும், தொடரும் ஊரடங்கையும், அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் வகையில் கீழ்க்காணும் கோரிக்கைகளை இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் பொருட்டு, தமிழக மக்களை கவன ஈர்ப்பு நிகழ்வில் பங்கேற்க அழைக்கிறோம்.

எங்களது  இத்தகைய முன்னெடுப்பு தொடக்கம் மட்டுமே. இதில்  பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், மாணவர் – இளைஞர் அமைப்புகள், இக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக தங்களது அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு நிகழ்வில் பங்கேற்பதுடன், மக்களையும் இதில் பங்கேற்க அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எதிர்வரும்  26 – 04 – 2020 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு கோரிக்கை எழுதிய அட்டைகளோடும், கறுப்புத் துணிகளோடும், அவரவர் வீட்டு வாயிலில் அல்லது மாடியில் உரிய இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் நிற்கும் படி தமிழக மக்களை வேண்டிக் கொள்கிறோம்.

கவன ஈர்ப்புக் கோரிக்கைகள்

இந்திய அரசே!

கொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களை காக்க.

 1. உடனே ஐந்து லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கு!
 2. நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இலவசமாக வழங்கு!
 3. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.6000 என மூன்று மாதங்களுக்கு வழங்கு!
 4. தமிழகத்திற்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி வழங்கு!
 5. மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்கு உரிய போதுமான பாதுகாப்புக் கருவிகள் கொடு!

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களும் வருகிற ஏப்ரல் 26 ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 5-30 வரை நடைபெறும் கவன ஈர்ப்பு இயக்கத்தில் பங்கேற்க வேண்டும்.

அவரவர் வீட்டு வாசலிலோ, மாடியிலோ அட்டை, தாள், அல்லது சிலேட்டில் கோரிக்கைகளைச் சுருக்கமாக எழுதிக் கறுப்புத் துணிகளுடன்  உரிய பாதுகாப்பு இடைவெளியுடன், கவன ஈர்ப்பு இயக்கத்தில் பங்கு பெற அழைக்கிறோம். மக்களுக்காக இந்திய அரசை செயல்பட வைக்க வீட்டிலிருந்தே ஒன்றாக நின்று நாம் குரலெழுப்புவதை தவிர வேறு வழியில்லை எனக் கருதுகிறோம்.

ஊடகங்கள் இந்தக் கவன ஈர்ப்பு இயக்கத்தை செய்தியாக்குவதன் ஊடாக ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

நன்றி!

இப்படிக்கு,

 1. தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
  கைபேசி. 8939154752
 2. வழக்கறிஞர் சி. ராஜு, மக்கள் அதிகாரம்
  கைபேசி 9443260164
 3. கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக்கழகம்
 4. கோவை கு. இராமகிருட்டிணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
 5. திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்
 6. நாகை.திருவள்ளுவன், தமிழ் புலிகள் கட்சி
 7. பாலன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி
 8. குடந்தை அரசன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி
 9. சிவ.செந்தமிழ்வாணன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
 10. சிதம்பரநாதன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் விடுதலை)
 1. ஐந்து இலட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்வது அவசியம்தான். ஆனால், இந்த நிதி, சிறு தொழில், சிறு வணிகம், விவசாயம், ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோ மெக்கானிக்குகள், எலெக்ட்ரீசியன், பிளம்பர் என சுய தொழிலில் ஈடுபட்டிருப்போரைப் பாதுகாக்கும் வண்ணமும், மிகவும் முக்கியமாக அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத தொழில்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலையையும், கூலியையும் பாதுகாக்கும் வண்ணமும் அமைய வேண்டியது அவசியமாகும். இதனை இவ்வியக்கத்தில் நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

  அடுத்த மூன்று மாதங்களுக்கு மட்டுமல்ல, அடுத்த ஆறு மாதங்களுக்குக் கொடுக்கக்கூடிய அளவிற்கு இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை எவ்வித நிபந்தனையுமின்றி, குடும்ப அட்டை உள்ளவர், இல்லாதவர், குடும்ப அட்டை ஆதாரோடு இணைத்தவர், இணைக்காதவர் என்ற பேதமின்றிக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற வேண்டும். குறிப்பாக, தற்போதைய மக்கள் தொகை பெருக்கத்தின்படி, நாடெங்கும் ஏறத்தாழ 10 கோடி பேர் குடும்ப அட்டையின்றி இருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில், எவ்வித நிபந்தனையும் இன்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் அனைவருக்கும் விநியோகிக்க வேண்டுமெனக் கூறுவது அவசியமாகிறது.

  உங்களது கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று விடுபட்டுப் போயிருப்பது வருத்தமளிக்கிறது. நாடெங்கும் கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தமது வீட்டுக்குத் திரும்ப வழியின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் அடைபட்டுக் கிடக்கின்றனர். இவர்கள் அனைவரையும் அவரவர் ஊருக்குத் திருப்பி அனுப்ப முடியாது எனும்பட்சத்தில், இவர்களது அடிப்படைத் தேவைகள் – உணவு, உறைவிடம், மருத்துவக் கண்காணிப்பு, ரொக்கம் – அனைத்தையும் நிறைவு செய்யும் ஏற்பாடுகளை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

  தமிழகத்திற்குத் தேவையான நிதியைப் பாரபட்சமின்றி வழங்கு என்ற கோரிக்கை தேவைதான் எனினும், இம்முழக்கம் பாரபட்சம் காட்டப்பட்டிருக்கும் மற்ற மாநிலங்களை, குறிப்பாக, கேரளாவைக் கணக்கில் கொள்ளவில்லை. நோய்த் தொற்றின் தாக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் பாரபட்சமின்றி நிதியை வழங்கக் கோரியிருக்க வேண்டும்.மாறாக, தமிழகத்தை மட்டுமே மையப்படுத்தியிருக்கும் முழக்கத்தில் தேசிய இன வாதம் சற்றுத் தூக்கலாகத் தெரிகிறது.

 2. தங்களால் முடிந்த அளவுக்கு நிதி ஆதாரங்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றைத் திரட்டி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதும், மக்களிடையே சமூக விலகலை வலியுறுத்தியும் பொது சுகாதாரத்தின் நன்மையை போதித்தும் செயல்பாடுகளை மேற்கொள்வதும் தான் உண்மையான மக்கள் நலன் விரும்பிகளின் தன்மையாக இருக்கும். இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் சில்லறைத் தனமாக மாடியில் நின்றுகொண்டு போராட்டம், மக்கள் போராட்டம் என்றெல்லாம் மேற்கொள்வது சமூக விரோதிகளின் செயல்பாடுகள். இவர்கள் நடத்தும் போராட்டங்களை பார்த்துதான் மாநில அரசும் மத்திய அரசும் நடுங்க போகிறார்களா? இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பொறுப்பில்லாத பீடைகள் தான் போராட்டம் கீராட்டம் என சில்லரைத் தனம் செய்வார்கள். இந்த வினவு கும்பலுக்கு சுரணை என்பதே கொஞ்சமும் கிடையாது.

  • சரிதான். மோடி பீடை மார்ச் 22 அன்று கை தட்டச் சொன்னபோது பெரிசு செய்தது என்ன? அதே பீடை மீண்டும் ஒருமுறை இரவு 9.09க்கு மின் விளக்கை அனைத்து விட்டு விளக்கேற்றச் சொன்ன போது பெருசைக் காணோம்! போராட்டம் என்று சொன்னது பீடை என பொத்துக் கொண்டு வருகிறதே ஏன்? எண்ணெய் வயல் அரச குடும்பத்தினருக்கு எதிராக பெருசு எப்படி பொங்கப் போகிறாரோ! பார்ப்போம்!

 3. மோடி கும்பல் பீடையிலும் பீடை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அதற்கு எதிராக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி என்ன சாதிக்க முடியும் என்பது என் கேள்வி. பொதுமக்களுக்கு முடிந்தவரை உதவி செய்வதுதான் சமூக நலன் விரும்புபவர்களின் வேலையாக இருக்க முடியும். வெயில் காலத்திலேயே கொரோனா காய்ச்சல் இந்த போடு போடுகிறது. குளிர்காலம் வந்தால் நிலைமை மிகமோசமாகும் என்பதுதான் என் அச்சம். இன்னும் இரண்டு ஆண்டுகள் (இரண்டு குளிர் காலங்கள்) முடிந்த பின்னர்தான் நிலைமை புரியவரும். உருப்படியாக எதையாவது செய்யுங்கள் ஐயா.

Leave a Reply to S.Periysamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க