13.07.2025
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது
மாநில செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப்பிடிப்போம்!
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க நினைக்கும்
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி பாசிசக் கும்பலை முறியடிப்போம்!
பத்திரிகை செய்தி
12.07.2025 மற்றும் 13.07.2025 ஆகிய இரு நாள்களில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில செயற்குழுவானது மாநில அமைப்புச் செயலாளர் தோழர். சாந்தகுமார் தலைமையில் கூடியது. கடந்த மூன்று மாதங்களில் நடந்த வேலைகள் அனைத்தும் பரீசிலிக்கப்பட்டன. சர்வதேச, தேச மற்றும் தமிழ்நாடு தொடர்பான அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த மே 22 ஆம் தேதி பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்ட சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீரவணக்கத்துடன் கூட்டம் தொடங்கியது.
கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு பிரச்சனைகளில் ஊக்கமாகவும் எடுத்துக்காட்டாகவும் செயல்பட்டுள்ள தோழர்களை மக்கள் அதிகாரக் கழகத்தின் செயற்குழுவானது வரவேற்பதுடன் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
குறிப்பாக திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என கொக்கரித்த இந்து முன்னணி, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பலை மதுரை மக்கள் மண்ணைக் கவ்வ வைத்துள்ளனர். போலி முருக பக்த மாநாட்டை தோற்கடித்ததில் பல்வேறு ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மக்கள் அதிகாரக் கழகம், மதுரை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட போராட்டங்களும் முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவையாகும்.
மிகப் பெரிய கலவரத்தை நடத்தி தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கும் சங்கிக் கும்பலை வீழ்த்தி பார்ப்பன எதிர்ப்பு – மதநல்லிணக்க – சமத்துவ மரபை உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்று மக்களை அறை கூவி அழைக்கும் மக்கள் அதிகாரக் கழகத்தின் “முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்!” என்ற மைய இயக்கத்தை தொடர்ந்து மேற்கொள்வது என்றும் மக்களின் அடிப்படை – பொருளாதார – அரசியல் பிரச்சனைகளிலும் ஊக்கமாக செயல்பட்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசக் கும்பலை முறியடிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழக மாநில செயற்குழு உறுதியேற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்களின் எழுச்சியுரையுடன் கூட்டம் முடிந்தது.
தோழமையுடன்
மாநில செயற்குழு,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
***
மக்கள் அதிகாரக் கழகம் இரண்டாவது மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் ட்ரம்ப்பின் கட்டளைக்கிணங்க மோடி அரசு, இந்தியாவை அமெரிக்காவின் வேட்டைக்காடாக மாற்றுவதற்கான பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இராணுவம், கல்வி, வர்த்தகம், அணு சக்தி, விவசாயம், கால்நடை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடும் பாசிச மோடி அரசின் இந்நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.
2. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்கா – இஸ்ரேல் ஜூன் 13-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் தொடுத்தன. இஸ்ரேலின் மொசாத் உளவுப் பிரிவு மூலம் ஈரானின் இராணுவத் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஈரான் கொடுத்த பதிலடி தாக்குதலை சமாளிக்க முடியாத இஸ்ரேல், அமெரிக்காவையும் போருக்குள் இழுத்தது. ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா கொடிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் தொடுத்தது. 12 நாட்கள் தொடர்ந்த இப்போரில் 935 ஈரான் மக்கள் கொல்லப்பட்டுள்ளாதாக அதகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரிந்துவரும் தனது ஒற்றைத்துருவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், மேற்காசியாவில் இஸ்ரேலுக்கு போட்டியாக ஈரான் வளர்வதை தடுப்பதற்கும், ஈரானின் எண்ணெய் வளங்களை சூறையாடுவதற்கும் இஸ்ரேல் மூலம் இப்போரை தொடங்கியது அமெரிக்கா. ஆனால், ஈரான் மக்களின் உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு, உலகம் முழுவதும் அமெரிக்க – இஸ்ரேலின் போர்வெறிக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், அமெரிக்க, இஸ்ரேலுக்கு சொந்த நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக போரை தொடர்ந்து நடந்த முடியாமல் பின்வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இப்போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானதே. எப்போது வேண்டுமானலும் மீண்டும் அமெரிக்கா தனது மேலாதிக்கவெறி காரணமாக போரைத் தொடங்கும் நிலையே நீடிக்கிறது. எனவே, அமெரிக்காவின் இந்த மேலாதிக்கவெறி, போர்வெறிக்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். மேலும், இத்தகைய சூழலில் ஈரானுக்கு ஆதரவு அளிக்காமல், மறைமுகமாக இஸ்ரேலின் போர்வெறிக்கு துணைபோன இந்திய (பாசிச மோடி) அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
3. காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பது, ஹாமாசை ஒழித்துக் கட்டுவதற்கு ஏதுவாக போர் நிறுத்த பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமெரிக்கா – இஸ்ரேல் முயற்சித்து வருகின்றன. இதனால், போர் நிறுத்த பேச்சுவார்த்தை 6 மாதங்களாக இழுபறியில் உள்ளது. எனவே, காசாவை மேலாதிக்கம் செய்யத் துடிக்கும் ஏகாதிபத்திய ஓநாய்களின் சதியை முறியடித்து காசாவில் விரைவில் போர்நிறுத்தம் அமலாவதற்கு துணைநிற்கும் வகையிலான போராட்டதை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
4. “ஆபரேசன் புஷ்பேக்” என்ற பெயரில், இஸ்லாமிய குறிப்பாக வங்கதேச அகதிகளை குறிவைத்து ‘சட்டவிரோத குடியேறிகள்’ என முத்திரைக்குத்தி நாடு கடத்திவருகிறது பாசிச மோடி அரசு. இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாடு கடத்துகிறது பா.ஜ.க அரசு. ஆபரேசன் சிந்தூருக்குப் பிறகு, ஆபரேசன் புஷ்பேக் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் இப்பாசிச நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். இதற்கெதிராக ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
5. அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து “செக்யூலிரசம்” (Secularism) மற்றும் ”சோசலிசம்” ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியுள்ளார். அரசியலமைப்பில் உள்ள செக்யூலிரசம் என்ற சொல் உண்மையான மதச்சார்பின்மையைக் குறிக்கவில்லையென்றாலும், இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குறிக்கும் விதமாக உள்ளது. ஆனால், போலி ஜனநயாகக் கட்டமைப்பில் இருக்கிற இந்த அடையாளங்கள் கூட தனது இந்துராஷ்டிரக் கனவிற்கு தடையாக இருக்கக் கூடாது என்று காவிக் கும்பல் கொக்கரிக்கிறது.
எனவே, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா-வின் பேச்சை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது. மேலும், உண்மையான மதச்சார்பின்மையைக் கொண்டிருக்கும் ஒரு மாற்று அரசியல் கட்டமைப்பை நோக்கிய போராட்டத்தின் தேவையையும் வலியுறுத்துகிறது.
6. ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், வரவிருக்கும் கல்வியாண்டில் (2025-2026) பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய வெளிநாட்டு உதவித்தொகையை (NOS) தேர்ந்தெடுக்கப்பட்ட 106 பேரில் 40 பேருக்கு மட்டுமே வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, “மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப்பிலும்” (MANF) 1,400-க்கும் மேற்பட்ட பி.எச்.டி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும் எஸ்.சி., எஸ்.டி மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான படிப்பு உதவித் தொகை வெட்டிச் சுருக்கப்படுவதும், வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதும் அரங்கேறுகிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கல்வியிலிருந்து விரட்டியடிக்கும் இப்பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உயர்கல்வி பயிலும் SC, ST, OBC மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள படிப்பு உதவித் தொகைகளை உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
7. கர்நாடக மாநிலம் ஐ.பி.எல் வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஜூன் 29-ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் ரத யாத்திரை ஒன்றில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காகவும், காவிக் கும்பலின் இந்து மதவெறிக்காகவும் மக்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இந்தியாவில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசல் விபத்துகள் காட்டுகின்றன. இவ்வாறு மக்கள் பலிகொடுக்கப்படுவதை மக்கள் அதிகார கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
8. மகராஷ்டிராவில், 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மூன்று மாதங்களில் மட்டும் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாடு முழுவதும் விவசாய நெருக்கடி முற்றிவருகிறது. விவசாயத் துறையில் அமல்படுத்தப்பட்டுவரும் கார்ப்பரேட்மயமாக்கத்தின் விளைவாக, விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, விவசாய நிலங்கள், கொள்முதல், விநியோகம் அனைத்தையும் கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றன. தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகள் வேறுவழியின்றி மரணப் படுகுழியில் தள்ளப்படுகின்றனர். இந்த அபாயகரமான போக்கிற்கு எதிராக ஜனநாயக சக்திகள் குரலெழுப்புவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலான மாற்று அரசுக் கட்டமைப்பை வலியுறுத்திப் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
9. மகாராஷ்டிராவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு, பள்ளிகளில் இந்தி மூன்றாவது மொழியாக கட்டாயம் கற்பிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு தரப்பினரும் பா.ஜ.க-வின் இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டங்களைத் தொடங்கினர். மகராஷ்டிர மக்களின் உறுதியான எதிர்ப்பினால், பின்வாங்கிய பா.ஜ.க கும்பல் அம்முடிவை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தி ஆதிக்கத்திற்கெதிரான மகராஷ்டிர மக்களின் இப்போராட்டத்தை கழகம் வரவேற்பதுடன், இந்தி ஆதிக்கத்தை வீழ்த்தும் வரை இத்தகையாக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
10. கடந்த ஒரு வார காலத்தில் ஒடிசாவில் 17 வயது சிறுமி உள்பட மூன்று பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. தலித் மக்கள் இருவர் பசுவைக் கடத்தியதாக பசுக்குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர்.
