ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாதிய தாக்குதலால் தலித் செவிலியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் குடும்பத்தினர் நீதிக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் கீர்த்தி நகரின் ஹட்கோ குவாட்டர் (HUDCO Quarter) பகுதியில் செவிலியர் கவிதா சவுகான் வீடு அமைந்துள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர். தந்தை இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று கவிதாவின் தாய் பிந்து தேவி சவுகான் வீட்டு முற்றத்தைக் கழுவிக் கொண்டிருந்துள்ளார். அந்த தண்ணீரின் சில துளிகள் பக்கத்து வீட்டில் உள்ள ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்களின் எஸ்.யூ.வி வாகனத்தின் மீது தெறித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கவிதா, பிந்துதேவி, 20 வயது சகோதரர் ஆனந்த் ஆகியோரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஆனந்த் கைகளில் நகங்களால் கீறியுள்ளனர் . கவிதாவின் மார்பகங்களை நகங்களால் கீறி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியும், சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியும் உள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து புகார் அளிப்பதற்காக கவிதாவின் குடும்பத்தினர் காலை 8.30 மணிக்கு மாதா கா தான் (Mata Ka Than) போலீஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு ஒன்பது மணி நேரம் காத்திருக்க வைத்துள்ளது போலீசு. பின்னர் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பன்வர் சிங் ஜகாத் ”சர்வர் வேலை செய்யவில்லை” என்று கூறி சாதி வெறியர்களுக்கு ஆதரவாக தன்னுடைய சாதிவெறியை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதியாக, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் அமைதியைச் சீர்குலைத்ததாக சிறிய குற்றத்தின் கீழ் சாதிவெறியர்களின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். பின்னர் வீட்டுக்கு வந்தவர்கள் தங்களின் ஸ்கார்பியோ, எஸ்.யூ.வி வாகனங்களை பாதிக்கப்பட்டவர்களின் வீட்டைச் சுற்றி ஓட்டி அவர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
படிக்க: சாதிவெறியால் அத்துமீறும் திருவாரூர் போலீஸ்
ஏற்கெனவே பயத்திலிருந்த கவிதாவுக்கு இது மேலும் பயத்தை அதிகரித்தது. சாதிய, உடல் ரீதியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு போலீஸ் நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் மனமுடைந்த கவிதா மே 2 ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். அவர் தன்னுடைய தற்கொலை குறிப்பில் “100 நாட்கள் பயத்தில் வாழ்வதை விட ஒரு நாள் சிங்கம் போல வாழ்வது மேல்… எனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நான் போராடினேன். ஆனால் அவர்களும் கூட என்னை ஆதரிக்கவில்லை. சாதிவெறி, நீதிமன்ற வழக்குகள், வேலை வாய்ப்புகள் இல்லாமல் போவது என இதை என்னால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது”, என்று சாதியால் தான் எதிர்கொண்ட கொடூரங்கள் குறித்து விரக்தியுடன் தெரிவித்துள்ளார். இந்த குறிப்பு அவர் எதிர்கொண்ட சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களான ராஜ், விக்கி மற்றும் அவர்களின் தாயார் ஆகியோரை முதன்மை குற்றவாளிகளாக இக்குறிப்பு சுட்டிக்காட்டுகிறது.
மேலும் சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு போலீசு மற்றும் அப்பகுதி கவுன்சிலர் ஜானி தேவி ஆகியோரின் ஆதரவு உள்ளதாகவும் கவிதா கூறியுள்ளார். இவ்வாறு நிறுவன ரீதியாக நடத்தப்படுகின்ற சாதிய தாக்குதலை அவர் தன்னுடைய குறிப்பில் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
கவிதா தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி தலித் மக்கள் மற்றும் கவிதாவின் குடும்பத்தினர் சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், போலீஸ் அதிகாரி ஜகாத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும், அதுவரை கவிதாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப அனுமதிக்கமாட்டோம் என்று வலியுறுத்தி மாதா கா தான் போலீஸ் நிலையத்தைச் சுற்றி வளைத்து பத்வசியா சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாதிவெறித் தாக்குதலில் ஈடுபட்டது, உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் சமூக அந்தஸ்து மற்றும் அரசியல் தொடர்புகள் காரணமாகப் பாதுகாக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். “அவர்களுக்கு எதுவும் நடக்காது, அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மேல் மட்டத்தில் தொடர்புகள் உள்ளன. இந்த விஷயத்தைத் தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று போலீஸ் அதிகாரி ஜகாத் தங்களின் புகார் மனுக்களை நிராகரித்ததாக கவிதாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
படிக்க: எட்டாம் வகுப்பு மாணவன் மீதான தாக்குதல்: சாதிவெறி போதையின் உச்சம்!
போராட்டங்களுக்குப் பிறகும் கூட சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்ட மிருகங்கள் மீது போலீசார் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக கவிதாவை தற்கொலைக்குத் தூண்டியதாக நான்கு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இதனைத் தற்கொலை வழக்காக மாற்றி சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளனர். தற்போது வரை சாதிவெறியர்கள் கைது செய்யப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பாசிச கும்பல் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்ற கொடூரங்கள் நாள் தோறும் அதிக அளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பாசிச கும்பலையும், அதற்குச் சேவை செய்கின்ற நிறுவன ரீதியான கட்டமைப்பையும் வீழ்த்துகின்ற மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram