27.08.2025
விவசாயிகளின் நலன்களை அடியோடு புறக்கணிக்கும் அரசு!
பத்திரிகைச் செய்தி
கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
- குறிப்பாக, அவரை, துவரை உட்பட 12 வகையான பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் உர மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இம்மானியங்களை பெற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் அவர்களது வங்கி கணக்கிற்கு பணம் விடுவிக்கப்படவில்லை. எனவே, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு உடனடியாக மானியங்களை விடுவிக்க வேண்டும்.
- மேலும், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிப்பதில்லை. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த விவசாயிக்கு மானியம் வழங்கியுள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளை களைய வேண்டும்.
- அதேபோல், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, கேழ்வரகிற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்குவதாக கூறுகின்றனர். இழப்பீடு பெறத் தேவையான ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப்பிக்க ரூ.800 வரை செலவாகிறது. ஆனால், கேழ்வரகு தோட்டத்தை ஆய்வு செய்யும் அலுவலர்கள் ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் மட்டுமே இழப்பீடு பரிந்துரைக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்.
- அதேபோல், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் மின்வாரிய முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவதைத் தடுக்க அங்கு நீண்ட காலமாக பணியாற்றிவரும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.
- போச்சம்பள்ளியில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கூட்டுறவுத்துறையின் மூலம் இ-நாம் முறையில் நடைபெறும் ஏலத்தை விவசாயிகள் பார்வையிடும் வகையில் செய்ய வேண்டும்.
- காமன்தொட்டி ஊராட்சியில் ஏற்கெனவே ஐந்து குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது, மேலும் இரண்டு குவாரிகளுக்கு அனுமதியளிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முயற்சித்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். ஒரே ஊராட்சியில் ஏழு குவாரிகள் நடத்தினால், அங்கு வசிக்கும் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
- போச்சம்பள்ளியில் அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலை தொடங்க வேண்டும்
உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
இவை விவசாயிகளை அரசு தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருவதை துலக்கமாக எடுத்துக்காட்டுகின்றன.
குறிப்பாக, வனவிலங்குகளால் விவசாய விளைநிலங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது தொடர்பான விசயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதி அருகாமையில் உள்ள விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வனவிலங்குகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு எந்தவிதமான குறைந்தபட்ச ஆதரவையும் அரசு தருவதில்லை. வனவிலங்குகளால் விவசாயிகள் கொல்லப்படுவது தொடர்ந்துகொண்டே உள்ளது. இது கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் தொடர் பிரச்சினையாக உள்ளது. நீண்டகாலமாக மக்களுடைய கோரிக்கையையும் தொடர் போராட்டங்களையும் பார்க்க முடிகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகள், கல்குவாரி மாஃபியாக்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக படிப்படியாக காவு கொடுக்கப்பட்டு வருகின்றன என்பது முக்கியமானதாகும்.
வனவிலங்குகள் மக்கள் வாழிடங்களுக்குள், விவசாய நிலங்களில் புகுந்து தாக்குவதற்கு மேற்கண்ட அம்சம் முக்கியக் காரணமாகும். மேலும், வனவிலங்குகள் மக்களை தொடர்ச்சியாக தாக்குவதை தடுப்பதற்கு உறுதியான திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.
மேற்கண்ட விவசாயிகளின் பிரச்சினைகள் நமக்கு எதனை உணர்த்துகின்றன?
விவசாயிகளின் வாழ்வாதார நலன்களைப் பற்றி அரசுக்கு எந்த அக்கறையும் கிடையாது என்பதை உணர்த்துகின்றன.
காலங்காலமாக விவசாயிகள் அரசிடம் கோரிக்கைகள் வைத்து, அலைந்து, ஏமாந்து கொண்டிருப்பதுதான் இந்த மாபெரும் ‘ஜனநாயக’ நாட்டின் உண்மை முகம்.
தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், விவசாயிகளின், உழைக்கும் மக்களின் நலன்களைக் காக்கும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் மாற்று அரசியல், பொருளாதாரக் கொள்கைகளுக்காகவும் போராட்டங்களைக் கட்டியமைப்பதே தீர்வாகும்.
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram