10.10.2025

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
அளித்த பேராசிரியர்களை கைது செய்!

பத்திரிகைச் செய்தி

புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் தொடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்தது புதுச்சேரி போலீசு.

புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தின் கிளை காரைக்கால் நேரு நகரில் இயங்கி வருகிறது. இங்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பல்கலைக்கழகத்தில் கடந்த பல நாட்களாக அங்கு பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளதுள்ளனர். இதையொட்டி பாதிக்கப்பட்ட மாணவிகள் நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்களுக்கு ஆதரவாகவே பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டு வந்துள்ளது.

பாலியல்  தொடர்பான புகார் அளிக்க  ஐ.சி.சி (ICC) கமிட்டி இருந்த போதிலும், அது யுஜிசி விதிகளின் படி மாணவர்களைக் கொண்டு அமைக்கப்படவில்லை. பேராசிரியர்கள் மட்டுமே கொண்ட  அக்கமிட்டி, மாணவிகளின் பாலியல் புகார்களை நேர்மையாக விசாரிக்காமல் பாலியல் பொறுக்கிகளை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மாணவி ஒருவரின் ஆடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில்  “துறைத்தலைவரரான மாதவைய்யா தொடர்ச்சியாக  தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இரவு நேரங்களில் போன் செய்வது, நிர்வாணப் புகைப்படம் அனுப்ப சொல்லுவது, தனியாகச் சந்திக்க வர சொல்லுவது என தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும்,

மேலும், நிர்வாணப் படங்களை அனுப்ப வில்லையென்றால் இன்டர்நெல் மதிப்பெண் போட மாட்டேன் என மிரட்டுவதாகவும்” அந்த ஆடியோவில் பேசி இருந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மாதவைய்யா மீது எடுக்கப்படவில்லை. அப்பாலியல் பொறுக்கி எப்போதும் போல் கல்லூரியில் சுதந்திரமாக சுற்றி திரிந்துள்ளான்.

இம்மாணவியைப் போலவே பல்கலைக்கழகத்தில் 30 முதல் 40 மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிப்பதாக அந்த மாணவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இப்படிப்பட்ட பாலியல் பொறுக்கி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து  பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் ஐ.சி.சி கமிட்டியை யுஜிசி-யின் விதிகளின்படி மாணவர்களை உள்ளடக்கிய கமிட்டியாக மாற்றியமைக்க வலியுறுத்தியும்  துணை வேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  நேற்று (அக்டோபர் 9 தேதி) மதியம் முதல் இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8 மணி நேரத்தைக் கடந்து போராட்டம் நீடித்த போதும் முறையான தீர்வு எட்டப்படவில்லை. துணைவேந்தர் இல்லாமல் முதல்வரை வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது நிர்வாகம். ஆனால், பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதனால் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் அமைதியாக போராடிய மாணவர்கள் மீது நள்ளிரவில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுத்து கைது செய்தது புதுச்சேரி போலீசு.

மாணவிகளின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்தும், மாணவர்களை காலால் எட்டி உதைத்தும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி  6 மாணவிகள் உட்பட மொத்தம் 24 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றுள்ளது.

  • பாலியல் பொறுக்கி பேராசிரியரை கைது செய்ய வக்கற்ற போலீசு போராடிய மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது  செய்தது கண்டனத்திற்குரியதாகும்.
  • மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய மாதவைய்யா உட்பட குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து பேராசிரியர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
  • பாலியல் குற்றத்திற்கு துணைபோன அப்பல்கலைக்கழக நிர்வாகம் மீதும் மாணவர் மீது தாக்குதல் நடத்திய போலீசு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களை உள்ளடக்கிய ஐ.சி.சி கமிட்டியை உடனே அமைக்க வேண்டும்.


தோழர் சக்தி,
மக்கள் அதிகாரக் கழகம்,
சென்னை மாவட்டம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க