“அவர்களில் ஒரு மனிதரின் சொற்கள்தான் என்னைப் பெரிதும் துன்புறுத்தின. அவர் ஒரு தச்சர். பெயர் ராம்ஜித். நேபாள எல்லையில் இருக்கும் கோரக்பூருக்கு டில்லியிலிருந்து நடந்தே செல்வது என்ற திட்டத்துடன் கிளம்பியிருந்தார். “மோடிஜி இதனைச் செய்வது என்று முடிவு செய்வதற்கு முன், எங்களைப் பற்றி யாரும் அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை எங்களைப் பற்றி அவருக்குத் தெரியாமலும் இருக்கலாம்” என்றார் ராம்ஜித்.

“எங்களை” என்று அவர் குறிப்பிட்டாரே, அவர்களின் எண்ணிக்கை சுமார் 46 கோடிப் பேர்.

கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில்” அருந்ததி ராய் மேற்கண்டவாறு எழுதினார். அப்படி ஒரு குடும்பத்தினரின் கதை தான் இந்தக் கட்டுரை!

***

புலம்பெயர்ந்த தொழிலாளியான சாபு மண்டல் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனை ரூ. 2500க்கு விற்றார்.

பீகாரில் இருந்து குர்கானில் குடியேறிய 35 வயதான சாபு மண்டல் ஒரு வண்ணம் பூசும் தொழிலாளியாவார். கடந்த வியாழக்கிழமை காலை, தனது செல்பேசியை ரூ. 2,500 க்கு விற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு சிறிய மின்விசிறி மற்றும் சில மளிகை பொருட்களை வாங்கினார். அந்த பொருட்களுக்கக அவரது பெரிய குடும்பமான  மனைவி, அவரது பெற்றோர், மற்றும் அவரது நான்கு குழந்தைகள் (ஐந்து மாத கைக்குழந்தை உட்பட) காத்திருந்தார்கள்.

அவர் வீடு திரும்பிய போது அவரது மனைவி பூனம் மகிழ்ச்சியடைந்தார். காரணம் குடும்பத்தினருக்கு புதன்கிழமை முழுவதும் சாப்பிட எதுவும் இல்லை. அதற்கு முன்பே, பகுதியில் இலவசமாக விநியோகிக்கப்படும் உணவையும் அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியைத்தான் அவர்கள் நம்பியிருந்தார்கள்.

சாபு மண்டலின் மனைவி பூனம் சமைக்கத் தொடங்குவதற்கு முன்பு, கழுவுதற்குச் சென்றார். அதே நேரத்தில் அவரது தாயார் குழந்தைகளை அழைத்துக் கொண்டு  வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மரத்தடியில் உட்காரச் சென்றார். மண்டலின் மாமியார் அருகிலுள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இப்படியாக குடும்பத்தினர் வெளியே இருந்தபோது, மண்டல் தனது குடிசையின் கதவை மூடி, ஒரு கயிற்றைப் பயன்படுத்தி, கூரையிலிருந்து தூக்கில் தொங்கி இறந்து போனார்.

தற்கொலை செய்து மாண்டுபோன வண்ணம் பூசும் தொழிலாளி சாபு மண்டலின் மனைவி அவரது குழந்தைகளுடன் நொறுங்கிப் போய் அமர்ந்துள்ளார்.

“அரசின் கதவடைப்பும், ஊரடங்கும் தொடங்கியதிலிருந்து என் கணவர் மிகவும் பதற்றமாய்த்தான் இருந்தார். வேலையும் இல்லை. பணமும் இல்லை. இலவச உணவைத் தான் முழுமையாக நம்பியிருந்தோம், ஆனால் எல்லா நாளும் இலவச உணவு கிடைப்பதில்லை” என்கிறார் பூனம்.

குர்கான் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, மண்டல் “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்று கூறினார்கள்.

“நேற்று பிற்பகல் இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த நபர் புலம்பெயர்ந்த தொழிலாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த குடும்பம் இந்த விஷயத்தில் மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆகையால், முதல் தகவல் அறிக்கை (FIR) எதுவும் பதிவு செய்யப்படவில்லை” என்று பிரிவு 53 காவல் நிலைய எஸ்.எச்.ஓ தீபக் குமார் தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாக அதிகாரிகள் 35 வயதான மண்டலை “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்று வலியுறுத்தினார்கள். “இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், தொற்று நோய் பரவியதால், அந்த நபர் சற்று கலக்கம் அடைந்தார். உணவு கிடைப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை, அருகிலேயே உணவு விநியோக இடமும் உள்ளது” என்று ஒரு மாவட்ட அதிகாரி கூறினார்.

படிக்க:
♦ லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !
♦ நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

சரஸ்வதி கஞ்சில் வசிப்பவர்களுக்கு அருகில் பிரிவு 56-ல் உணவு விநியோகிப்பதற்கான சமூக மையம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

“பிரிவு 56 லும், வஜிராபாத்திலும் உணவு விநியோகம் உள்ளது. ஆனால் அவை நடந்துபோய் வாங்க சாத்தியமில்லாத தொலைவில் இருக்கின்றன. நான் ஊனமுற்றவன். எனது துணைவியார் மிக வயதானவர். பிள்ளைகளும் நடந்து கூட்டி செல்லமுடியாத சின்ன குழந்தைகளாக இருக்கின்றார்கள். அதுவும் பசியோடு அழைத்து செல்வது சாத்தியமில்லை.” என மண்டலின் மாமனார் உமேஷ் கூறினார்.

