
11.09.2025
மக்கள் அதிகாரக் கழகத்தின் தலைமை குழு கூட்டத் தீர்மானங்கள்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில தலைமைக் குழுவின் நான்காவது கூட்டம் செப்டம்பர் 09 அன்று உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் இயக்கங்கள், அவற்றின் அனுபவங்கள், படிப்பினைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டன.
கவின் ஆணவப் படுகொலை, தூய்மைப் பணியாளர் போராட்டம் ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகளிலும் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் நேரில் சென்று மக்களுக்கு ஆதரவு வழங்கினார். இவ்விரு விசயங்களிலும் மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இறுதிவரை போராடும் மக்களுக்கு ஆதரவாக துணை நின்றனர். அத்தோழர்களுக்கு தலைமைக் குழு புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இக்காலகட்டத்தில் தேசிய, சர்வதேசிய நிலைமைகளைப் பரிசீலித்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்தி குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை கொன்றுகுவித்து இன அழிப்பு செய்து வந்த இஸ்ரேல், தற்போது காசாவிலிருந்து பாலஸ்தீன மக்களை முற்றிலுமாக வெளியேற்றி காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் பாசிச தாக்குதலைத் தொடுத்து வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீன மக்களுக்கும் போர்வெறி பிடித்த இஸ்ரேல் – அமெரிக்காவிற்கு எதிராக உலகம் முழுவதும் போராடும் மக்களுக்கும் கழகம் ஆதரவை தெரிவிக்கிறது. நமது நாட்டில், “இஸ்ரேல் அரசே, காசா மீதான போரை நிறுத்து” என்ற முழக்கத்தின் கீழ், “பாசிச மோடி அரசே, இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் தூண்டித்திடு!”, “அதானியின் ட்ரோன்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்!”, “இஸ்ரேலின் மீது பொருளாதாரத் தடை விதித்திடு!” போன்ற முழக்கங்களை முன்வைத்து மோடி அரசை பணிய வைக்கும் போராட்டங்களை முன்னெடுக்க புரட்சிகர, ஜனநாயக சக்திகளை மக்கள் அதிகாரக் கழகம் அறைகூவி அழைக்கிறது.
***
2. இந்தியாவின் ஏற்றுமதிப்பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதித்துள்ள பாசிஸ்ட் ட்ரம்பின் சர்வாதிகார நடவடிக்கையையும்;. பல்லாயிரக்கணக்கான சிறு – குறு முதலாளிகளையும் கோடிக்கணக்கான தொழிலாளிகளின் வாழ்வையும் பாதிக்கும் ட்ரம்பின் இந்நடவடிக்கைக்கு எதிராக பெயரளவிற்கு கூட கண்டனம் தெரிவிக்காத மோடி அரசின் அமெரிக்க அடிமைத்தனத்தை கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடங்கி, சட்டத்திட்டங்கள் இயற்றப்படுவது வரை அனைத்தையும் அம்பானி – அதானி கார்ப்பரேட்டுகளின் நலனிலிருந்தே பாசிச மோடி அரசு தீர்மானித்து வருகிறது. இக்கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் சூறையாடி வருகிறது. தற்போது, அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்து இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்துறை மற்றும் பால் உற்பத்தித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட்டு ஒட்டுமொத்த நாட்டையும் அடகு வைப்பதற்கு மோடி அரசு ஆயத்தமாகி வருகிறது.
எனவே, நம் நாட்டின் உழைக்கும் மக்களின் நலனை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவது என்பது உடனடி தேவையாக உள்ளது. புரட்சிகர, ஜனநாயக சக்திகள், விவசாயிகள், சிறு, குறு முதலாளிகள், தொழிலாளர்கள் ஆகியோரை ஒன்றிணைத்துஅமெரிக்காவிற்கு அடிபணிந்து நாட்டை அடிமைப்படுத்திவரும் பாசிச மோடி கும்பலை வீழ்த்துவதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்பதை கழகம் வலியுறுத்துகிறது.
3. பா.ஜ.க. ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் (National Health Mission) கீழ் பணியாற்றும் 16 ஆயிரம் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய 25 ஊழியர்களை பாசிச பா.ஜ.க. அரசு அடாவடியாக பணிநீக்கம் செய்தது.
இந்த எதேச்சதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14,678 தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசிற்கு சம்பட்டி அடி கொடுத்துள்ளனர். முன்னுதாரணமிக்க தொழிலாளர்களின் இப்போராட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்கிறது.
4. ஊபா கருப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர் உமர் காலித் உள்ளிட்ட ஒன்பது பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மாலேகான் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரக்யா சிங் உள்ளிட்ட காவி குண்டர்கள் விடுதலை செய்யப்பட்டுவரும் நிலையில், பாசிச மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் செயற்பாட்டாளர்களை பொய் வழக்கில் சிறையிலடைத்து விசாரணைக் கூட நடத்தாமல் பாசிச மோடி அரசு சித்திரவதை செய்து வருகிறது.
எனவே, உமர் காலித், சார்ஜில் இமாம் போன்ற சமூக செயற்பாட்டாளர்கள், பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் அனைவரையும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கழகம் வலியுறுத்துகிறது.
5. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித்ஷா கும்பல் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் 1,00,250 வாக்காளர்கள் முறையான விவரங்கள் இன்றிமோசடியாக பதிவு செய்துள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளார். ஆனால், மோடி அரசின் கைப்பாவையாகியுள்ள தேர்தல் ஆணையம் தன் மீதான இக்குற்றச்சாட்டுக்களுக்கு நியாயமாக பதிலளிக்காமல் அடாவடித்தனமாக நடந்து வருகிறது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், பீகாரின் “சிறப்பு தீவிர மறு ஆய்வு” உட்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் பெயரளவிலான தேர்தல் ஜனநாயகத்திற்கு சவக்குழி வெட்டிவருவதை வேடிக்கைப் பார்ப்பதுடன் அதற்கு உறுதுணையாக உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால்கூட அவர்களின் ஆட்சியை சட்டப்பூர்வமாகவே கலைப்பதற்கு பதவி நீக்க மசோதாக்களை மோடி – அமித்ஷா கும்பல் கொண்டு வந்துள்ளது. அந்தவகையில், ஒட்டுமொத்தமாக தேர்தல் கட்டமைப்பையே இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்து வருகிறது.
ஆனால், எதிர்க்கட்சிகள் பாசிசமயமாகிவரும் இத்தேர்தல் கட்டமைப்புக்குள்ளேயே ‘நியாயமான’ தேர்தலை நடத்த வேண்டுமென்று பாசிச மோடி கும்பலின் எடுபிடியான தேர்தல் ஆணையத்திடமே கோரிக்கை வைத்து வருகின்றன. இது, உழைக்கும் மக்களை இந்துராஷ்டிர அடிமைத்தனத்தை ஏற்க செய்வதற்கே வழிவகுக்கும்.
எனவே, பாசிசமயமாகியுள்ள இத்தேர்தல் கட்டமைப்பிற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தேர்தலில் பங்கேற்பதற்குத் தடைவிதிக்கும் “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற மாற்றுக் கட்டமைப்பிற்கான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது என்பதை கழகம் வலியுறுத்துகிறது.
6. ஒன்றிய அரசின் அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்திய தேர்வில் அரங்கேறிய முறைகேடுகளுக்கு எதிராகஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், நீட் தேர்வில் 18,000 பேர் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) என்ற பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதை அண்மையில் அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்த பின்னர், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மட்டுமின்றி, ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் நீட் (NEET), க்யூட் (CUET) உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், நுழைவுத் தேர்வுகள் என்பதே இந்தியாவில் மிகப்பெரிய சந்தையாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக இவற்றில் மோசடி-முறைகேடுகள், ஊழல், கொள்ளை உச்சத்தைத் தொட்டுள்ளது. இத்தேர்வு மோசடிகளுக்கு எதிராக வட மாநிலங்களில் மாணவர்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
எனவே, அனைத்துவித நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதுடன், பள்ளிக் கல்வியின் அடிப்படையில் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் ஒருமாற்றுக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில் இப்போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும்
7. மரபணு திருத்தப்பட்ட “டி.ஆர்.ஆர். தன் 100 (கமலா)” (DRR DHAN 100 (Kamala)) மற்றும் “புசா டி.எஸ்.டி. அரிசி – 1” (Pusa DST Rice – 1) என்ற இரண்டு நெல் இரகங்களை அனுமதித்ததன் மூலம், பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் காவு கொடுக்க பாசிச மோடி அரசு வழிவகை செய்துள்ளது.
இந்த மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை மோடி அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தமிழ்நாட்டில் இந்த மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதை கழகம் வலியுறுத்துகிறது. மேலும், பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்கின்ற, இந்திய விவசாயிகளின் சுயசார்பை உறுதி செய்கின்ற, கார்ப்பரேட்மயமாக்கத்திற்கு முற்றிலும் எதிரான மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை நிலைநாட்டுவதே இப்பிரச்சினைக்கும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கும்நிரந்தர தீர்வாக அமையும்.
8. புதுச்சேரி என்.ஆர். காங்கிரசு – பா.ஜ.க கூட்டணி அரசு மின்துறையை தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியின் மின்சாரத் துறையை அதானிக்கு தாரைவார்க்கும் முயற்சியில் என்.ஆர்.காங்கிரசு – பா.ஜ.க. கும்பல் இறங்கியுள்ளது. அதானி மின்துறையை கைப்பற்றினால், மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு கார்ப்பரேட் கொள்ளை தீவிரமாகும்.
மின்சாரத் துறையை அதானிக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கையையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
9. தெலுங்கானா மாநிலத்தில், சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்திவரும் மார்வாடிக் கும்பலுக்கு எதிராக “மார்வாடி கோ பேக்” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் மார்வாடி சேட்டுகள் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுப்படுத்திவரும் நிலையில் முன்னுதாரணமிக்க வகையில் தெலுங்கானா மக்கள் நடத்திய இப்போராட்டத்தை கழகம் வரவேற்கிறது.
10. ஜோதிடம் போன்ற அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை திணிக்கும் வகையில் யூ.ஜி.சி (UGC) வெளியிட்டுள்ள எல்.ஓ.சி.எஃப் (LOCF) வரைவு அறிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிப்பதுடன் அதனை திரும்பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.
***
11. கவின் ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்க்ள் முன்னிலைக்கு வந்தன. மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் இதில் பல இடங்களில் முன்னிலையில் இருந்து செயல்பட்டனர்.
ஆணவப் படுகொலைகள் அதிகரிப்பதற்கு முதன்மையான காரணம், ஆதிக்கச் சாதிவெறி அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பலின் ஆதிக்கம் வளர்ந்து வருவதுதான். ஆகையால், ஆதிக்கச் சாதிவெறி அமைப்புகள், சங்கப் பரிவாரக் கும்பலைத் தடை செய்ய வேண்டும் என்று கோருவதுடன், ஆணவப் படுகொலையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
அதேவேளையில், அதிகரித்து வரும் ஆணவப் படுகொலைகளைக் கட்டுப்படுத்த, ஆணவப் படுகொலை சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
12. எல்.டி.யூ.சி. தலைமையில் சென்னையில் “தூய்மைப் பணியை தனியார்மயமாக்காதே”, “பணி நிரந்தரம் செய்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக உறுதியாக போராடிய தூய்மைப் பணியாளர்களை மக்கள் அதிகாரக் கழகம் வாழ்த்துவதுடன் அவர்களுடைய தொடர் போராட்டங்களுக்கு துணைநிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அமைதியான வழியில் போராடிய தூய்மை பணியாளர்கள் மீது திட்டமிட்ட அடக்குமுறை கட்டவிழ்த்து விட்ட திமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், போராடிய தூய்மைப் பணியாளர்கள், வழக்குரைஞர்கள், மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் போலீசால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு போலீசால் தாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பு.மா.இ.மு, ம.அ.க தோழர்களின் வீடுகளுக்கு சென்று போலீசு மிரட்டியும் உள்ளது. இதனையும் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
SUMS வளர்மதி போலீசால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். மேலும் வழக்குரைஞர் பாரதி, வழக்குரைஞர் புளியந்தோப்பு மோகன் உள்ளிட்டோர் போலீசால் குறிவைத்தும் தாக்கப்பட்டனர். இவ்வழக்கு விசாரணையின் போது ஆறு வழக்குரைஞர்கள் இப்பிரச்சினை தொடர்பாக எவ்விதக்கருத்தும் கூறக்கூடாது என்றும் நீதிமன்றத்தை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஆணையைப் பெற்றுள்ளது. அரசியலமைப்பின் 19(1) அ-இன் படி கருத்துரிமையைப் பறிக்கும் இந்நடவடிக்கையை கழகம் கண்டிக்கிறது. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனே தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கழகம் வலியுறுத்துகிறது.
13. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுப்பட்ட தீர்ப்புகளை வழங்கிய நிலையில், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில், ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பானது வரலாற்றுத் திரிபுகளோடு சங்கிக் கும்பலுக்கு ஆதரவாக வழங்கப்பட்டதை மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக அம்பலப்படுத்தி வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாக, “மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்” என்ற தலைப்பில் மதுரை, சென்னை ஆகிய இரண்டு பெருநகரங்களில் ஜனநாயக சக்திகளின் பேராதாரவுடன் சட்டக் கருத்தரங்கங்களை நடத்தியுள்ளோம். சங்கிக் கும்பலின் கலவரத் திட்டத்தை அம்பலப்படுத்தி முறியடிக்கும் விதமாகமாகவும் ஆடு, கோழி பலியிடும் உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் எமது தொடர்ச்சியான போராட்டங்களை ஜனநாயக சக்திகள் ஆதரவளித்து வருவதற்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து எமது போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்குமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.
14. திருப்பரங்குன்றத்தின் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்ட “பரமசிவமும் பாஷாவும்” என்ற ஆவணப்படத்தைத் திரையிடவிடாமல் மதுரை போலீசு தடுத்தது; தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்த நாளன்று மோடி அரசை விமர்சித்துப் பேசிய சி.ஐ.டி.யூ தோழர்கள் மீது போலீசார் முன்னிலையிலேயே சங்கிக் கும்பல் தாக்குதல் தொடுத்தது; தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இசுலாமியர் குடியிருப்புப் பகுதிகள் வழியாக, இந்துமதவெறிக் கும்பல் விநாயகர் ஊர்வலங்களை நடத்தியது மட்டுமின்றி, இசுலாமியர் வெறுப்பு முழக்கங்களை இட்டு மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சித்துள்ளது; தென்காசியில் விநாயகர் ஊர்வலத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை வீசி சங்கிக் கும்பல் ஆட்டம் போட்டுள்ளது.
இவ்வாறு, இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் தனது பாசிச நடவடிக்கைகளை தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டு வருகிறது. அதேசமயம் தமிழ்நாடு போலீசு இந்துமதவெறி பாசிசக் கும்பலுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டின் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் கருத்துக்களைப் பரப்ப தடை விதிப்பது, முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
15. திருவள்ளூர், காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த வட மாநிலத் தொழிலாளிக்கு நீதி கேட்டுப் போராடிய வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழ்நாடு போலீசு கண்ணீர் குண்டு வீசி தடியடி நடத்தியதையும் கைது செய்ததையும் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது. உயிரிழந்த தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; வட மாநிலத் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென தமிழ்நாட்டு அரசை மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
16. இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 20 இடங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி (ONGC) நிறுவனத்திற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இயற்கை சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் இந்நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானங்களை பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





