02.10.2025
ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய
இரண்டு தமிழ்நாட்டு போலீஸ்காரர்கள்!
தொடரும் போலீசின் குற்றச்செயல்களுக்கு முடிவு கட்டுவோம்!
கண்டன அறிக்கை
ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று திங்கள்கிழமை இரவு திருவண்ணாமலைக்கு சென்றது. வாகனத்தில் ஓட்டுநர் அவரது அக்காள் மற்றும் அக்காள் மகளான 19 வயது இளம்பெண்ணை உடன் அழைத்து வந்துள்ளார்.
திருவண்ணாமலை புறவழிச்சாலையில் சென்ற அந்த வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்த இரு பெண்களையும் வலுக்கட்டாயமாக இறக்கி தோப்பிற்குள் கடத்திச் சென்று தாய் முன்னரே, இளம்பெண்ணை இரு போலீஸ்காரர்களும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தாயாரும் புறவழிச் சாலையில் அழுது கொண்டிருந்ததை பார்த்த மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதன் மூலமே இப்பிரச்சனை வெளியே தெரிந்தது. இதற்குப் பிறகு அந்த விசாரணையில் 2 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு தற்பொழுது இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
இரண்டு போலீஸ்காரர்களுக்கு இப்படிப்பட்ட துணிச்சல் எப்படி வந்தது? தாங்கள் எப்படிப்பட்ட குற்றங்கள் செய்தாலும் அதை மூடி மறைக்கும் அதிகாரம் தங்களுக்கு உள்ளது என்ற அதிகாரத் திமிரே இதற்குக் காரணம்.
மடப்புரம் அஜித் குமார் காவல் கொட்டடி கொலை முதல் தற்பொழுது நடைபெற்றுள்ள பாலியல் வன்புணர்வு வரை இதுவரை தமிழ்நாடு போலீசின் அதிகார அத்துமீறல்களுக்கு புள்ளி வைத்ததாக தெரியவில்லை.
போலீஸ்காரர்கள் பணியின் போது செய்யக்கூடிய தவறுகளுக்கு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது போன்ற சலுகைகளே போலீஸ்காரர்கள் செய்யக்கூடிய அனைத்து குற்றங்களுக்கும் முதன்மையான காரணமாகும்.
போலீஸ்காரர்கள் குற்றவாளிகளோடு இணைந்து கொண்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளில் போலீஸ்காரர்களுக்கு எவ்விதமான தண்டனையும் அளிக்கப்படவில்லை. அவர்கள் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்தும் போலீஸின் அதிகாரங்களை பயன்படுத்தியும் தப்பி விடுகிறார்கள்.
பாலியல் வன்புணர்வு குற்றச்செயலில் ஈடுபட்ட இரு போலீஸ்காரர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram