லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 9

பாட்டாளி வர்க்கமே புரட்சியின் இயக்கு சக்தி, அதன் ஆன்மாவும் தசை நாணும் என்று லெனின் திண்ணமாகக் கருதினார் புதிய சமூகம் நிறுவப்படுவதற்கான நம்பிக்கைக்கு ஒரே ஆதாரம் பொது மக்களே என அவர் எண்ணினார்.

15. அமெரிக்கர்களையும் முதலாளிகளையும் சலுகைகளையும் பற்றிய லெனினது போக்கு

அமெரிக்கத் தொழில்நுட்ப நிபுணர்களையும், பொறி இயலாரையும் நிர்வாகிகளையும் லெனின் சிறப்பாகப் பெரிதும் மதித்தார். அவர்கள் ஐயாயிரம் பெயர் வேண்டும் என அவர் விரும்பினார். அவர்கள் உடனே வேண்டுமென விரும்பினார். அவர்களுக்கு மிக உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கத் தயாராயிருந்தார். அமெரிக்காவின்பால் தனிப்பட்ட மனச்சாய்வு கொண்டிருந்ததற்காக அவர் இடைவிடாது தாக்கப்பட்டு வந்தார். அவருடைய எதிரிகள் அவரை “அமெரிக்க பாங்கு முதலாளிகளின் ஏஜெண்டு” என்று இகழ்ச்சியாகக் குறிப்பிட்டார்கள். விவாத மும்முரத்தில் இடதுசாரியினர் இந்தக் குற்றச்சாட்டை நேரிலேயே பயன்படுத்தினார்கள்.

உண்மையில் அமெரிக்க முதலாளித்துவம் எந்தப் பிற நாட்டின் முதலாளித்துவத்தையும்விடத் தீமையில் குறைந்தது என அவர் எண்ணவில்லை. ஆனால் அமெரிக்கா வெகு தொலைவில் இருந்தது. சோவியத் ருஷ்யாவின் வாழ்க்கைக்கு அது நேரடி அபாயம் விளைவிக்கவில்லை. சோவியத் ருஷ்யாவுக்குத் தேவையாயிருந்த சரக்குகளையும், நிபுணர்களையும் அளிக்கும் நிலையில் அது இருந்தது. “எனவே, விசேஷ ஒப்பந்தம் செய்துகொள்வது இரு நாடுகளின் பரஸ்பர நலன்களுக்கும் ஏன் ஏற்றதாகாது?” என்று கேட்டார் லெனின்.

ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் அரசு முதலாளித்துவ அரசுடன் உறவுகள் வைத்துக்கொள்ள முடியுமா? இந்த இரு வடிவங்களும் அருகருகே வாழ முடியுமா? இந்தக் கேள்விகள் லெனினிடம் நோதோவால் கேட்கப்பட்டன.

“ஏன் முடியாது?” என்றார் லெனின். “எங்களுக்குத் தொழில்நுட்ப நிபுணர்களும் விஞ்ஞானிகளும் பல்வகை இயந்திரத் தொழில் செய்பொருள்களும் தேவை. இந்த நாட்டின் பிரம்மாண்டமான வளங்களை அபிவிருத்திச் செய்ய நாங்கள் தனியே திறனற்றவர்கள் என்பது தெளிவு. இந்த நிலைமைகளில், ருஷ்யாவில் நாங்கள் கடைப்பிடிக்கும் கோட்பாடுகள் எங்கள் எல்லைகளுக்கு வெளியே அரசியல் ஒப்பந்தங்களுக்கு இடம் கொடுத்து விலகிக்கொள்ள வேண்டும் என்பதை, இது எங்களுக்கு உவப்பாக இல்லாவிடினும்,ம்நாங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும். எங்கள் வெளிநாட்டுக்கடன்களுக்கு வட்டி கொடுப்பதாக நாங்கள் மிக நேர்மையுடன் சொல்லுகிறோம். ரொக்கமாகக் கொடுக்க இயலாவிடில் நாங்கள் அவற்றைத் தானியமாகவும், எண்ணெயாகவும் எங்களிடம் வளமாக உள்ள எல்லா வகைக் கச்சாப் பொருள்களின் வடிவிலும் செலுத்துவோம்.

“ஆந்தாந்த் வல்லரசுகளின் குடிகளுக்கு காடுகள், சுரங்கங்கள் பற்றிய சலுகைகள் வழங்க நாங்கள் நிச்சயித்துள்ளோம். எப்போதும் இதற்கான நிபந்தனை, ருஷ்ய சோவியத்துக்களின் முக்கியக் கோட்பாடுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதாகும். தவிரவும் பழைய ருஷ்ய சாம்ராஜ்யத்தின் ஏதேனும் பிரதேசத்தைச் சில நேச வல்லரசு களுக்கு ஒப்படைக்க மகிழ்வுடன் அல்ல, போனால் போகட்டும் என்ற உணர்வுடன்தான் என்றாலும் நாங்கள் சம்மதிக்கக் கூடச் செய்வோம். ஆங்கில, ஜப்பானிய, அமெரிக்க முதலாளிகள் இத்தகைய சலுகைகளை மிகப் பெரிதும் விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

” ‘வெலீக்கிய் ஸேவெர்னிய் பூத்’, அதாவது மாபெம் வடக்கு ரெயில்பாதை கட்டுவதை ஒரு சர்வதேசக் கழகத்திற்கு நாங்கள் ஒப்படைத்துள்ளோம். நீங்கள் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சுமார் 3,000 கிலோமீட்டர்கள் நீளமான ரெயில் பாதை ஒனேகா வளைகுடாவின் அருகே தொடங்கி கோட்லாஸின் வழியாக உரால் மலைத் தொடரைக் கடந்து ஓப் ஆறு வரை இது செல்லும் 80 லட்சம் ஹெக்டேர் நிலமும் பயன்படுத்தப்படாத எல்லாவகைச் சுரங்கங்களும் கொண்ட பிரம்மாண்டமான கன்னிக் காடுகள் இருப்புப் பாதை நிறுவும் கம்பெனியின் அதிகார எல்லைக்குள் வரும்.

“இந்த அரசு உடைமை குறித்த காலத்துக்கு, ஒருவேளை எண்பது ஆண்டுகளுக்கு, விட்டுக் கொடுக்கப்படுகிறது, மீட்டுப் பெறும் உரிமையுடன். எட்டு மணி வேலைநாள், தொழிலாளர் ஸ்தாபனங்களின் கட்டுப்பாடு ஆகியவை போன்ற சோவியத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கோருகிறோம். இதற்கும் கம்யூனிஸத்துக்கும் வெகுதூரம் என்பது உண்மையே. எங்களது ஆதர்சத்துக்கு இது சற்றும் பொருந்தவில்லை. சோவியத் சஞ்சிகைகளில் இந்தப் பிரச்சினை மிகக் கடுமையான விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது என்பதை நான் சொல்லிவிட வேண்டும். ஆனால் பரிணமிப்புக் காலகட்டத்தில் தேவையாயிருப்பதை ஒப்புக்கொள்ள நாங்கள் நிச்சயித்திருக்கிறோம்.”

நோதோ சொன்னார்: “அப்படியானால், வெளிநாட்டு முதலாளிளுக்கு இங்கே எதிர்ப்படும் அபாயங்களை இந்த அபாயங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகத் தெரியவில்லை. எந்த நேரத்திலும் இவை இன்னும் கடுமையாகலாம் என்ற அச்சம் இருக்கிறது கருத்தில் கொண்டால், ருஷ்யாவுக்கு வரவும் அது புய செல்வ வளங்களை விழுங்க அனுமதிக்கவும் நிதியதிபர்கள் துணிவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? தங்கள் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சைனியத்தின் பாதுகாப்பு இல்லாமல் இம்மாதிரிக் காரியத்தை அவர்கள் தொடங்க மாட்டார்கள். வெளிநாட்டுப் படைகள் உங்கள் பிரதேசத்தை இவ்வாறு கைப்பற்றிக் கொள்வதற்கு நீங்கள் இசைவீர்களா?”

“இதற்குத் தேவையே இருக்காது. ஏனெனில் தான் விதித்துக் கொண்ட நிபந்தனையை சோவியத் அரசாங்கம் உண்மையுடன் கடைப்பிடிக்கும். ஆனால் எல்லா நோக்கு நிலைகளும் பரிசீலிக்கப் படலாம்.”

மாபெரும் மாஸ்கோ பொருளாதார ஆலோசனை சபையின் 1919, ஜூன் மாதக் கூட்டத்தில்,ஜெர்மனியுடன் பொருளாதாரக் கூட்டுறவை ஆதரித்துப் போராடியவர்களுக்கு எஞ்சினீயர் க்ராஸின்²² தலைமை தாங்கியதாகவும் அவருக்கு எதிராக, அமெரிக்காவுடன் பொருளாதாரக் கூட்டுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதை ஆதரித்து லெனினும் சிச்சேரினும்²³ போராட்டம் நிகழ்த்தியதாகவும் மேற்படிக் கூட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன.

16. பாட்டாளிகள் மீது லெனின் கொண்டிருக்கும் பெருத்த நம்பிக்கை

பாட்டாளி வர்க்கமே புரட்சியின் இயக்கு சக்தி, அதன் ஆன்மாவும் தசை நாணும் என்று லெனின் திண்ணமாகக் கருதினார் புதிய சமூகம் நிறுவப்படுவதற்கான நம்பிக்கைக்கு ஒரே ஆதாரம் பொது மக்களே என அவர் எண்ணினார். ஆனால் பொதுவாகப் பரவியிருந்த கருத்து இது அல்ல. ருஷ்ய மக்களைப் பற்றி பொதுவாக நிலவும் கருத்து, அவர்கள் மண்ணை நம்பி வாழும் பாங்கற்ற பிராணிகள், திறமையற்றவர்கள், சோம்பேறிகள், எழுத்தறிவில்லாதவர்கள், வோத்காவையே குறியாகக் கொண்ட இருள்மதியினர், ஆதர்சவாதம் அற்றவர்கள், விடாப்பிடியாக முயலத் திறன் இல்லாதவர்கள் என்பதே ஆகும்.

இதற்கு எதிராக மேலெழுந்து நிற்கிறது “அறிவீனர்களான” வெகு ஜனங்கள் பற்றிய லெனினது மதிப்பீடு. அவர்களுடைய அசைவற்ற உளத் திண்மையையும், பற்றுறுதியையும், தியாகங்கள் செய்யவும் துன்பங்களைத் தாங்கவும் அவர்களுக்குள்ள திறனையும் பெரிய அரசியல் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் அவர்களது சக்தியையும், அவர்களுக்குள் மறைந்திருக்கும் பெருத்த படைப்பு, ஆக்க ஆற்றல்களையும் லெனின் பல நீண்ட ஆண்டுகளாக விடாது வலியுறுத்தினார். வெகுஜனங்களின் சுபாவத்தின் மீது அநேகமாகத் துணிச்சலான நம்பிக்கை போல இது தோன்றுகிறது. ருஷ்யத் தொழிலாளி மீது நம்பிக்கை வைக்கும் லெனினது துணிவை விளைவுகள் எவ்வளவு தூரத்துக்குச் சரி என்று காட்டியுள்ளன?

ருஷ்யாவில் மேற்பரப்புக்கு அடியில் பார்வை செலுத்தியுள்ள எல்லா அவதானிக்கையாளர்களும் பெரிய அரசியல் கருத்துகளைப் புரிந்து கொள்ளும் ருஷ்யத் தொழிலாளிகளின் திறனைக் கண்டு பெரு வியப்பு அடைந்திருக்கிறார்கள். ரூட் தூதுக் கோஷ்டியின்²⁴ ஓர் உறுப்பினர் இதனால் ஆச்சர்யம் அடைந்து பின்வருமாறு கேட்டார்: “மெய்யாகவே கற்றறிந்தவர்கள் எல்லோராலும் அறிவினர்கள், மந்த புத்தி உள்ளவர்கள் என்று கருதப்பட்ட ருஷ்ய மக்களின் பெருந்திரளின் இவ்வளவு பெரிய பகுதியினர் ஏனைய உலகிற்கு இவ்வளவு புதியதும், அதற்கு இவ்வளவு தூரம் முன்னே உள்ளதுமான சமூகத் தத்துவத்தை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டது எவ்வாறு நிகழ்ந்தது?” “இளைஞர் கிறிஸ்துவ சங்கத்தாலும்”²⁵ பிற ஸ்தாபனங்களாலும் அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ருஷ்யத் தொழிலாளிகளுக்குப் புதிராக இருந்தார்கள். இந்தப் “பயிற்சி நிபுணர்கள்” அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள். எனினும் சோஷலிஸத்துக்கும் சிண்டிக்கலிஸத்துக்கும் அராஜக வாதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இவர்கள் அறிந்திருக்கவில்லை. லட்சோப லட்சம் ருஷ்யத் தொழிலாளிகளின் கல்வியிலோ இது அரிச்சுவடிக்கு ஒப்பாயிருந்தது.

அமெரிக்கப் பிரசார ஏஜெண்டுகள் ஜனாதிபதி வில்ஸனின் பதினான்கு அம்சங்கள் பற்றிய உரையின் பிரதிகளை லட்சக்கணக்கில் ருஷ்யாவில் வினியோகித்தார்கள்.

தொழிலாளர்கள் அல்லது குடியானவர்களுக்கு இந்தப் பிரதி களைக் கொடுத்துவிட்டு, “இந்த உரையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவர்கள் கேட்பார்கள்.

”படிப்பதற்கு நன்றாய்த்தான் இருக்கிறது” என்று ருஷ்யர்கள் பொதுவாகப் பதில் அளிப்பார்கள். “ஆனால் இதன் பின்னே ஒன்றும் இல்லை. ஜனாதிபதி வில்சனின் மூளையில் இந்த ஆதர்சங்கள் இருக்கலாம் ஆயினும் தொழிலாளிகள் அரசாங்கத்தை நிர்வகிக்காவிட்டால் சமாதான உடன்படிக்கையில் இந்த ஆதர்சங்களில் எதுவும் இராது”.

ருஷ்யர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட பிரபல அமெரிக்கப் பேராசிரியர் அவர்களுடைய சந்தேகப் போக்கு குறித்து நகைத்தார். இப்போதோ, தமது வெகுளித்தனமான நம்பிக்கையை எண்ணி அவர் நகைக்கிறார். பின்தங்கிய ருஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த சிறு சோவியத்துக்களில் உள்ள இந்த “அறிவு மங்கிய மக்கள்” சர்வதேச அரசியலைத் தம்மைவிட நன்றாகப் புரிந்துகொண்டது எப்படி என்று அவர் அதிசயிக்கிறார்.

பொதுமக்களின் உடனடியான தன்னலத்தைத் தூண்டி விடுவது ஒன்றுதான் அவசியமானது என்ற திட்டத்தின் பேரில் பிரிட்டிஷார் செயல் புரிந்தனர். மக்களை ஏமாற்றித் தம்பால் ஈர்ப்பதற்காகப் பழக்கூழ், விஸ்கி, கோதுமை மாவு ஆகியவற்றுடன் அவர்கள் அர்காங்கேல்ஸ்க் நகருக்கு வந்து சேர்ந்தார்கள். பட்டினியால் நலிந்த மக்கள் இந்தப் பரிசுகளைப் பெற்று மகிழ்ந்தார்கள். ஆனால் இவை தங்களைக் குருடாக்குவதற்கான கைக்கூலிகள் என்பதையும் இந்தப் பொருள்களின் விலை ருஷ்யாவின் பிரதேச முழுமையும் விடுதலையுமே என்பதையும் கண்டதும் அவர்கள் படையெடுப்பாளர்களுக்கு எதிராகக் கிளம்பி அவர்களை நாட்டை விட்டுத் துரத்தியடித்தார்கள்.

ருஷ்யப் பொதுமக்களின் விடாப்பிடியையும், அசையா உறுதியையும் பற்றிய லெனினது நம்பிக்கையைக் காலமும் சரி என மெய்ப்பித்து விட்டது. 1917ஆம் ஆண்டு கூறப்பட்ட பயங்கரமான வருங்கால உரைகளை இன்றைய உண்மை விவரங்களுடன் ஒப்பு நோக்குங்கள். “மூன்றே நாட்களில் அவர்கள் ஆட்சி ஒழிந்துவிடும்” என்று அப்போது கொக்கரித்தார்கள் சோவியத்துக்களின் பகைவர்கள். மூன்று நாட்களும் மேலும் அத்தனை நாட்களும் கழிந்தபின், “அதிகமாய்ப் போனால் மூன்றே வாரங்கள் மட்டுமே சோவியத் நிலைத்திருக்க முடியும்” என்ற கூச்சல் கிளப்பப்பட்டது. மீண்டும் அவர்கள் கூச்சலை மாற்ற நேர்ந்தது. இந்தத் தடவை அது “மூன்று மாதங்கள்” ஆயிற்று. இப்போது, எண் மடங்கு மூன்று மாதங்கள் கழிந்துவிட்டபின் சோவியத்துக்களின் விரோதிகள் தங்கள் ஆதரவாளர்களுக்குக் கூறக்கூடியதெல்லாம் “மூன்று வருஷங்கள்” என்பதே.


22. க்ராஸின் லி.பொ. (1870-1926) – முக்கியமான சோவியத் ராஜதந்திரி, ஆட்சியாளர்.

23. சிச்சேரின் கி.வ.(1872-1936) – முக்கியமான சோவியத் ராஜதந்திரி, ஆட்சியாளர்.

24. ரூட் தூதுக் கோஷ்டி எ.ரூட் (1845-1937) என்பவரின் தலைமையில் 1917ஆம் ஆண்டு ருஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட விசேஷ அமெரிக்கத் தூதுக் கோஷ்டி ருஷ்யா போரிலிருந்து விலகுவதைத் தடுப்பதும் புரட்சி இயக்கத்தை எதிர்த்துப் போராடத் தற்காலிக அரசாங்கத்துக்கு உதவுவதும் இதன் நோக்கம்.

25. இளைஞர் கிறிஸ்துவ சங்கம் இளைஞர்களின் பூர்ஷ்வாஸ்தானம். ருஷ்யாவில் இதன் பிரதிநிதிகள் மதப் பிரசாரமும் சோவியத் எதிர்ப்புப் பிரசாரமும் செய்து வந்தார்கள்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க