23.07.2025

தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்;
இந்து அறநிலையத்துறையின் கீழ்
அனைத்து கோயில்களையும் மடங்களையும் கொண்டு வருவதே தீர்வு!

நீதிமன்றத்தின் GAG உத்தரவுக்கு எதிராக போராடுவோம்!

பத்திரிகை செய்தி

ர்நாடகா, மங்களூரில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 1995 முதல் 2014 வரை பல பெண்களின் உடல்களை புதைக்க வற்புறுத்தப்பட்டதாக மேனாள் துப்புரவு பணியாளர் ஒருவர், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

தன்னால் புதைக்கப்பட்ட இளம் பெண்களின் உடல்களில் பாலியல் வன்கொடுமையின் அறிகுறிகளுடன் இருந்ததாகவும், சில உடல்கள் பள்ளி சீருடையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். பிரச்சனைக்குரிய இந்த தர்மஸ்தலா அமைந்துள்ள இடமான மங்களூர் ஆர்.எஸ்.எஸ்-இன் செல்வாக்கு மிகுந்த பகுதியாக இருப்பதும், அந்த தர்மஸ்தலா இந்து அறநிலையத்துறையின் கீழ் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தர்மஸ்தலாவில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக நாடு முழுவதும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெற்றன. தர்மஸ்தலாவின் தர்மகர்த்தா பி.ஜே.பி-யின் எம்.பி வீரேந்திர ஹெக்டெ என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனையடுத்து, இது குறித்து விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.

தர்மஸ்தலா கோயிலின் தர்மகர்த்தா டி. வீரேந்திர ஹெக்டேயின் சகோதரர் ஹர்ஷேந்திர குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் அடிப்படையில், ஊடகங்கள் எந்தவொரு அவதூறு செய்திகளையும் வெளியிட வேண்டாம் என பெங்களூரு சிவில் நீதிமன்றம் கடந்த ஜூலை 18 ஆம் தேதி இடைக்காலத் தடை உத்தரவு (GAG) பிறப்பித்தது.

தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட உள்ளடக்கம் தொடர்பான சுமார் 8,000 தொடுப்புகளை (Links) நீக்கவும் உத்தரவிட்டது.

தர்மஸ்தலா படுகொலைகள், பாலியல் வன்முறை தொடர்பாக பெரும் தேசிய ஊடகங்கள் வாயை மூடி அமைதியாக இருப்பதும், சிறிய ஊடகங்கள் வழியாக வெளியே வந்த செய்திகள் அனைத்தும் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டதும் நாட்டின் மிக இழிவான பத்திரிக்கை சுதந்திர நிலையை எடுத்துக்காட்டுகிறது.

பெங்களூர் சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக யூடியூப் நிறுவனம் ஒன்று மேல்முறையீடு செய்துள்ளது தவிர, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான 19 (1)-இன் கீழான அடிப்படை உரிமைகள் மேற்கண்ட தீர்பின் வழியாக பறிக்கப்பட்டுள்ளதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில்தான் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத தர்மஸ்தலாவில் இந்த பாலியல் படுகொலைகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

தர்மஸ்தலாவில் நடைபெற்ற பாலியல் படுகொலைகள் தொடர்பான விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்றும் நாடு முழுவதும் அனைத்து கோயில்களையும் மடங்களையும் இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கோருவதுடன் ஊடக சுதந்திரத்தை காப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து மக்கள் போராட வேண்டும் என்று ம.அ.கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க