பீகாரைச் சேர்ந்த சரஸ்வதி குஞ்சின் மற்றொரு குடியிருப்பாளரான ஃபிரோஸ், “சில போலீசார் வெளியே செல்பவர்களை மோசமாக நடத்துவதால் குடியிருப்பாளர்கள் வெளியே செல்ல பயப்படுவதாகவும்” கூறினார்.

“உணவு விநியோகத்தில் யாரேனும் விடுபட்டிருந்தால், அது சரிசெய்யப்படும்” என மாவட்ட நிர்வாக அதிகாரி கூறினார். “உணவு விநியோகத்திற்கான முயற்சிகள் அதிகரிக்கப்படும்” என ஒரு அதிகாரி கூறினார்.

15 ஆண்டுகளுக்கு முன்புதான் பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மண்டல் குர்கானுக்கு குடிபெயர்ந்து வண்ணம் பூசும் தொழிலாளியாக பணிபுரிந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் திருமணம் செய்துகொண்டு தனது குடும்பத்தை நகரத்திற்கு மாற்றினார். கடந்த பல மாதங்களாக, அவர்கள் சரஸ்வதி குஞ்சில் வசித்து வந்தனர். இரண்டு குடிசைகளுக்கு தலா ரூ .1,500 வாடகைக்கு செலுத்தினார். கடந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பலிருந்து வேலைகள் கிடைப்பது சிரமமாகிவிட்டது” என்று உமேஷ் கூறினார்.

“மாசு காரணமாக கட்டுமான வேலைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கட்டுமான நிறுவனங்கள் வேலையை நிறுத்திவிட்டன. அதன் பிறகும், வேலை சிறிதளவே கிடைத்தது. கூலியாக கிடைப்பதை வைத்துக்கொண்டு சமாளித்தோம். ஊரடங்குக்கு முன்பு கடந்த ஒரு மாதமாக, அவருக்கு ஓரிரு நாட்களில் மட்டுமே வேலை கிடைத்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தால், தன்னாலும் வேலை செய்ய முடியவில்லை” என்கிறார் உமேஷ் . தனக்கு கிடைத்த சிறிய வேலைகளால் இரு வீடுகளையும் மண்டல் தான் பராமரித்து வந்தார்.

மார்ச் 22 மாலை குர்கானில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே, குடும்பத்தினர் கையில் பணமில்லாமல் தான் இருந்தோம். வீட்டு உரிமையாளரும், ஒன்று, இரண்டு முறை வாடகை கேட்டார். இது கூடுதல் அழுத்தத்தை தந்தது.

வேலை இழந்த அனைவரும் ஒவ்வொரு நாளும் உணவு விநியோகிக்கப்படுவதை கவனித்து ஓடி ஓடி வாங்க தொடங்கினர். நாங்களும் அப்படித்தான் வாங்கினோம். கொஞ்சம் தாமதித்து போனாலும், எதுவும் கிடைக்காது” என பூனம் கூறினார்.

”வியாழக்கிழமை காலை, என் கணவர் ரூ. 10000-த்துக்கு வாங்கிய தொலைபேசியை விற்க முடிவு செய்தார். அதை விற்று, கிடைத்தப் பணத்தில் கொஞ்சம் உணவுப்பொருட்களும், அதிகரித்து வரும் வெயிலால், வீட்டுக்கூரை தகரம் என்பதால், வீட்டிற்குள் வெக்கையால் இருக்கமுடியாமல் போனது. அதற்காக ஒரு மின்விசிறியும் வாங்கினார்” என்றார் பூனம்.

“நாங்கள் எல்லோரும் மனஅழுத்தத்தில் இருந்தோம். எங்கள் எல்லோரையும் கவனிக்க கூடிய பொறுப்பில் இருந்ததால், அவருக்கு எங்களை விட மனஅழுத்தம் இருந்தது. எங்களுக்கும் அது தெரியும். ஆனால், அவர் தற்கொலை செய்துகொள்வார் என நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.” என்கிறார் பூனம்.

மண்டலின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை காலை குர்கானில் இறுதி சடங்குகளை மேற்கொண்டனர். “டெம்போ, ஆம்புலன்ஸ் மற்றும் பிற சடங்குகளுக்கு என எந்த செலவிற்கும் எங்களிடம் எதுவும் இல்லை. தெரிந்தவர்களிடமும், குர்கானில் உள்ள எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடமும் நிதி நன்கொடையாகக் கேட்டோம், ரூ.5 ஆயிரம் தான் வசூலிக்க முடிந்தது. எனது மருமகனின் கடைசி சடங்குகள் கூட கடன் வாங்கிய பணத்தில்தான் செய்யப்பட்டது,” என்றார் உமேஷ்.

“மொத்த குடும்பத்தையும் தாங்கிய குடும்பத் தலைவரை இழந்த துக்கம் ஒருபுறம். இனி எங்களுக்காக சம்பாதிக்க யாரும் இல்லை என்ற உண்மையை நாங்கள் எதிர்கொள்ளவேண்டும். நெருக்கடி நிலைமை சரியான பிறகு, வீட்டு வேலைகள் செய்யலாம் என்று இருக்கிறேன். வேலையை தேடவேண்டும். ஆனால் இன்னும் 15 நாட்கள் உள்ளன,” என்று பூனம் கூறினார்.


தமிழாக்கம்: குருத்து
மூலக்கட்டுரை, நன்றி :  இந்தியன் எக்ஸ்பிரஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க