27.08.2025
மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளை தடை செய்!
பாரம்பரிய நெல் விதைகளை அழிக்காதே!
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
இந்தியாவில் 10,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன. இந்த நெல் ரகங்கள் வறட்சியையும் காலநிலை மாற்றத்தையும் தாங்கி வளரக் கூடியவை. மனித உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியவை. பன்மையான உணவிற்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் உகந்தவை.
ஆனால், ஒன்றிய மோடி அரசு இந்திய விவசாயிகளுக்கு எதிராக மரபணு திருத்தப்பட்ட “டி.ஆர்.ஆர். தன் 100 (கமலா)” (DRR DHAN 100 (Kamala)) மற்றும் “புசா டி.எஸ்.டி. அரிசி – 1” (Pusa DST Rice – 1) என்ற இரண்டு நெல் ரகங்களை கடந்த மே மாதம் 4-ஆம் தேதி அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு (Genetically Modified Crops) தடை உள்ள நிலையில், மரபணு திருத்தப்பட்ட பயிர்கள் (Genetically Edited Crops) என்ற பெயரில் தற்போது இந்த நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அரிசி ரகங்களின் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ள உயிரியல் பாதுகாப்பு (Biosafety tests) சோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை.
இச்செயல் இந்தியாவின் 140 கோடி மக்களின் ஆரோக்கியமான உணவிற்கும், சுற்றுச்சூழலுக்கும், பல்லுயிர் பாதுகாப்பிற்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்த மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் நமது உழவர்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் நெல் இரகங்களிலும் மரபணு கலப்பை ஏற்படுத்தி அவைகளையும் மரபணு மாற்றிய இரகங்களாக மாற்றிவிடும்.
ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்புக்கொண்ட இந்திய விதை சந்தையில், நெல் விதைகள் மட்டும் ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. சராசரியாக நெல் விதை இந்தியாவில் கிலோ ரூ.45-க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் வந்தால் விவசாயிகள் கிலோ ரூ.400-க்கு மேல் விலை கொடுத்து விதைகளை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் காவு வாங்கும் வகையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் இரகங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்த மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
ஒன்றிய அரசின் மேற்கண்ட நடவடிக்கையைக் கண்டித்து, பல்வேறு விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து, கடந்த ஆகஸ்டு 22 அன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை கோரியும், விவசாயிகளுக்கு எதிரான உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து வெளியேறக் கோரியும் கோடிக்கணக்கான இந்திய விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக போர்க்குணத்தோடு போராடி வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. அவர்களுக்கு பாசிச பா.ஜ.க. அரசு துரோகம் இழைத்து வருவதும் நாம் அறிந்ததே.
இந்நிலையில், ஒன்றிய அரசின் மேற்கண்ட நடவடிக்கை, பாரம்பரிய விதைகளை அழித்துவிட்டு, ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளின் வசம் ஒப்படைப்பதற்கு வழிவகுப்பதாகும்.
மரபணு திருத்தப்பட்ட / மாற்றப்பட்ட நெல் விதைகளை தடை செய்யக்கோரியும், விவசாயம் கார்ப்பரேட்மய மாக்கப்படுவதற்கு எதிராகவும் மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியெழுப்புவது அவசியமானதாகும்.
பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்கின்ற, இந்திய விவசாயிகளின் சுயசார்பை உறுதி செய்கின்ற, கார்ப்பரேட்மயமாக்கத்திற்கு முற்றிலும் எதிரான மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை நிலைநாட்டுவதே நிரந்தர தீர்வாக அமையும்.
இத்தகைய அரசியல் – பொருளாதார மாற்றை அடிப்படையாகக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காகப் போராடுவோம்!
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram