Friday, May 2, 2025
முகப்புசெய்திஇந்தியாகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் !

கொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் !

கொரோனா பற்றிய பீதி மக்களுக்கு வரும்போதெல்லாம் அது முசுலீம்கள் மீதான பீதியாக மாற்றப்பட்டுவிட்டது. முசுலீம்களைக் கண்டவுடன் கொரோனா பீதிக்கு ஆளாகினர் மற்ற பிரிவு மக்கள்

-

ஹரியானா மாநிலத்தில் நடந்த தாக்குதல்கள்:

நாடு முழுவதும் கொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு சில சான்றுகள்:

ஏப்ரல் 5 – ஜிந்த் மாவட்டத்தில் உள்ள தத்ரத் என்ற கிராமத்தில் 4 இசுலாமிய இளைஞர்கள் மோடி சொன்னதைப் போல அன்றிரவு விளக்கை அணைக்கவில்லை என்பதற்காக சங்கப் பரிவார குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். விளக்கை அணைக்காததற்காக மன்னிப்புக் கேட்ட பின்னரும் விடாமல் தொடர்ந்து தாக்கப்பட்டனர்.

ஏப்ரல் 7 – கைதால் மாவட்டத்தில் 60 வயது கௌர் ஹாசன் என்ற முதியவரின் வெல்டிங் சம்பந்தமான இரும்புப் பொருட்கள் விற்கும் கடையை சில சங்கப் பரிவார குண்டர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தப்லிக் ஜமாத் சம்பவம் மார்ச் 30-ம் தேதி ஊடகங்களில் வந்த பின்னர்தான் அந்த முதியவரும் தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டார் என்ற வதந்தியைப் பரப்பி கடையைக் கொளுத்தியுள்ளனர்.

ஏப்ரல் 12ம் தேதி பஞ்ச்குலா மாவட்டத்தில் சுகாதார மருத்துவப் பணியாளர்களான இசுலாமியத் தம்பதியினர் சங்கப் பரிவார குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

ஹரியானா மாநில பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான பபிதா போகாட் பா.ஜ.க.வின் பத்திரிக்கையான ‘ஹரிபூமி’யில் தொடர்ந்து இசுலாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்தார். நிஜாமுதின் முட்டாள்கள் என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் உருவாக்கிப் பிரச்சாரம் செய்தார். “சீனர்களுக்கு வௌவால்கள் மூலம் கொரோனா வந்தது, ஹிந்துஸ்தானியர்களுக்கு கைவிடப்பட்ட பன்றிகளால் கொரோனா வருகிறது” என்று இசுலாமியர்களைக் குறிப்பிட்டுப் பிரச்சாரம் செய்தார். அவரை டிவிட்டரில் பின்தொடரும் நான்கு இலட்சம் பேர் மூலம் பல இலட்சம் மக்களிடம் இந்த வெறுப்புப் பிரச்சாரங்கள் கொண்டு செல்லப்பட்டன. கொரோனா தொற்றுக்கு முசுலீம்கள் தான் பொறுப்பு என தொடர்ந்து பிரச்சாரம் செய்து, பொய்யான செய்திகளை அவிழ்த்துவிட்டார். அவை பொய் என்று பின்னர் நிரூபிக்கப்பட்டாலும் அவர் தனது பிரச்சாரத்தை நிறுத்தவில்லை.

”ஹரியானாவில் இளைஞர் குழுக்களின் எந்த வாட்ஸ் அப் குரூப்களை சென்று பார்த்தாலும் அதில், கொரானாவை முசுலீம்கள் பரப்புகிறார்கள் என்ற வதந்திகள் தான் இடம்பெற்றுள்ளன” என்கிறார் மீட் மான் என்ற சமூக செயல்பாட்டாளர். இவற்றில் பிரச்சாரம் செய்யப்படும் வதந்திகளின் இறுதியாக “முசுலீம்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்”, “முசுலீம்களை சமூகப் புறக்கணிப்பு செய்ய வேண்டும்” போன்ற கட்டளைகளே இடம்பெற்றுள்ளன என்கிறார்.

கிராமங்களில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் ஏதாவது ஒரு முசுலீம் பெயரைக் குறிப்பிட்டு அவரது வீட்டில் ஜிகாதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வதந்திகளைப் பரப்புவதைச் செய்கின்றனர். இதனால் பல இசுலாமியர்களின் வீடுகள் தாக்கப்பட்டன.

“கொரோனா பற்றிய பீதி மக்களுக்கு வரும்போதெல்லாம் அது முசுலீம்கள் மீதான பீதியாக மாற்றப்பட்டுவிட்டது. முசுலீம்களைக் கண்டவுடன் கொரோனா பீதிக்கு ஆளாகினர் மற்ற பிரிவு மக்கள்” என்கிறர் மான்.

”பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்” என்ற முழக்கம் இன்று ஹரியானா இளைஞர்கள் மத்தியில் பெரிதும் பதிந்துவிட்டது. தங்களது கிராமங்களில் இசுலாமியர்களை நுழைவதற்கும் வாழ்வதற்கும் இந்த இளைஞர்கள் அனுமதிப்பதில்லை. நாள்தோறும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. “ஊரடங்கு இருக்கும்போதே இசுலாமியர்கள் தாக்கப்படுகின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டால் இந்த வெறுப்புணர்வின் கோரமான முகம் இன்னும் கொடியதாக இருக்கும்” என்கிறார் சுக்வந்த் சிங் என்ற சமூக செயல்பாட்டாளர்.

பாகிஸ்தான் பிரிவினையின் போது இங்கிருந்த இசுலாமியர்கள் பலரும் பாகிஸ்தான் சென்றுவிட்டனர். ஆனால், அப்போது இந்த கிராமங்களில் இருந்த இந்துக்களும் சீக்கியர்களும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால், தங்களது உறவினர்களை விட்டுவிட்டு இங்கேயே (இந்தியாவிலேயே) தங்கியவர்கள் தான் இன்று இங்கிருக்கும் இசுலாமியக் குடும்பங்கள். இவர்கள் கட்டிடத் தொழிலாளர்களாகவும் விவசாயக் கருவிகளை விற்பனை செய்பவர்களாகவும் பல வகை வணிகங்களை செய்பவர்களாகவும் இந்த மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் மீதுதான் இப்போது இந்தக் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது எவ்வளவு பெரிய அநீதி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க