டிரம்புக்கு இந்தியாவின் எதிர்வினை எடுத்துரைப்பது என்ன? || சிறுநூல்

வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹40 | தொடர்புக்கு: 97915 59223

டிரம்புக்கு இந்தியாவின் எதிர்வினை எடுத்துரைப்பது என்ன? | சிறுநூல்

லக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், பாசிச டிரம்ப் கும்பல் அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து, உலக நாடுகளை அச்சுறுத்தும் சுங்கவரித் திணிப்புகளைத் தீவிரப்படுத்தி, பொருளாதார – வர்த்தகப் போரை தனக்கே உரித்தான திமிர்த்தனத்துடன் நடத்தி வருகிறது. சரிந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்தைத் தூக்கி நிறுத்த, இத்தகைய அதிரடி – அடாவடித்தனமான நடவடிக்கைகளின் மூலம் அது மூர்க்கமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

மறுபுறம், அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்துக்கு எதிராகச் சவால் விடும் சீனா, ரஷ்யா ஆகிய ஏகாதிபத்தியங்கள் தமது அணிசேர்க்கையை விரிவுபடுத்தி வருவதோடு, பல்துருவ உலக ஒழுங்கமைப்பை நிறுவ முயற்சிக்கின்றன. இவ்வாறாக, ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு இடையிலான முரண்பாடும் மோதலும் தீவிரமடைவதையொட்டி, அதன் எதிரொலியாக இந்தியாவின் அரைக்காலனியத் தன்மையையும், அரசியல் சுதந்திரமற்ற அடிமைத்தனமும், ஆட்சியாளர்களின் ஏகாதிபத்திய விசுவாசமும் வேகமாக அம்பலமாகி வருகின்றன.

டிரம்ப்பின் தற்போதைய சுங்கவரித் திணிப்பு, கொச்சையான இழிவுபடுத்தல்களின் ஊடாக, ஏற்கெனவே அம்பலப்பட்டுப்போயுள்ள இந்தியாவின் பெயரளவிலான சுதந்திரமும், இறையாண்மையும் கிழிந்து கந்தலாகிப் போய்விட்டன. ஊதிப் பெருக்கப்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எனும் மாயத் தோற்றமானது, இன்று காணாமல் போய்விட்டது. இந்திய ஆளும் வர்க்கங்கள் செயல்படுத்திவந்த ஏற்றுமதி அடிப்படையிலான உற்பத்தியானது, ஏற்கெனவே தோல்வியடைந்து நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இச்சூழலில், டிரம்ப் கும்பலின் தற்போதைய சுங்கவரித் திணிப்பின் விளைவாக, இந்தியாவின் பொருளாதாரமானது முட்டுச் சந்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளது.

இதிலிருந்து மீள்வதற்கான வழியாக, அமெரிக்க வல்லரசிடம் அடிபணிந்து நாட்டை மீண்டும் காலனியாக்கி வருவதோடு, அமெரிக்க வல்லரசின் அணிசேர்க்கையில் இந்தியாவைப் பிணைக்க பாசிச மோடி கும்பல் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில் அமெரிக்காவுடன் போடப்படவுள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் விளைவாக, கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்கள் மரணப் படுகுழியில் தள்ளப்படும் பேரபாயம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

கடுகளவும் தன்மான உணர்வின்றி, அமெரிக்க ஏகாதிபத்திய விசுவாசமும் அடிமைத்தனமும் இந்தியாவின் ‘தேசபக்தி’யாக பாசிச மோடி கும்பலால் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. இருப்பினும், தற்போதைய அமெரிக்கச் சுங்கவரித் திணிப்பு அவமானப்படுத்தல்கள் மட்டுமல்ல; பஹல்காம் விவகாரம், குவாட் கூட்டணி, இஸ்ரேலின் பயங்கரவாத இனப்படுகொலை என ஏராளமான நிகழ்வுகளில் மோடியின் பாசிச ஆட்சியை எதிர்ப்பதாகச் சவடால் அடிக்கும் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளும் இந்திய ஆளும் வர்க்கங்களின் அமெரிக்க அடிமைத்தனத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாவோ ஆதரவாகவே நிற்கின்றன.

இந்நிலையில், பாசிச மோடி கும்பலுக்கும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளின் துரோகத்துக்கும் எதிராகப் போராடுவதோடு, இந்தியாவின் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தைத் தூக்கியெறிந்து நாட்டையும் மக்களையும் விடுவிக்க, இரண்டாவது சுதந்திரப் போரை நாம் தொடங்க வேண்டியுள்ளது. நாட்டுப்பற்றும் ஜனநாயக உணர்வும் கொண்ட பாசிச எதிர்ப்புப் போராக அது முன்னேற வேண்டியுள்ளது.

இத்தகைய சூழலில், “அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வுக் குழு” இக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இந்தியா ஓர் அரைக்காலனி – அரைநிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் பெருமுதலாளிகள் தமது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்துள்ள தரகுப் பெருமுதலாளிகள்; அரை நிலப்பிரபுத்துவ உறவுகளை அறுத்தெறிவதன் மூலம் உள்நாட்டு சந்தையை வளர்ப்பதிலோ, தற்சார்பான பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதிலோ ஆர்வம் இல்லாத இந்தியப் பெருமுதலாளித்துவ வர்க்கமானது, ஒரு போதும்முழுமையான, சுயேச்சையான தொழில்துறை முதலாளித்துவ வர்க்கமாக வளரவில்லை; இந்திய ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்திய விசுவாச அடிமைகள் என்ற உண்மைகளை அமெரிக்காவின் தற்போதைய சுங்கவரித் திணிப்பு நடவடிக்கைகளின் ஊடாக, விரிவான சான்றாதாரங்களுடன் வெளிக்கொணர்கின்றன, இக்கட்டுரைகள்.

இந்தியப் பெருமுதலாளிகள் பிற நாடுகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்யும் ஏகாதிபத்திய முதலாளிகளாக வளர்ந்து விட்டனர்; இந்தியா முதலாளித்துவ நாடாகிவிட்டது; இந்தியா அரசியல் சுதந்திரமடைந்துவிட்டது என்றெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளாலும் போலி புரட்சியாளர்களாலும் முன்வைக்கப்பட்ட புரட்டல்வாதக் கோட்பாடுகள் அனைத்தும் எவ்வாறு தவறானவை என்பதை இந்தியப் பொருளாதாரத்தின் யதார்த்த நிலைமைகளிலிருந்து இக்கட்டுரைகள் எடுத்துக்காட்டுகின்றன. அனைத்துலக ஏகபோக நிதியாதிக்கக் கும்பல்களின் தயவில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விரிவடைந்துவரும் இந்தியத் தரகுப் பெருமுதலாளித்துவத்தின் தன்மையையும், குறிப்பாக கார்ப்பரேட் பாசிசத்தின் குறியீடாக உள்ள அம்பானி, அதானி ஆகிய கார்ப்பரேட் தரகுப் பெருமுதலாளிகளின் தன்மையையும், அவற்றின் ஏகாதிபத்திய விசுவாசத்தையும் இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன.

இந்தியாவின் பொருளாதார நிலைமை குறித்த ஆய்வுகளும் கட்டுரைகளும் தமிழில் அரிதாகவே வெளிவரும் சூழலில், நாட்டின் யதார்த்தமான அரசியல் – பொருளாதார நிலைமையையும், அது எந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதையும், காத்திருக்கும் பேரபாயத்தையும் சுட்டிக் காட்டுவதோடு, இதிலிருந்து மீள்வதற்கான மாற்றுப் பொருளாதார வழிமுறைகளையும் இக்கட்டுரைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

இக்கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதியளித்த “அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வுக்குழு”வினருக்கும், “இந்தியப் பொருளாதாரத்தின் கூறுகள்” இதழின் ஆசிரியருக்கும் புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இச்சிறு நூலானது, இந்துவெறி – கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராகத் துவளாமல் போராடிவரும் நாட்டுப்பற்றும் ஜனநாயக உணர்வும் கொண்ட புரட்சிகர – ஜனநாயக சக்திகளுக்கு இன்னுமொரு போராட்ட ஆயுதமாகப் பயன்படும் என்று நம்புகிறோம்.

– புதிய ஜனநாயகம் பதிப்பகம்.

வெளியீடு :
டிரம்புக்கு இந்தியாவின் எதிர்வினை எடுத்துரைப்பது என்ன?

(மும்பையைச் சேர்ந்த “அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வுக் குழு” (Research unit for Political Economy) நடத்திவரும் “இந்தியப் பொருளாதாரத்தின் கூறுகள்” (Aspects of India’s Economy) என்ற ஆங்கில இதழில் (எண்:87, ஆகஸ்ட் 2025) வெளிவந்துள்ள கட்டுரை (What Explains India’s Response to Trump?) மற்றும் இக்குழுவினரது வலைப்பூவில் வெளிவந்துள்ள கட்டுரை (What Else Can They Do?) ஆகியவற்றின் தமிழாக்கம்.)

முதற்பதிப்பு : செப்டம்பர் 2025

வெளியிடுவோர் :
புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049.

தொடர்புக்கு : 97915 59223

நன்கொடை : ₹ 40

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க