பா.ஜ.க-வின் இந்து முனைவாக்கத்தால் கிறித்தவர்கள், இசுலாமிய மக்கள் மீதான மதவெறித் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது. பா.ஜ.க.வினரின் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்காத அரசு அதிகாரிகள் பொதுவெளியில் தாக்கப்படுகின்றனர்.
இவ்வாறு, பா.ஜ.க.வின் ஓராண்டு ஆட்சியானது, பாசிசக் கும்பலாட்சியின் அரங்கேற்றத்தைக் குறிக்கிறது. ஆகையால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, பாசிச பா.ஜ.க.வின் ஊடுருவல்களை இப்போதே முறியடிக்கும் வகையில் செயல்பட வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
11. பீகார் மாநிலத்தில் இந்தாண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ‘சிறப்பு தீவிர மறு ஆய்வு’ (Special Intensive Revision – SIR) என்ற பெயரில், பீகாரில் மொத்தமாக உள்ள 7 கோடியே 96 லட்சம் வாக்காளர்களும் தங்களது இந்திய குடியுரிமையை நிரூபிப்பதன் மூலம் வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், பல லட்சக்கணக்கான ஏழை-எளிய, பட்டியலின-சிறுபான்மை மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதுடன் அவர்களின் குடியுரிமையும் பறிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. பா.ஜ.க-வின் கைக்கூலியாக அப்பட்டமாக செயல்பட்டுவரும் தேர்தல் ஆணையத்தின் இந்த மக்கள் விரோதப் போக்கை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
12. கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை கழகம் ஆதரிப்பதுடன் அத்திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
13. கர்நாடக காங்கிரசு அரசு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக / வர்த்தக நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளதைக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் தொழிலாளர் உரிமைக்கு எதிரான இத்திட்டத்தை காங்கிரசு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
14. தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி பிரச்சினை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னைப் பல்கலைகழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் இப்பிரச்சினை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதிகள் மூடப்பட்டு வருவதாக அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் கண்ணன் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே, தி.மு.க அரசு பழுதடைந்த மாணவர் விடுதிகளை உடனடியாக சரிசெய்யவும், மாணவர் விடுதிகளின் இடத்தை வேறு துறைக்கு தாரவார்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். குறிப்பாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதியை மூடும் நடவடிக்கையை உடனடியாக தி.மு.க அரசு கைவிட வேண்டும் என்று கழகம் கேட்டுக்கொள்கிறது.
15. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் 123 படகுகளை உடைத்து கடலில் மூழ்கடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறுவது வன்மையாகக் கண்டித்தக்கது. இலங்கை அரசின் இந்த அடாவடிப் போக்கை உடனே தடுத்திடவும், கடல் எல்லை தொடர்பாக இரு நாட்டு மீனவர்களையும் பேசித் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ஒன்றிய மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
16. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் பாதுகாவலர் அஜீத்குமார் போலீசால் கொட்டடிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் தொடர்புடைய காவல் நிலைய ஆய்வாளர், உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஐவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், போலீசின் அத்துமீறலையும் அராஜகத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு மக்கள் போராட வேண்டும். போலீசால் நடத்தப்படும் கொட்டடிப் படுகொலைக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். அத்தொகையை தொடர்புடைய போலீசின் ஊதியம், பணப்பலன்களில் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
மேலும், பொதுமக்கள் மீதான போலீசின் அத்துமீறல் – அராஜக செயல்களுக்கு உடனுக்குடன் வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கழகம் கேட்டுக்கொள்கிறது.
அதேவேளையில், பாசிசமயமாகிவரும் அரசுக் கட்டமைப்பில் போலீசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. லாக்-அப் படுகொலைகள் உள்ளிட்ட போலீசு காட்டாட்சியைத் தடுக்க வாய்ப்புகளும் இல்லை. இதற்கு மாற்றாக, போலீஸ் துறை மக்களுக்கு கட்டுப்பட்டதாக, மக்களுக்கு தொண்டு செய்யும் வகையிலனதாக இருக்கும் மாற்று அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
17. சென்ற மாதம் விருதுநகர் மாவட்டம் கரியாப்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் மரணம்; இம்மாதத் தொடக்கத்தில் சாத்தூர் வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை விபத்தில் ஒரு தொழிலாளி மரணம் என பட்டாசு ஆலை வெடிவிபத்துகளும் தொழிலாளர்கள் மரணங்களும் தொடர்கின்றன.
பட்டாசு ஆலை வெடி விபத்துகளுக்கு முக்கியமான காரணம், அரசு வகுத்துள்ள விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படுவதில்லை என்பதுதான். அதிகார வர்க்கமும் பட்டாசு ஆலை முதலாளிகளும் கூட்டுச்சேர்ந்தே இந்த விதிமீறல்களை மேற்கொள்கின்றனர். தி.மு.க அரசாக இருந்தாலும், அல்லது எந்த அரசாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கி வாயடைக்கப் பார்ப்பது, வெடிமருந்து கலப்பவர்களின் தவறால் விபத்து ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்படும் மக்களையே குற்றவாளியாக்குவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. எனினும் பட்டாசு ஆலை விபத்துக்கள் அரசின் ஆதரவோடு தொடர்கின்றன. சட்டவிரோத பட்டாசு ஆலைகள் இயங்கும் பகுதியின் வி.ஏ.ஒ, ஆர்.டி.ஓ, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழகம் கேட்டுக்கொள்கிறது.
பட்டாசு ஆலை விபத்துகளைக் கூட இந்த அரசியல் அதிகாரத்தைக் கொண்டு தடுக்க முடியவில்லை என்பதையே நமக்கு உணர்த்துகின்றன. குறைந்தபட்ச உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கே இந்தக் கட்டமைப்புக்கு மாற்றான அரசியல் அமைப்பை உருவாக்குவதற்குப் போராட வேண்டியுள்ளது.
18. மதுரையில் இந்து முன்னணி – பா.ஜ.க கும்பல் நடத்திய ‘முருக பக்தர்’ மாநாடு கலவரத்தைத் தூண்டுவதற்கான ஏற்பாடு என்பதை உணர்ந்து மதுரை மக்கள் இம்மாநாட்டை புறக்கணித்துள்ளனர். மக்கள் ஆதரவு என்ற அம்சத்தில் இம்மாநாடு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. மதுரை மண்ணுக்கே உரிய மதநல்லிணக்க மரபு இதற்கு அடிப்படைக் காரணம். இம்மரபை உயர்த்திப் பிடித்து சங்கிகளை மண்ணைக் கவ்வசெய்த புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கு கழகம் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
19. திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. அதில், நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பானது சனாதன நீதியின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி பாசிசக் கும்பலுக்கு ஆதரவாக பல்வேறு வரலாற்றுத் திரிபுகளோடு வழங்கப்பட்டுள்ளதை கழகம் கண்டிப்பதுடன், நீதித்துறை ஆர்.எஸ்.எஸ்.மயமாகி வருவதன் வெளிப்பாடே இந்தத் தீர்ப்பு என்று தமிழ்நாட்டு மக்களைக் எச்சரிக்கிறது.
பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா போன்றவற்றை இந்துமதவெறி பாசிச கும்பல் கைப்பற்றுவதற்கு நீதிமன்றங்கள் ஒத்துழைத்ததை போல, திருப்பரங்குன்றத்தை சங்கிக் கூட்டம் கைப்பற்றுவதற்கான வாய்ப்பைகளை இத்தீர்ப்பு ஏற்படுத்துகிறது. எனவே, தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்க எத்தணிக்கும் இந்து மதவெறி பாசிச கும்பலின் சதித்திட்டங்களை மக்கள் போராட்டங்களின் மூலமாக முறியடிக்க வேண்டுமென்பதை மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
20. ’முருக பக்தர்கள்’ மாநாட்டில் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசிய இந்து முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் காடேஸ்வரா சுப்பிரமணியன், பா.ஜ.க.வின் அண்ணாமலை, நைனார் நாகேந்திரன், ஆர்.எஸ்.எஸ்-இன் வன்னியராஜா உட்பட பலரின் மீது வழக்கு போடப்பட்டிருப்பதை நமது மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்கிறது. இதற்காக தொடர்ந்து உழைத்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இது, தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக மதுரை மக்களின் மதநல்லிணக்க ஒற்றுமை மரபிற்கு கிடைத்த வெற்றி என்று கழகம் பறை சாற்றுகின்றது.
21. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் பிரச்சாரம் செய்துக்கொண்டிருந்த சி.பி.எம் கட்சித் தோழர்கள் மீது இந்து முன்னணி சங்கிக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், கலவரம் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்து முன்னணி உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தடைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
22. திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி வட்டத்திற்கு உட்பட்ட நெய்காரப்பட்டி, கரடிக்குட்டம், சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள இயற்கை வளங்களை அழித்து மாலிப்டினம் (Molybdenum) கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு இலட்சம் ஏக்கர் வரை இந்தத் திட்டத்திற்கான ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஏலம் விடப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது. இதனால், ஏற்படும் பாதிப்புகளை முன் உணர்ந்து போராடும் பல்வேறு இயற்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் எமது மக்கள் அதிகாரக் கழகமும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், பழனி மலை உட்பட பல்வேறு மலைகளை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு நாசகரத் திட்டத்தைக் கொண்டுவரும் அதேவேளையில் மக்களை ஏமாற்றுவதற்காக ‘முருக பக்தர்’ வேசம்போடும் பா.ஜ.க., இந்து முன்னணி கும்பலை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
23. கோவை KMCH மருத்துவக் கல்லூரியில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கவுன்சிலிங்கில் இடம் பெற்ற மாணவருக்கு, தாடி வைத்திருப்பதை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதை கழகம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக அம்மாணவருக்கு மாற்றுக் கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும் என்றும், மாணவருக்கு இடம் வழங்க மறுத்த கல்லூரி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கழகம் கேட்டுக்கொள்கிறது.
24. கோவை அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் மீது பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து என்.ஐ.ஏ பொய் வழக்கு போட்டுள்ளதை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது. மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விமர்சிக்கும் செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையினர் மீது பாயும் என்.ஐ.ஏ-விற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கழகம் கேட்டுக் கொள்கிறது.
25. தமிழ்நாட்டில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி முதலிடம் வகிக்கும் நிலையில் இந்தாண்டு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். விவசாயிகளின் இழப்பிற்கு ஏற்ப உதவித்தொகை வழங்க வேண்டும். மாம்பழங்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஆதாரவிலையை தீர்மானிக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொளகிறது.
26. மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட சித்த மருத்துவ நூல்கள் பட்டியலில் கிருஸ்தவ, இஸ்லாமிய, மருத்துவர்கள் நூல்களை அங்கீகரிக்க மறுத்துள்ளது. மேலும் சித்த மருத்துவத்தை ஆயுர் வேத மருத்துவமாக மாற்றும் சதித்திட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. சித்த மருத்துவத்திற்கு என தனியான பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம். மேலும் ஒன்றிய அரசு வெளிநாடுகளில் சித்த மருத்துவத்திற்கான அங்கீகாரங்கள் பெற்றுத்தர வேண்டும் என்பதை எமது மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
27. புதுச்சேரிக்கு மாநில உரிமைக் கோரி தொடர்ந்து மக்களும் அரசியல் கட்சியினரும் போராடி வருகின்றனர். இப்போராட்டங்களை கழகம் ஆதரிப்பதுடன் புதுச்சேரிக்கு மாநில உரிமையை உடனடியாக ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
28. அடிப்படை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப்போராட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்கிறது. அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
29. கடலூர் செம்மக்குப்பம் இரயில் விபத்தில் பலியான மூன்று பள்ளி மாவணர்களுக்கு மக்கள் அதிகாரக் கழகம் இரங்கலைத் தெரிவிப்பதுடன், இவ்விபத்திற்கு காரணமான இரயில்வே நிர்வாகத்தின் சீரழிவு என்ற தவறை ஒத்துக்கொள்ளாமல் மூடிமறைக்கும் ஒன்றிய அரசை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram