அவன் ஜென் சி, நீ பகத்சிங்!
அவனை உனக்குத் தெரிந்திருக்கலாம்,
அதில் வியப்பேதுமில்லை.
உன்னை அவனுக்குத் தெரியும்,
அதற்கு
நீ வியப்படையத் தேவையில்லை,
ஏனென்றால்,
அவன் பகத்சிங்!
அவனுக்கும் உனக்கும்
கால இடைவெளி
ஒரு நூற்றாண்டு.
அவனையும் உன்னையும்
சூழ்ந்திருக்கும்
அரசியல் இடைவெளியோ
சில நூலிழைகள்!
இதைப் புரிந்து கொள்ளும் போது
நீ வியப்படையப் போவதில்லை.
000
1907
அப்போதுதான் அவன் பிறந்தான்.
அப்பனும் சித்தப்பனும் சிறைக்கொட்டடியில்.
மத அடிப்படையில் வங்கப் பிரிவினை
அதனை எதிர்த்துப் போராடியது
அவர்கள் செய்த ‘குற்றம்’
1913
அப்போது அவன் சிறுபிள்ளை.
தோட்டத்தில் துப்பாக்கியை நட்டு
விளையாடிக் கொண்டிருந்தான்.
“எதற்கு துப்பாக்கியைப் புதைக்கிறாய்?”
இது தாத்தா கேட்டது.
“விடுதலைப் போராட்டத்திற்கு
துப்பாக்கிகள் வேண்டுமே,
அதற்காக நடுகிறேன்”.
இந்த பதில்,
அவனிடம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்த
விடுதலை உணர்வின் வெளிப்பாடு.
1915
அவன் விடுதலைப் போராட்டத்திற்கான
மாணவர் சங்கத்தில்
உறுப்பினரானான்!
அப்போது அவனுக்கு வயது 8.
1919
ரௌலட் சட்டத்திற்கு எதிரான
போராட்டங்கள் அரங்கேறின.
ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக்கில்
பச்சைப் படுகொலை அரங்கேறியது.
உடனே அமிர்தசரஸ் சென்றான்.
அப்போது அவனுக்கு வயது 12.
ரத்தம் தோய்ந்த மண்ணை
வீட்டுக்கு எடுத்து வந்தான்.
அவற்றியே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
மக்களின் குமுறல்
மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
பல நாட்கள் உறங்காமல் தவித்தான்.
அவனுக்குள் குமுறிக் கொண்டிருந்தது
வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு.
1922
ஒத்துழையாமை இயக்கத்தை
திருப்பப் பெற்றார் காந்தி.
காந்தியின் மீதிருந்த
மதிப்பை திருப்பிக் கொண்டான் பகத்சிங்.
அரசியலில் துரோகத்தை
உணர்ந்த தருணமது.
அப்போது அவனுக்கு வயது 15.
1924
கான்பூருக்குச் சென்றான்.
அக்காலத்தில்
அவன் அரசியல் கட்டுரையாளன்.
விடுதலை உணர்வூட்டும்
கட்டுரைகளை எழுதினான்.
அப்போது அவன் கட்டிய மாணவர் அமைப்பு (சபா)
இந்துஸ்தான் குடியரசு சபா.
அது, அவன் அமைப்பாளனாக வளர்ந்த காலம்.
1927 அக்டோபர்,
தசரா குண்டுவெடிப்பில்
மக்கள் பலர் பலியாகினர்.
தோழர்கள் மீது
பொய்வழக்கைப் போட்டது,
பிரிட்டீஷ் போலீசு.
பகத்சிங் சிறை சென்றான்,
குற்றம் நிரூபிக்கப்படவில்லை,
விடுதலையானான்.
அவனது தீவிரமான செயல்பாட்டின்
எதிர்வினையை உணர்ந்த தருணமது.
1928 ஜூலை,
டெல்லியில் மாநாடு.
புரட்சிக் குழுக்களை ஒருங்கிணைத்தான்.
இங்குதான்
இந்துஸ்தான் குடியரசு சபா
இந்துஸ்தான் சோசலிச குடியரசு சபாவாக
பரிணமித்தது.
அவன் மார்க்சிய-லெனினிய
சித்தாந்ததைத் தழுவினான்.
இது, அவன் கம்யூனிஸ்ட் தலைவராக பரிணமித்த காலம்.
இப்போது அவனுக்கு வயது, 21.
