Friday, May 2, 2025
முகப்புசெய்திஇந்தியாஏழைகளுக்கு உரிய அரிசியை கிருமிநாசினி தயாரிக்க பயன்படுத்தும் மோடி அரசு !

ஏழைகளுக்கு உரிய அரிசியை கிருமிநாசினி தயாரிக்க பயன்படுத்தும் மோடி அரசு !

மக்களுக்காக தானியக் கிடங்குகளை திறந்துவிட தயாராக இல்லாத மோடி அரசு, சானிடைசர் தயாரிக்க ‘உபரி அரிசி’யைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்திருப்பது என்ன நியாயம்?

-

ந்திய உணவுக்கழகத்தில் ‘உபரி’யாக இருக்கும் அரிசியைக் கொண்டு கிருமிநாசினி தயாரிக்க உத்தரவிடப் போவதாக தெரிவித்துள்ளது இந்திய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்.

சமீபத்தில், தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் “உயிரி எரிபொருள்களுக்கான தேசியக் கொள்கை 2018”-ஐ சுட்டிக் காட்டி இந்திய உணவுக் கழகத்தில் இருக்கும் உபரி தானியங்களை எத்தனாலாக (எரிபொருள் உற்பத்திக்கான மூலப்பொருள்களில் ஒன்று) மாற்றி, சானிடைசர் தயாரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதுமான ஊரடங்கு, வேலையிழப்பு ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வராத கோடிக்கணக்கான மக்கள் பசியால் மடிந்து போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. வேலையிழப்பின் காரணமாக வருமானம் ஏதுமின்றி பிழைக்க வழியுமின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு சேமிப்பில் உள்ள அரிசியை கொடுக்காமல் இருத்தி வைத்திருக்கும் இந்த அரசு, ‘உபரி அரிசி’ என எதனைக் குறிப்பிடுகிறது ?

பொருளாதார நடவடிக்கைகள் நின்று போயுள்ள இந்த சூழலில், இந்தியா முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வராத சுமார் 10.8 கோடி மக்களின் நிலைமை மிகவும் ஆபத்தான சூழலில் இருக்கிறது.

கடந்த மார்ச் 27 அன்று 73 தன்னார்வலர்களால் தொடங்கப்பட்ட “தனித்துவிடப்பட்ட தொழிலாளர்களுக்கான நடவடிக்கை வலைப்பின்னல்” (Stranded Workers Action Committee – SWAN) என்ற அமைப்பின் அறிக்கை, ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் ஏற்கெனவே பட்டினியை சந்தித்து வருகின்றனர் என்று தெரிவிக்கிறது. இவ்வமைப்பினரின் தொடர்பில் இருக்கும் சுமார் 11,000 தொழிலாளர்களில் 89% தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பதை அவர்கள் அம்பலப்படுத்துகின்றனர். “உங்களது பணியாளர்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என முதலாளிகளுக்கு மோடி ‘அன்பு வேண்டுகோள்’ விடுத்தும் இதுதான் அவர்களின் நிலைமை.

படிக்க:
♦ கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மக்களுக்கு கிடைக்குமா ?
♦ சாபு மண்டல் ஒரு தொழிலாளி – கொரானாவும், முன்னேற்பாடு ஏதும் செய்யாத அரசும் அவரை கொன்றுவிட்டன !

குறைந்தபட்சம் அடுத்த ஆறு மாத காலகட்டத்திற்காவது, பொதுவிநியோகத் திட்டத்தை அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி ஆகிய பொருளாதார வல்லுனர்கள் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் வலியுறுத்திவருகின்றனர். இதனை காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்தியா தனது உணவுக் கிடங்குகளில் சுமார் 6 மாத காலத்திற்கு அனைவருக்கும் பொது விநியோக முறையில் வழங்கத்தக்க அளவிற்கு உணவு தானியங்களைக் கொண்டுள்ளது. மார்ச் மாதக் கணக்குப்படி இந்தியாவின் உணவுக் கிடங்குகளில் 77 மில்லியன் டன் தானியங்கள் இருப்பில் இருக்கின்றன. மேலும் இந்த ஆண்டு மட்டும் சுமார் 70 மில்லியன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்படவிருக்கின்றன. 137 கோடி பேரில், 110 கோடிபேருக்கு மாதம் 10 கிலோ என வைத்தால் கூட ஆறுமாதத்திற்கு 66 மில்லியன் டன்கள் மட்டுமே செலவாகும்.
ஏற்கெனவே விவசாயிகளிடம் விற்பனைக்குத் தயாராக உள்ள உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யாமல், இந்திய உணவுக் கழகத்தில் இருக்கும் தானியங்களை முறையாகப் பராமரிக்காமல் எலிக்கும், மழைக்கும் பலி கொடுத்து வருகிறது இந்திய அரசு.

பட்டினியில் தவிப்பவர்களுக்கு இத்தானியங்களை வழங்க மனம் இல்லாத அரசு, சானிடைசர் (கிருமிநாசினி) தயாரிக்க இதனை பயன்படுத்தத் தயாராக உள்ளது.
கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் கிருமிநாசினி அவசியம்தான். அந்த கிருமி நாசினியை மலிவான முறையில் தயாரிக்க வேறு மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதை விடுத்து ஏழைகளின் உணவை மறுத்து அதிலிருந்துதான் சானிடைசர் தயாரிக்க வேண்டும் என்று ஒரு அரசு முடிவு செய்கிறது என்றால் இது யாருக்கான அரசு ?

நந்தன்
மூலக்கட்டுரை, நன்றி :  த வயர்.