09.08.2025

கிருஷ்ணகிரி: தலித் இளைஞரை காரணமின்றித் தாக்கிய சாதி வெறியர்கள்

பத்திரிகை செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பெட்ரோல் தீர்ந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த ரித்திஷ் என்ற இளைஞரை தலித் என்று அறிந்து கொண்டவுடன் 30க்கும் மேற்பட்ட சாதிவெறியர்கள் சாதி ரிஷியாகத் திட்டி தாக்கியுள்ளனர். தாக்கியது மட்டுமல்லாமல் போலீசில் பொய் வழக்கும் கொடுத்துள்ளனர். இதனால் தலைமறைவாகி ஒரு காணொளி வெளியிட்டு விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களிடம் ஆதரவு கேட்டுள்ளார் ரித்திஷ்.

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரித்திஷ் தனது பாட்டிக்கு மாத்திரை வாங்குவதற்காகத் தனது நண்பருடன் ஊத்தங்கரைக்கு சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து சின்னக்கணக்கம்பட்டி என்கிற ஊரில் சாலையோரமாக நின்று தனது நண்பர்களிடம் தொலைப்பேசியில் உதவி கேட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற முதியவர் எந்த ஊரு என்று விசாரித்துள்ளார். நொச்சிப்பட்டி என்று ரித்திஷ் கூறிய உடன் சாதிப்பெயரைச் சொல்லி இழிவுபடுத்தித் தாக்கியுள்ளார்.

“பெட்ரோல் போட வக்கில்லாதவனுக்கு எதுக்குடா வண்டி, பறை தே** பசங்களே”

“பறை தே*** பயலே உனக்கு அவ்வளவு தைரியமாச்சா, என்னிடம் கைநீட்டிப் பேசும் அளவிற்கு.. உனக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சா” என ரீப்பர் கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளார். தாக்கியதில் ரித்திஷின் விரல்கள் வீங்கியுள்ளது.

இந்த முதியவர் மட்டுமல்லாமல், இதனை அங்கு கவனித்துக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட சாதிவெறியர்கள் சேர்ந்து இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் பெண்கள் அதிகமாக இருந்ததாகத் தெரிவிக்கிறார் ரித்திஷ்.

பெண்கள் தாக்கும் பொழுது,”நெச்சிப்பட்டி பசங்க, பறை பசங்க; அவங்க அப்படிதான் பண்ணுவாங்க, விட்டுராதிங்க; நம்ம மேல இருக்குற பயம் போயிரும்” என சாதிரீதியாக இழிவுபடுத்தியுள்ளனர்.

அந்த வழியாக வந்த ஊர்க்காரர்கள் ரித்திஷ் மற்றும் அவரது நண்பரையும் மீட்டுக் கொண்டு செல்லும் போது அவர்களையும் வந்த சாதிவெறியர்கள் தாக்கியுள்ளனர். தாக்கியது மட்டுமல்லாமல் இவர்கள் அனைவர் மீதும் பொய்ப் புகாரும் கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் நெல்லையில் மென்பொறியாளர் கவின் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டபோது குற்றவாளிகள் மீது போலீசு வழக்குப் பதிவு செய்வதற்கே பல்வேறு போராட்டங்களை நடத்தப்பட வேண்டி இருந்தது.

ஆனால் இங்கே தாழ்த்தப்பட்டவர்கள் என்றவுடன் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தனது ஆதிக்கச் சாதி புத்தியை வெளிப்படுத்தியுள்ளது போலீசு.

மேலும், இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு 5 இளைஞர்கள் கத்தியுடன் இவர்கள் இரண்டு பெயரையும் விசாரித்துள்ளனர். இதனால் உயிர் பயத்தில் ரித்திஷ் மற்றும் அவரது நண்பரும் தலைமறைவாகி தனக்கு நடந்த கொடுமையைக் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

இக்காணொளியில், “போலீசு ஆக வேண்டும் என்பது தான் எனது கனவு. எஃப்.ஐ.ஆர் போட்டார்கள் என்றால், என் வாழ்க்கையே வீணாகப் போய்விடும். எனது வாழ்க்கை வீணாகப் போனால், நான் தற்கொலை தான் செய்து கொள்வேன். இதற்குக் காரணமானவர்கள் பெயர் அனைவரையும் எழுதி வைத்துத் தான் சாவேன்.

எங்க வீட்டுல நான் ஒரு பையன் தான். எங்க அப்பாவும் வேலை செய்றதுல்ல. எங்க அக்கா தான் பார்த்துக் கொள்கிறார். அப்படி இருக்கும்போது நான் தான் முன்னேற வேண்டியுள்ளது. எங்களுக்கு உயிர் பயம் ஆகிவிட்டது. அதனால் தான் தலைமறைவாக ஆகிவிட்டோம்” என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

ரித்திஷ் மற்றும் அவரது நண்பர் மீது நடத்தப்பட்ட சாதிய கும்பல் தாக்குதலை கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்; பொய் வழக்குப் பதிவு செய்த போலீசின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழர். இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க