30.07.2025

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் சுற்றுவட்ட மலைவாழ் மக்களைப்
புறக்கணிக்கும் அரசு!

பத்திரிகை செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளில் மொத்தம் 283 கிராமங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான கிராமங்கள் மலைகள் மற்றும் வனத்தை ஒட்டியுள்ளன. இக்கிராம மக்களுக்கு கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்று வரை அரசால் முழுமையாகச் செய்து தரப்படவில்லை. இக்கிராமங்களுக்கு அரசின் ’வளர்ச்சி’த் திட்டங்கள், சலுகைகள் சரியாகச் சென்று சேருவதில்லை. நவீன உலகில் தனித்தீவில் வாழ்வதைப் போல் தான் இந்த மக்களின் நிலைமை உள்ளது.

கெலமங்கலம் ஒன்றியம், பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட தொழுவபெட்ட மலைக் கிராமத்தில் 1 கி.மீ தூரத்தில் கல்பண்டகொல்லை மலைக் கிராமம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குட்டையில் உள்ள நீரைப் பருகி வாழும் நிலை உள்ளது. இதனால், இக்கிராம மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் தெரிவிப்பதாவது:

“எங்கள் கிராமத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை, மின்சார வசதி இருந்தாலும், குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தைப் போல தான் மின் விளக்குகள் ஒளிரும். குறைந்த மின்னழுத்தம் காரணமாக, மின்சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதடைகின்றன. மின் தடை ஏற்பட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ சீர்செய்யப் பல நாட்களாகும். பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாததால், கிராமத்தை ஒட்டியுள்ள குட்டையில் தேங்கி இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறோம்.

“கோடைக்காலங்களில் குட்டையில் உள்ள நீரும் வற்றிவிடுவதால் அப்போது  எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், குட்டை சரிவான பள்ளத்தில் இருப்பதால், வயதான பெண்கள் மற்றும் குழந்தைகள் இப்பள்ளத்தில் இறங்கி தண்ணீர் எடுக்கும்போது, அடிக்கடி தவறி விழும் நிலை உள்ளது. எனவே, எங்கள் கிராமத்தில் ஆட்சியர் ஆய்வு செய்து, குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் அல்லது தொழுபெட்டா கிராமத்திலிருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம், அஞ்சட்டி, தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மலைக் கிராமங்களிலும் இதேபோன்ற நிலைதான் உள்ளது. அஞ்சட்டிக்கு அருகிலுள்ள மலைக் கிராமமான தொட்டமாஞ்சியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கோ அல்லது மருத்துவம், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும் என்றாலோ 25 கி.மீட்டரில் இருக்கும் அஞ்சட்டிக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொட்டமாஞ்சி என்பது 20 சிறிய சிறிய கிராமங்கள் சேர்ந்த பகுதியாகும். இக்கிராமங்களில் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

“எங்கள் கிராமங்களுக்குச் செல்லும் சாலை என்பது கரடுமுரடாகவும் குண்டும் குழியுமாகவும் உள்ளது. அரசு பேருந்து ஒரு நாளைக்கு மூன்று முறை (காலை, மதியம், இரவு) மட்டுமே இயக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் அரசு பேருந்தில் தான் சென்று வருகின்றனர். சிறப்பு வகுப்புகள் அல்லது பிற காரணங்களால் பேருந்தை தவறவிட்டால் அஞ்சட்டி பேருந்து நிலையத்திலேயே மாணவர்கள் தங்கும் நிலை ஏற்படுகிறது. செல்போன் சேவை இல்லாததால் இங்கு தொலைத்தொடர்பே துண்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு மாவட்ட நிர்வாகத்தால் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், செவிலியர்கள் வாரம் ஒருமுறை மட்டுமே வருகின்றனர். மருத்துவர்கள் வருவதே இல்லை. சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், இங்கு குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டால் சரி செய்வதற்கு இரண்டு நாட்கள் ஆகும்’’ என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாலை வசதிகள், இன்ன பிற வசதிகள் வேண்டும் என்றால் விரைந்து நடவடிக்கை எடுக்கும் அரசு நிர்வாகம் உழைக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்து தருவதில்லை.

முதலமைச்சரோ அல்லது அமைச்சர்கள் ஆய்வு என்று வரும்போது மட்டும் சில விசயங்களைச் செய்து தந்தது போல் பம்மாத்து காட்டப்படுகிறது.

பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமே!

  • மலைக் கிராமங்களில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைத்தும் சாலை இல்லாத பகுதிகளுக்கு புதிய சாலைகள் போட்டும் தொடர்ச்சியான போக்குவரத்து வசதியை உறுதிசெய்!
  • மக்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்திடவும் செவிலியர்கள், மருத்துவர்கள் நிரந்தரமாக இருப்பதற்கான நடவடிக்கைகளையும் எடு!
  • அவசர சிகிச்சைகளுக்கு பிரத்தியேக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடு!
  • ஆபத்தான நிலையில் இருக்கும் குட்டையில் நீர் எடுத்து பயன்படுத்தும் கல்பண்டக்கொல்லை மலைக் கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்கு!
  • இதேபோன்று, அனைத்து மலைக் கிராம மக்களுக்குத் தடையின்றி நிரந்தரமாக குடிநீர் வழங்கு!
  • மலைப்பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடு!
  • மலைப்பகுதிகளில் சேவைகளை வழங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ஐ தனியார்மயமாக்குவதைக் கைவிடு!


மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க