இதோ,
இந்த கட்சியின் மத்திய செயற்குழு.
அக்குழுவில்
அவனுடன்
ஆசாத், சுகதேவ் மற்றும்
பல தோழர்கள்.
அதன் கீழ் ஒரு படை.
அதன், காமாண்டராக ஆசாத்.
“சைமன் கமிசனுக்கு எதிராக
மக்கள் இயக்கத்தைத் துவங்குதல்”
இது, அதன் உடனடி அரசியல் நடவடிக்கை.
தீர்மானத்தை செயலுக்குக் கொண்டு சென்றான்.
1928 அக்டோபர் 30
லாலா லஜபதிராய் தலைமையில்
அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்.
பகத்சிங்கும் அவன் தோழர்களும்
கருப்புக் கொடிகளுடன் முன்னணியில்.
“சைமனே திரும்பிப் போ!
புரட்சி ஓங்குக!”
இது, அவர்களின் முழக்கங்கள்!
ஸ்காட்,
போலீசு கண்காணிப்பாளர்.
லஜபதிராயை மிருகத்தனமாக தாக்கினான்.
17 நாட்கள் உயிருக்குப் போராடி
நவம்பர் 17, லஜபதிராய் மறைந்தார்.
நாடே கொந்தளித்தது.
பகத்சிங்கும் அவனது தோழர்களும்
ஸ்காட்டுக்கு நாள் குறித்தனர்.
அது, டிசம்பர் 17.
குறி தவறியது
சாண்டர்சன் கொல்லப்பட்டான்.
அவன் துணைக் கண்காணிப்பாளர்.
ஓரிரு நாட்களில்
தோழர்களின் துண்டுபிரசுரப் பிரச்சாரம்.
“லாலாஜியின் மறைவுக்கு பழித் தீர்ப்பு,
நாட்டிற்கு நேர்ந்த அவமானம் துடைப்பு!”
நாடெங்கும் பரவியது இச்செய்தி!
ஆம், அவனும் அவனது தோழர்களும்
நாடறிந்த தலைவர்களான காலமது.
அப்போது, அவன்
21 வயதைக் கடந்து கொண்டிருந்தான்.
1929, ஏப்ரல் 8,
நாடாளுமன்ற அவை நிறைந்திருந்தது.
பொது பாதுகாப்பு மசோதா,
தொழில் தகராறு மசோதா
தாக்கல் செய்யப்பட்டன.
கருத்துரிமையை நசுக்கவும்
தொழிலாளர்களைக் கொத்தடிமையாக்கவும்
கொண்டுவரப்பட்ட மசோதாக்கள் இவை.
“பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக,
புரட்சி ஓங்குக!”
பகத்சிங்கும் படுகேஷ்வர் தத்தும்
நாடாளுமன்றத்தில் முழங்கிய முழக்கங்கள்.
நாடாளுமன்ற மண்டபத்தின் மத்தியில்
வெடிகுண்டுகளை வீசி முழங்கிய முழக்கங்கள்.
“கேளாத செவிகள் கேட்கட்டும்”
இது, அவர்கள் பறக்கவிட்ட
துண்டு பிரசுரத்தின் தலைப்பு!
“அடக்குமுறைகள், முடிவுறப் போவதில்லை,
விடுதலை கிடைக்கப் போவதுமில்லை”
“நாட்டின் விடுதலையை
அகிம்சையால் அல்ல,
ஆயுதத்தால் மட்டுமே சாதிக்க முடியும்”
“புரட்சி நீடூழி வாழ்க!”
இவை, அந்த பிரசுரம்
நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்த செய்தி!
1929, ஜூன் 6
‘குற்றத்தை’ மறுக்கவில்லை.
பகத்சிங்கும் தத்தும்
வெளியிட்ட வாக்குமூலம் இது.
“போலி நாடாளுமன்றம்,
இந்திய அடிமைத்தனத்தின் அடையாளம்”
“தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள்
பறிக்கப்படுகின்றன”
“கேளாத செவிகள் கேட்கட்டும்!”
“மனித உயிர்கள் மதிப்புமிக்கவை”
“தனிநபர்களை அழிப்பது எங்களது நோக்கமல்ல”
“எங்களை அழிப்பதன் மூலம்
இந்நாட்டை அழிக்க முடியாது”
“புரட்சி என்பது வெடிகுண்டுகளின் வழிபாடு அல்ல”
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்படும்”
இவை, அவர்கள் விளக்கிய கொள்கைகள்.
இப்போது அவனுடைய தோழர்களுடன்
அவனும் சிறையில்.
“அரசியல் கைதிகளை
திருடர்களைப் போல நடத்தாதே!”
தொடங்கியது சிறையிலும் போராட்டம்!
அது,
63 நாட்கள் நீடித்த உண்ணாநிலைப் போராட்டம்!
ஜதீந்திர தாஸ் மரணம்.
தற்காலிகமாக பின்வாங்கியது அரசு.
மீண்டும் தொடங்கியது
அரசியல் கைதிகள் மீதான அடக்குமுறைகள்.
மீண்டும் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிப்பு.
சிறையில் இருந்து பறந்தன
அறிக்கைகள், கடிதங்கள்.
நாட்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்தன.
“தோழர்களை விடுதலை செய்!”
போராட்டங்கள் வெடித்தன.
காந்தியின் துரோகம் திரைகிழிந்தது.
விடுதலைக் கனல் மூண்டெழுந்தது.
தனது போராட்டத்தால்,
மக்களை இயக்கினான் அவன்.
வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்
வேகமாக தண்டனை வழங்கிவிட வேண்டும்
இது, அரசுக்கு இருக்கும் நிர்பந்தம்.
அரசுக்கு மட்டுமா,
துரோகிகளுக்கும் அதே நிர்பந்தம்.
அதன் வெளிப்பாடு,
லாகூர் சதிவழக்கு அவசரச் சட்டம்,
எதிர்வாதத்திற்கான வாய்ப்புகள் மறுப்பு
இன்ன பிற அடக்குமுறைகள்.
இனி என்ன செய்வது,
“பிரிட்டிஷ் அரசாங்கத்தின்
நீதிமன்றத்தைப் புறக்கணிக்கிறோம்”
இது,
எதிர்வாதம் செய்ய
அனுமதி மறுக்கப்பட்டவர்களின் வாக்குமூலம்.
வாக்குமூலம், அரசியல் அனலைக் கிளப்பியது.
“என்ன செய்தாலும் அரசியல் செய்கிறார்களே”,
இது, துரோகிகளுக்கு எதிரிகளுக்கும்
வாக்குமூலம் ஏற்படுத்திய கலக்கம்.
பகத்சிங், இராஜகுரு, சுகதேவ்
மூவருக்கும் மரண தண்டனை.
மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை.
தோழர்களுக்கும் தந்தைக்கும் எழுதினான்
கடிதங்கள்.
“எல்லாம் முடிந்துவிட்டது;
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை”
என்று சோர்வுறத் தேவையில்லை
“தற்கொலை தவறான அரசியல்”
“மரண தண்டனை
மக்களைத் தட்டியெழுப்புவதற்கு
கிடைத்த வாய்ப்பு”
இது, தோழர்களுக்கு சொன்ன செய்தி.
“சட்டவாதங்களைப் பயன்படுத்தி
விடுதலைப் பெறுவது,
அரசியல் நோக்கத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாகும்”
“இதன் மூலமாக, நீங்கள் எனது முதுகில் குத்திவிட்டீர்கள்”
“ஒவ்வொருவரின் மனவுறுதியும்
சோதிக்கப்படும் தருணம் இதுவே.
நீங்கள் அதில் தோற்றுவிட்டீர்கள்”
இது, தந்தைக்கு அவன் சொன்ன விமர்சனம்.
பகத்சிங், இராஜகுரு, சுகதேவ்
விடுதலைக்கான போராட்டங்கள்
நாட்டையே உலுக்கி எடுத்தன.
காந்தி-இர்வின் பேச்சுவார்த்தை
நடந்து கொண்டிருந்தது.
காங்கிரசு கட்சிக்குள் ஒளிக்கத் தொடங்கியது
மூவரின் மரண தண்டனைக்கெதிரான குரல்.
கராச்சியில் காங்கிரசு மாநாடு தொடங்க இருந்தது.
மாநாடு நடந்தால்,
மூவரின் மரண தண்டனைக்கான தீர்மானம்
நிறைவேற்ற வேண்டியிருக்கும்.
1931, மார்ச் 24
மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நாள்.
“தூக்கிலிடாதீர்கள், சுட்டுக்கொல்லுங்கள்”
இது, விடுதலை வீரர்களின் முழக்கம்.
ஆனால்,
கராச்சி காங்கிரசு மாநாட்டிற்கு
முன்தினமே
அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டனர்.
அது, மார்ச் 23.
மூவரின் உடல்களை மறைத்து எரித்தனர், எதிரிகள்.
கராச்சி மாநாட்டில் இரங்கல் தெரிவித்தனர், துரோகிகள்.
கொதித்தெழுந்து காந்தியை முற்றுகையிட்டனர், மக்கள்.
கருப்பு கொடிகளால் சூழப்பட்டது,
கராச்சி மாநாடு.
காந்தியின் முகத்திரை கிழிந்து தொங்கியது.
1931, மார்ச் 22.
பகத்சிங்
இசைத்துச் சென்ற
புரட்சியின் கீதத்தைக் கேள்!
“ஒரு சிறைக் கைதியாகவோ
நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ
வாழ எனக்கு விருப்பமில்லை.
என் பெயர்
இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னமாகியுள்ளது.
புரட்சிகரக் கட்சியின்
கொள்கையும் தியாகமும்
ஒருவேளை நான் உயிர் வாழ்ந்தாலும்
என்னால்
ஒருபோதும் அடைய முடியாததொரு
உயரத்திற்கும் அப்பால்
என்னை ஏற்றி வைத்துள்ளன.”
“… துணிச்சலோடும் புன்னகையோடும்
நான் தூக்குமேடையேறினால்,
அது,
இந்தியத் தாய்மார்களின்
உணர்வுகளைத் தூண்டும்.
தங்களது பிள்ளைகளும்
பகத்சிங்கைப் போல
ஆகவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள்.
இதன் மூலம்,
நமது நாட்டின் விடுதலைக்காக
தங்களது உயிர்களையும் தியாகம்
செய்யச் சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை
பெருமளவில் அதிகரிக்கும்.
அதன் பிறகு,
புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு
ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்!”
இந்த இறுதி கீதத்தை
அவன் இசைத்த போது,
வயது 23-ஐ தாண்டவில்லை.
1931 மார்ச் 23,
மாலை 7.35 மணிக்கு
லாகூர் சிறை மதில்களுக்குள்
ஓங்கி ஒலித்தன,
அந்த வீரர்கள் இறுதியாக முழங்கிய முழக்கங்கள்.
“ஏகாதிபத்தியம் ஒழிக”,
“புரட்சி ஓங்குக!”
தூக்குக் கயிறுகள்
அவர்களது குரல்வளையை நெறித்தன.
அவர்களது உணர்வுகள்
நமக்குள் ஊடுறுவின,
தலைமுறை தலைமுறையாக.
000
பகத்சிங்கும்
அவனது தோழர்களும்
அன்றைய இளந்தலைமுறை.
அதற்கு அவன் தலைவன்.
இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னம்.
நூற்றாண்டுகளைக் கடந்தும்
அவன் மூட்டியக் கனல்
எரிந்து கொண்டிருக்கிறது.
செரபண்டராஜ், பாலன்,
முத்துக்குமார், அனிதா…
இளந்தலைமுறைகள்
அனைத்தினதும்
நம்பிக்கைச் சின்னம், அவன்.
உனக்கும்தான்.
நூற்றாண்டுகளுக்கு முன்பு,
காலனியாதிக்கம்.
இன்று, மறுகாலனியாதிக்கம்.
அன்று, காங்கிரஸ்,
இன்று, ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.
அன்று, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சர்வாதிகாரம்,
இன்று, அம்பானி, அதானிகளுக்காக பாசிச சர்வாதிகாரம்.
அன்றும் இன்றும்
தேவை, விடுதலைப் போராட்டம்!
நாட்டுப்பற்று, சோசலிச உணர்வு,
பார்ப்பனிய எதிர்ப்புணர்வு,
தியாகம், அர்ப்பணிப்பு…
இவை, இளந்தலைமுறையின் இயல்புகள்.
இன்றைய இளந்தலைமுறையை
“ஜென் சி”, “ஆல்ஃபா” என்று
வகைப் பிரித்துள்ளது முதலாளித்துவம்.
பெயர்களை மாற்றிவிடுவதால்
இளந்தலைமுறைகள் என்பது
மாறிப் போய்விடுமா என்ன?
ஆம்,
அன்றைய ஜென் சி,
அன்றைய ஆல்ஃபா பகத்சிங்!
இன்றைய பகத்சிங், நீதான்!
பரமேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram