24.09.2025
பாசிச இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து!
பத்திரிகை செய்தி
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, பாசிச இஸ்ரேல் அரசின் பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்புப் போரால் தற்போது வரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். குழந்தைகள் குறிவைத்து படுகொலை செய்யப்படுகின்றனர். பட்டினியால் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதியிலிருந்து பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரத்தை (Gaza City) யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது அமெரிக்க அரசின் துணையுடன் கைப்பற்றத் தொடங்கியுள்ளது. இதற்காக காசா நகரத்திலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காக விமானங்கள், ட்ரோன்கள் மூலம் மக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகளை போட்டும், டாங்கிகள் மூலம் குடியிருப்புகளை இடித்தும், இராணுவப் படைகளால் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடுகளை நடத்தியும் மக்களைக் கொன்று குவித்து வருகிறது பாசிச இஸ்ரேல் அரசு.
இதன் விளைவாகத் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக லட்சக்கணக்கான மக்கள் காசா நகரத்தை விட்டு வெளியேறி எகிப்து ரஃப எல்லையை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர். இதன் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி காண்போரின் நெஞ்சை உலுக்குகின்றன.
இதற்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் தங்கள் நாடுகள் இஸ்ரேலுடன் கொண்டுள்ள அரசியல் ராணுவ ரீதியான உறவுகளை ரத்து செய்வதற்காகவும் பொருளாதாரத் தடையை விதிப்பதற்காகவும் நிர்ப்பந்திக்கும் வகையிலான போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
மேலும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக தற்போது அறிவித்துள்ளன. ஆனால், பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தைத் தற்போது தலைமையேற்று நடத்தும் ஹமாஸ் அமைப்பை அவை நிராகரிக்கின்றன. இது அந்தந்த நாடுகளில் நடைபெறும் பாலஸ்தீன ஆதரவு மக்கள் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கையேயாகும்.
இந்தியாவிலும் பாசிச இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு அதானியின் ட்ரோன்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்து இருப்பது மட்டுமல்லாமல் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இஸ்ரேலுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பாசிச மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
பாசிச இஸ்ரேலே பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து!
ஹமாசை நிராகரித்து பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் ஏகாதிபத்தியங்களின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாசிச இனவெறி இஸ்ரேலுடன் அரசியல் பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் ராணுவ உறவுகளை உடனே ரத்து செய்ய வேண்டும்!
இன அழிப்பு போர்க் குற்றவாளி பாசிச நெதன்யாகுவை கைது செய்து மக்கள் மத்தியில் தண்டிக்க வேண்டும்!
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram