01.08.2025
கட்டாய உரிம உத்தரவு:
சிறு தொழில் – சிறு கடைகளை நசுக்கும் சதித்திட்டம்!
பத்திரிகை செய்தி
கிராம ஊராட்சிகளில் வர்த்தகம் அல்லது வணிக உரிமம் வழங்குவதற்கான புதிய சட்ட விதிகளை ஜூலை 9 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994-இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருதத்தின் அடிப்படையில் “தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசென்ஸ்) வழங்குவதற்கான விதிகள்-2025” [Tamil Nadu Village Panchayats (Grant of Trade or Business Licence) Rules, 2025] என்ற பெயரிலான இந்த புதிய சட்ட விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பல்வேறு தொழில்கள் நடத்த, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் வாயிலாக உரிமம் வழங்கப்படுகிறது.
ஆனால், “கிராமப்புற ஊராட்சிகளில், வரைமுறையின்றி தொழில்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்படுகிறது. எனவே, ஊரகப் பகுதிகளில் நடக்கும் தொழில்களை வரைமுறைப்படுத்த, தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில், வர்த்தகம் அல்லது வணிக உரிமம் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும்” என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கிராம ஊராட்சி எல்லைக்குள் பொது அல்லது தனியார் என எந்த இடத்திலும் ஊராட்சி அனுமதி இல்லாமல் எந்த ஒரு வர்த்தகத்தையும் இனி மேற்கொள்ள முடியாது. இதற்கான உரிமத்தைப் பெறுவதற்கான கட்டணங்கள் ஊராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில், கிராம ஊராட்சிகள் வணிக உரிமம் வழங்குவதற்கான விதிகள் 2025 அரசு ஆணையின் படி, தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் 48 வகையான சிறு தொழில்கள் மற்றும் 119 வகையான சேவைத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் இனி தங்கள் தொழிலைத் தொடர வேண்டுமெனில் உரிமம் பெற வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற கடைகளுக்கு ரூ.250 முதல் ரூ.35 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய பேப்பர்கள்-இரும்பு பொருட்கள் விற்பனை, கொரியர் சேவைகள், அச்சகம், இறைச்சி-மீன் கடைகள், தையல் தொழில், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 119 சேவை தொழில்களுக்கு கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், டீக்கடைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 48 தொழில்கள் இதில் அடங்கும்.
பெருநிறுவனங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரை அனைத்து தரப்பினருக்கும் இனிமேல் உரிமம் கட்டாயம் எனும் அரசின் இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் லட்சக் கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்நிலையும் பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகும்.
ஆன்லைன் வர்த்தகம், விவசாயிகள் நகரத்தை நோக்கி செல்லுதல், அரசின் தனியார்மயம் தாராளமயம் உலகமயக் கொள்கைகள் காரணமாக தங்களுடைய தொழில்களுக்கு போதுமான வருமானம் இல்லாத சூழலிலும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக பெரும்பகுதி மக்கள், சிறு கடைகளை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் மிகக் கணிசமானோர் கணவனால் கைவிடப்பட்ட பெண்களாகவும், உடல் உழைப்பு செலுத்த முடியாத வயதானவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களால் நடத்தப்படும் சிறு கடைகளுக்கும் கூட உரிமக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் முற்றாகப் பாதித்து விடும்.
இவை, இதனுடன் நின்று விடப் போவதில்லை. உரிமம் வைத்திருப்பவர்களைத் தேடித் தேடி தொழில் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளில் உள்ளாட்சிகள் ஈடுபடும். வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடை, இட்லிக்கடை ஆகியவற்றுக்கு உரிமம் பெறப்பட்டால், அதையே காரணம் காட்டி, அந்த வீட்டுக்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற மின்வாரியம் முயலும்.
ஏற்கெனவே உள்ளாட்சி பேரூராட்சி நகராட்சி விரிவாக்கத்தினால் அதிக வரி வசூலிப்பதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகப்பட்டுள்ளனர்.
இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் கிராமப்புற பொருளாதாரம் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
இது ஜி.எஸ்.டி, பெட்ரோல் – டீசல், விலைவாசி, சொத்து வரி, மின்சார கட்டண உயர்வு போன்ற பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஒட்டச் சுரண்டி அதைக் கார்ப்பரேட்டுகளிடம் கொடுப்பதற்கான சதித்திட்டமாகும்.
தமிழ்நாட்டு அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கிராம பஞ்சாயத்துகளில் டீக்கடைகள், பெட்டிக் கடைகள் உள்ளிட்ட சிறுகுறு கடைகளுக்கு லைசன்ஸ் தேவையில்லை என அரசு புது விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், இது மட்டும் போதாது. சிறிய கடைகள் மற்றும் தொழில்களுக்கு கட்டாய உரிமம் வழங்கும் முடிவை தமிழ்நாடு அரசு முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
தமிழக அரசே!
- கிராம ஊராட்சிகளில் சிறு தொழில் – சிறு கடைகளுக்கு கட்டாய உரிமம் வழங்கும் முடிவைக் கைவிடு!
- சிறு – குறு தொழில்களுக்கு பாதுகாப்பு வழங்கு!
- ஆன்லைன் வர்த்தகங்களைத் தடை செய்!
- கிராமப்புறங்களில் வணிக வளாகங்களை அரசே கட்டிக் கொடுத்து, கிராம பொருளாதாரத்தை மேம்படுத்து!
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
9488902202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram