28.09.2025

கரூர் – விஜய் பிரச்சாரம் – கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி!
விஜய்தான் முதல் குற்றவாளி!

தமிழ்நாடு அரசே! மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் மீது
நடவடிக்கை எடுத்திடுக!

பத்திரிகை செய்தி

ரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் இதுவரை 39 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொள்கை கோட்பாடு புரிதல் ஏதுமின்றி ஆட்சி மீதான எதிர் கருத்துக்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு கூட்டத்தை தலைமை தாங்குகின்ற விஜய் இந்த துயரத்துக்கு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். அவருடைய கட்சியின் சார்பில் இறந்தவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

ஆனால் விஜயின் செயல்பாடுகள் அவர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து மக்கள் மீது எள்ளளவும் மரியாதை இன்றி தன்னை ரசிக்க வரும் ரசிகர்களை வைத்து பிழைப்பு நடத்துவதை தவிர வேறு ஒன்றாக இருந்ததில்லை. தனது ரசிகர்களை ஒரு கட்சியினராக மாற்றி அவர்களை முறைப்படுத்துவது தொடர்பான எவ்வித திட்டமும் தேவையும் இல்லாமல் தான் இதுவரை விஜய் இருக்கிறார்.

சுமார் 7 மணி நேரம் வரை மக்களை சோறு, தண்ணீர் இன்றி காக்க வைப்பதும் வந்தவுடன் சில நிமிடங்கள் மட்டுமே உரையாற்றுவதும் என்று இருக்கக்கூடிய இந்த இழிவான அரசியல் தமிழ்நாட்டுக்கு ஒருபோதும் தேவையில்லை. இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கவர்ச்சிவாத அரசியலின் தொடர்ச்சி.

இந்த பிரச்சனையில் ஊடகங்கள் அடுத்த குற்றவாளியாகின்றன. ஒரு நிகழ்வுக்கு விஜய் வருவதற்கு பல மணி நேரங்கள் முன்னிருந்து தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்புகின்றன. மக்கள் கூடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு கண்டிப்பாக அங்கே தவறான நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது என்பதை அறிந்தாலும் கூட கூட்டத்தை கூட்டுவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சமூக அக்கறையின்றி இப்போதும் கூட இறந்து போனவர்களின் குடும்பத்தினரை பேட்டி எடுப்பது என்பதன் மூலமாக தன்னுடைய டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தி பணம் சம்பாதிக்கின்றன ஊடகங்கள்.

நுகர்வு வெறி கலாச்சாரத்தின் வெளிப்பாடாக பெரும் கோயில்களின் திருவிழாக்கள், அரசுத் திட்டமிட்டு உருவாக்கப்படும் கூட்டங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுவதை காண்கிறோம்.

இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட கண்காணிப்பாளரும் பொறுப்பேற்க வேண்டும். குறைவான பேருக்கு அனுமதி வாங்கி பல மடங்கு அதிகமான கூட்டத்தைக் கூட்டுகிறார்கள் என்றால் அதனால் இழப்புகள் ஏற்படும் என்பதை அறியாததல்ல அரசு. அந்தக் கூட்டத்தை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட செயல்களை மேற்கொள்ளாமல் தனக்கும் இந்த நிகழ்வுக்கும் சிறிதும் தொடர்பில்லை என்பது போல மாவட்ட நிர்வாகமும் அரசும் செயல்படுகின்றது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

ஆகவே கரூரில் நடைபெற்ற துயர நிகழ்வுக்கு நடிகர் விஜயை முதல் குற்றவாளியாக சேர்த்து வழக்கு பதிவு செய்வதும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க