11.09.2025

கிருஷ்ணகிரி நகராட்சி 4 வது வார்டின் அவல நிலை:
நகராட்சி நிர்வாகமே உடனடியாக தீர்வை ஏற்படுத்து!

பத்திரிகைச் செய்தி

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 4வது வார்டு பகுதியில் அங்குள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக, மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக ஆய்வு செய்தோம். இந்த 4 வது வார்டானது ஓலை இஸ்மாயில் தெரு, குப்பம் ரோடு, முத்தாஜா தெரு, தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் தெரு, பக்ரீத் மஸ்தான் தெரு, மக்கான் தெரு, முனுசாமி தெரு ஆகிய தெருக்களை உள்ளடக்கியது. இங்கு தோராயமாக 1,500 பேர் வசிக்கின்றனர். இது பெரும்பாலும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கின்ற பகுதியாகும்.

பிரச்சினைகள்:

4 வது வார்டு தொடக்கத்தில் உள்ள அரபிப் பள்ளிக்கு முன் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதாகி உள்ளது. இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் மின்விளக்கை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அடுத்து, ஓலை இஸ்மாயில் தெரு அருகில், பாதாள சாக்கடைக்கு குழி தோண்டி வைத்துள்ளனர். ஆனால், அதை மூடாமல் விட்டுள்ளனர். மேலும் அந்தச் சாக்கடைக் கால்வாயில் மண் அடைத்துக் கிடக்கிறது. இதனால் 500 மீட்டர் தூரம் வரை கால்வாயில் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. மழை பெய்யும்போது கழிவுநீர் வெளியேறி, சாலைகளில் ஓடுகிறது. இதன் காரணமாக அருகில் இருக்கும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும், அப்பாதையில் நடக்கும் பொதுமக்களும் நோய் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. இது தொடர்பாக முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

அதனையடுத்துள்ள முத்தாஜா தெருவுக்குள் உள்ள குடிநீர் தொட்டி அருகில் உள்ள பாதாள சாக்கடையானது பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாக்கடைக் கழிவுநீர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில்தான் ஓடுகிறது. இதற்கும் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவும் குழந்தைகள், மாணவர்கள், மக்கள் நடமாட்டம் உள்ள வழிப்பாதையாகும். எனவே நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

அடுத்து தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் தெரு பகுதி. இங்கு 2 வது குறுக்குத் தெருவில் கழிவுநீர் செல்வதற்கான கால்வாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கழிவுநீர் செல்லும் வகையில் முறையாக கட்டப்படவில்லை. இதனால் அருகில் உள்ள தனி நபருக்கு சொந்தமான நிலத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கு செடிகள் வளர்ந்து புதரைப் போல காட்சியளிக்கின்றன. அந்த இடத்தை சுத்தம் செய்யக் கோரியும் நடவடிக்கை இல்லை. அங்கு பாம்பு உள்ளிட்ட விசப் பூச்சிகள் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இந்தத் தெருவில் இரவு நேரத்தில் மக்கள் உட்காருவது கூட ஆபத்தான சூழலாக உள்ளது. மழைநீரும் கழிவுநீரும் தொடர்ந்து தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேலும், இந்தத் தெருவிற்கு குடிநீர்க் குழாய் வசதி கிடையாது. இதனால் இங்கு வாழும் 25 குடும்பத்தினர் பக்கத்துத் தெருக்களுக்கு சென்றுதான் குடிநீர் எடுத்து வருகின்றனர். இங்கு குப்பைத் தொட்டியும் கிடையாது. ஆனால் இம்மக்கள் குடிநீர் வரியும், குப்பை வரியும், பாதாள சாக்கடை வரியும் சேர்த்துதான் கட்டுகின்றனர். ஆனால் இவ்வசதிகள் எதுவும் இத்தெருவில் இல்லை. நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக எதுவும் கண்டுகொள்வதில்லை என மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

அடுத்து அருகில் உள்ள பக்ரீத் மஸ்தான் தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் உட்பகுதியில் சிமெண்ட் பூச்சு பூசாமல் கட்டியுள்ளனர். இத்தெருவில் உள்ள சிமெண்ட் ரோடு பாதிதான் போடப்பட்டுள்ளது. பாதித் தெருவுக்கு போடப்படவில்லை. இத்தெருவுக்கு அருகில் உள்ள தனியார் நிலத்திலும் தண்ணீர் தேங்கி, நோய்கள் வருவதற்கான ஆபத்துடன் காட்சியளிக்கிறது.

மொத்தமாக, 4வது வார்டின் பெரும்பகுதி சுற்றுச் சூழலானது நோய்கள் சூழும் ஆபத்துடன்தான் உள்ளது.

மேற்கண்ட பிரச்சினைகளுக்காக பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்று மக்கள் ஆதங்கத்தோடு கூறுகின்றனர்.

”தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி வருகிறார் என்பதற்காக ஆங்காங்கே சாலை வசதிகளும், சில அடிப்படை வசதிகளும் உடனடியாக ஏற்படுத்துகிற நகராட்சி நிர்வாகத்திற்கு, நீண்ட நாட்களாக அவதியுறும், நோய்கள் சூழும் அச்சத்தோடு வாழும் எங்கள் துயரம் மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்று மக்கள் வருத்தத்தோடு கேட்கின்றனர்.

எனவே, கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகமானது, மக்களின் நல்வாழ்வில் அலட்சியம் காட்டாமல், காலம் தாழ்த்தாமல் 4 வது வார்டு மக்களின் மேற்கண்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்களின் சார்பாக மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

மக்கள் அதிகாரக் கழகம் அம்மக்களின் கோரிக்கைக்கு துணைநிற்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பகுதிவாழ் உழைக்கும் மக்களே!

  • வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!
  • நமது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க அமைப்பாய் ஒன்றிணைவோம்!

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமே!

  • 4 வது வார்டு மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்று!
  • அரபிப் பள்ளி அருகில் உள்ள மின்கம்பத்தில் உள்ள பழுதான மின்விளக்கை மாற்றிக் கொடு!
  • சாக்கடைக் கால்வாயில் மண் அடைப்பைச் சரி செய்!
  • முத்தாஜா தெருவில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் வெளியேறுவதற்கு தீர்வு காண்!
  • தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள புதர்களை அகற்று!
  • குடிநீர் வசதி அமைத்துக் கொடு! குப்பைத் தொட்டி வை!
  • பாதாள சாக்கடை உட்புறம் சிமெண்ட் பூசு! வார்டின் அனைத்துத் தெருக்களிலும் சிமெண்ட் சாலை அமைத்துக் கொடு! பாதாள சாக்கடைப் பணிகளை முழுமைப் படுத்து!
  • 4 வது வார்டு மக்களின் சுகாதார வாழ்வை உத்தரவாதப்படுத்து!


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தொடர்புக்கு: 8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க