13.10.2025

க்கள் அதிகாரக் கழகம், கிருஷ்ணகிரி மாவட்டச் செயற்குழு கூட்டம் அக்டோபர் 12 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தோழர். இரஞ்சித் தலைமை தாங்கினார். கடந்த மூன்று மாதங்களின் வேலைகள் நிறைவேறிய அனுபவம் பற்றி விவாதிக்கப்பட்டது. சமகால அரசியல் குறித்தும், மக்கள் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களின் அடிப்படையில் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.

மக்கள் அதிகாரக் கழகம்கிருஷ்ணகிரி மாவட்டச் செயற்குழு தீர்மானங்கள்: அக்டோபர் – 2025

வேண்டும் ஜனநாயகம்!

  1. கிருஷ்ணகிரி நகராட்சி:

i) நகராட்சியின் 33 வார்டுகளிலும் பெரும்பாலான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக, அண்மையில் பெய்த கனமழை காரணமாக நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எமது கட்சியின் சார்பாக, மக்களின் கோரிக்கைக்கிணங்க நகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அக். 5 அன்று, எமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தோம். ஆனால், நகராட்சி நிர்வாகம் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், மழைவெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பின்பே சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமும், அக்கறையற்ற போக்குமே இதற்கு காரணம் என மக்கள் அதிகாரக் கழகம் குற்றஞ்சாட்டுகிறது.

ii) நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை அமைப்பதை முழுமையாகவும் காலதாமதப்படுத்தாமலும் நிறைவேற்ற வேண்டும். சாலைகளில் சாக்கடைக் கழிவுநீர் ஓடுவதைத் தடுப்பதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

iii) நகராட்சி வார்டுகளின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

iv) நகராட்சியின் அனைத்து தெருக்களிலும் குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். நகராட்சி சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதை தடுக்க வேண்டும்.

v) நகராட்சிப் பகுதியில் மக்களின் பயணத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.

vi) மழைக் காலங்களில் சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்கி நிற்காத வண்ணம், வடிகால் வசதியை முறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மின்கசிவு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

vii) நகரப் பகுதியைச் சுற்றியுள்ள ஏரிகளை உடனடியாகத் தூர்வாரி, அம்மண்ணை விவசாயப் பயன்பாட்டுக்கு இலவசமாகத் தருவதை உறுதி செய்ய வேண்டும்.

viii) நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் 24 மணிநேரமும் சுத்திகரிக்கப்பட்ட, இலவச குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களில் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். நகராட்சியில் தூய்மையான, இலவச கழிப்பிட வசதியை பரவலாக ஏற்படுத்த வேண்டும்.

ix) நகரப் பகுதிக்கு அருகில் உள்ள வெங்கடாபுரம் ஊராட்சிப் பகுதியில் நகராட்சிக் குப்பைக் கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், சேலம் பைபாஸ் சாலையிலும் குப்பைகள் பொதுவெளியில் கொட்டப்படுகின்றன. இது சுற்றுச் சூழலுக்கும், மக்களின் சுகாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும் நடவடிக்கையாகும். குப்பைகளை முறையாக சுத்திகரித்து அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

x) நகராட்சிப் பணிகளுக்கு கூடுதலான பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.30,000 வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் நடத்தப்படுவதை நகராட்சி நிர்வாகம் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.

xi) மாவட்டம் முழுவதும் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் இலவசமாகவும், தரமாகவும் எல்லாச் சூழலிலும் வழங்கப்பட வேண்டும். வசிப்பதற்கு தரமான குடியிருப்புகள் கட்டித்தரப்பட வேண்டும்.

xii) மேற்கண்ட கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் செவி சாய்த்து, பொறுப்புணர்வுடன் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் மக்களைப் புறக்கணிக்கும் பட்சத்தில் மக்களைத் திரட்டி போராட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  1. ஓசூர் மாநகராட்சிப் பகுதியிலும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளும், சுற்றுச் சூழல் சீர்கேடும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. தொழிற்சாலைக் கழிவுநீர் குடியிருப்புப் பகுதிகளில் விடப்படுகின்றது. மாநகரம் விரிவடைவதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அக்கறை காட்டுவதில்லை என்பதை மக்கள் அதிகாரக் கழகம் சுட்டிக் காட்டி விமர்சிக்கிறது. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கழகம் சார்பாக வலியுறுத்துகிறோம்.
  2. கிருஷ்ணகிரி நகரப் பகுதியிலும், ஓசூர் மாநகரப் பகுதியிலும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வெறிநாய்கள் கடித்து மக்கள் உயிரிழக்கும் துயரச் செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அரசு நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு அடிப்படையான காரணம் என்பதை சுட்டிக்காட்டி கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கண்துடைப்புக்காக மேற்கொள்ளாமல், உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என அரசு நிர்வாகத்திற்கு வலியுறுத்துகிறோம்.
  3. கிருஷ்ணகிரி நகரப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. ஓசூர் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையை காரப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யக் கூடாது. பழைய அரசு மருத்துவமனை அங்கேயே செயல்பட வேண்டும். கிராமப்புற மக்களும், சுற்றுவட்டார மக்களும் எளிதில் வந்து செல்ல பழைய மருத்துவமனை அங்கேயே செயல்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது. மாவட்ட நிர்வாகம் மக்களின் கோரிக்கையை ஏற்று செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
  5. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது தரம் குறைக்கப்பட்டு, அவசியமான மருத்துவ சிகிச்சைகளும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதியில் தனியார் மருத்துவமனைகள் காளான்களாக முளைத்துள்ளன. இதனால் சுற்றுவட்டார கிராமப்புற ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி நடவடிக்கை வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
  6. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். போதுமான மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்.
  7. கிருஷ்ணகிரி நகரத்தை ஒட்டியுள்ள கட்டிகானப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதியில் சாக்கடைக் கால்வாய், குடிநீர் வசதி, சாலை வசதி, சுற்றுப் புறங்கள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பள்ளி இருந்தும், பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பஞ்சாயத்து நிர்வாகங்கள் அலட்சியமாக உள்ளன. இந்த அலட்சியப் போக்கை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
  8. தற்போது பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகி, விவசாயிகள் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டப் பகுதிகளில் உள்ள ஏரிகளைத் தூர்வாரி, உடைப்பு ஏற்படாத வண்ணம் சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
  9. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை, கேஆர்பி அணை ஆகியவற்றில் தொழிற்சாலைக் கழிவுகள் உள்ளிட்ட ரசாயனக் கழிவுகள் கர்நாடகம் மற்றும் ஓசூர் தொழிற்சாலை பகுதிகளிலிருந்து திறந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் அதிகமாக கழிவுகளைத் திறந்து விடுவதால் நுரை பொங்கும் நிலையில் பச்சை நிறத்தில் தண்ணீர் வெளியேறுகிறது. இது விவசாயத்திற்கும், மக்களின் உடல்நலத்திற்கும் சொல்லொணா தீங்கு விளைவிக்கும் குற்றமாகும். இதனை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பதைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
  10. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வனப்பகுதியை ஒட்டியிருக்கும் விளைநிலங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் தாக்குதலால் உயிரிழப்புகள் ஏற்படுவதும், பயிர்கள் அழிவுக்குள்ளாவதும் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுப்போக்காக உள்ளது. கல்குவாரி, கிரானைட் குவாரி, கார்ப்பரேட்டுகளுக்காக வனங்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தாமல் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. ஆனால், அரசு நிர்வாகம் இத்தகைய மக்கள் விரோத செயல்களுக்கு துணையாக இருப்பதுதான் அடிப்படையான பிரச்சினையாகும். இதனை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது. மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களே இப்பிரச்சினைக்கு முடிவு கட்டும் என்பதை கழகம் முன்வைக்கிறது.
  11. கிருஷ்ணகிரி மாவட்டம் அடிப்படையில் விவசாயம் செழிப்பான பூமியாகும். ஆனால், மலர்கள், காய்கறிகள், பழங்கள், நெல், கடலை என விளைவித்த பொருட்களுக்கு விலை கிடைக்காமல் போவதால் பெருத்த நட்டத்திற்கு விவசாயிகள் ஆளாகி, பயிர்களை அழிப்பது தொடர்ந்து நடக்கிறது. இடைத் தரகர்களே லாபம் அடைகின்றனர். எனவே, விவசாயிகளுக்கு போதுமான லாபம் கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு தீர்மானிக்க வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
  12. கிருஷ்ணகிரி மாவட்டம் பிரதானமாக விவசாயம் சார்ந்த தொழிலை மையப்படுத்தியுள்ளது. எனவே விவசாயம் சார்ந்த தொழிலுற்பத்தியை அதிகளவில் அரசே தொடங்குவதன் மூலம் விவசாயிகளும் பயன்பெறுவர். வேலைவாய்ப்பும் பெருகும் என்பதை கழகம் சார்பாக முன்வைக்கிறோம்.
  13. விவசாயத்திற்கான சொட்டுநீர் பாசனத்திற்கு தேவையான கருவிகளை, தரமான வகையில் அரசே நேரடியாக மானிய விலையில் வழங்க வேண்டும். ஏனெனில், தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கும் கருவிகள் தரமற்றவையாக உள்ளன. அதேபோல், விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் வழங்கும் முறையை இரத்து செய்! விவசாயிகளுக்கான மானியங்களை நேரடியாக அரசே வழங்கு! மானியங்களை உயர்த்து!
  14. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களின் இலாபவெறியின் காரணமாக செயற்கையான உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை மூலமாக நேரடி உரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் பாரம்பரிய விதைகளை வழங்கி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.
  15. மாவட்ட வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் மா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, மாம்பழங்களை அரசே கொள்முதல் செய்வது, குறைந்தபட்ச ஆதாரவிலையை தீர்மானிப்பது ஆகியவற்றை அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும், மாங்கூழ் உற்பத்திக்கான தொழிற்சாலைகளை அரசே நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கழகம் வலியுறுத்துகிறது.
  16. மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாங்கன்றுகள் நர்சரி பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. தற்போது பெய்த கனமழையால் இந்த நர்சரிகள் கடும் பாதிப்பை சந்தித்து, நர்சரி பண்ணைகள் நடத்தும் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்தித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், வேளாண்துறையும் இதனை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
  17. மாவட்டப் பகுதியில், போலி விதைகள் மற்றும் நாற்றுகளால் விவசாயிகள் பலர் ஏமாற்றப்பட்டு, நட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். போலி விதைகள் மற்றும் நாற்றுகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேளாண்மைத்துறை விதை ஆய்வு செய்யும் பணியை முறையாக செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண்துறையின் இக் குற்றச் செயல்பாட்டை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
  18. சிப்காட், நெடுஞ்சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளுக்காக விவசாய நிலங்கள் பறிக்கப்படுவது, அத்தகைய பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடுகள் கிடைக்காமல் இருப்பது ஆகியவற்றால் சொல்லொணா துயரங்களுக்கு விவசாயிகள் ஆளாகி வருகின்றனர். அரசின் புறக்கணிப்பை எதிர்த்து, இழப்பீடுகளுக்காக தொடர்ந்து போராடியும் வருகின்றனர். அத்தகைய போராட்டங்களுக்கு மக்கள் அதிகாரக் கழகம் துணை நிற்கும்.
  19. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மேற்குப் பகுதி மலைக் கிராமங்களில் சாலை, குடிநீர், மருத்துவ வசதிகள் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். அண்மையில், அஞ்சட்டி அருகே உள்ள தொட்டமஞ்சி மலைக்கிராம மக்கள் அடிப்படை வசதிகளுக்காக மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போல் அடிப்படை வசதிகளின்றி துயருரும் மலைக்கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  20. கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூரிலிருந்து கும்மனூர் செல்வதற்கு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் இல்லாததால், மழைக்காலங்களில் 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 20 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. விவசாய விளைபொருட்களை தலையில் சுமந்து, ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்க வேண்டிய அவலநிலை உள்ளது. மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியதாகும். அப்பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
  21. பேரூராட்சிகள், ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களை முறையாக செயல்படும் வகையில் மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
  22. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கார்ப்பரேட் தொழிற்சாலைகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகள், கல்குவாரிகளில் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இவர்கள் எந்தவிதப் பணிப்பாதுகாப்பும் இன்றி, கேட்பாரற்ற, உரிமைகளற்ற சூழலில் பணி செய்து வருகின்றனர். அண்மையில், காவேரிப்பட்டணம் பகுதியில் கிரானைட் குவாரியில் பணிபுரிந்து வந்த தொழிலாளி ஒருவர் கிரானைட் கல் விழுந்து உயிரிழந்தார். இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் கடும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். தொழிலாளர் ஆணையம், புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தவறிழைக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கழகம் வலியுறுத்துகிறது.
  23. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஆலை நிர்வாகத்தாலும், ஒப்பந்த நிறுவனத்தாலும் தீண்டாமையின் அடிப்படையில் உரிமைகள் பறிக்கப்பட்டு, சுரண்டப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் உரிமைக்கான போராட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது. உழைக்கும் மக்கள் அனைவரும் தூய்மைப் பணித் தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது. குற்றமிழைத்த ஆலை நிர்வாகத்தின் மீதும், ஒப்பந்த நிறுவனத்தின் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கழகம் அரசை வலியுறுத்துகிறது.
  24. ஓசூரில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களிலும், பிற தொழிற்சாலைகளிலும் இலட்சக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்தொழிலாளர்களைச் சுரண்டித்தான் கார்ப்பரேட் முதலாளிகள் கொழுத்த இலாபத்தை அடைகின்றனர். ஆனால் இவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியமோ சொற்பம். அதை வைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்வது இயலாத காரியம். அத்தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் ரூ.25,000 மற்றும் அவர்களின் நல்வாழ்வு உள்ளிட்ட உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக, அவர்கள் தங்குவதற்கு தரமான, இலவச குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
  25. ஓசூர் மாநகரில் கடந்த ஜூலை மாதம், தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் கார்ப்பரேட் டாக்ஸிகளை எதிர்த்து, ”கார்ப்பரேட் டாக்ஸியே வெளியேறு” என்ற தலைப்பில், உள்ளூர் கார் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆனால் தற்போதும் கார்ப்பரேட் டாக்ஸிகள் ஓசூரில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தடுத்தி நிறுத்தி உள்ளூர் கார் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
  26. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல இடங்களில், இம்முறை நடந்த பிள்ளையார் சிலை ஊர்வலங்களில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி கும்பல் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் வேண்டுமென்றே பிரச்சினையை ஏற்படுத்தும் வண்ணம் தொந்தரவு செய்துள்ளனர். மேலும், ஓசூர் அருகே உள்ள பீர்ஜேப்பள்ளியில் ஆதிக்க சாதியினர், தலித் இளைஞர்களைத் தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, பல இடங்களில் விநாயகர் சிலைகளை ஏரிகளில் அப்படியே போட்டுவிட்டு சென்றதால், நீர் கடுமையாக மாசுபட்டுள்ளது. பக்தி என்ற பெயரில் மக்களைத் தொந்தரவு செய்யும், சுற்றுச் சூழலை நாசமாக்கும் விநாயகர் சிலை ஊர்வலங்களை, சிலை கரைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
  27. தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபடும் செயல்பாடுகள் அதிகரித்து வருவதை அண்மைய மாதச் செய்திகள் காட்டுகின்றன. இது சட்டவிரோதமானது. அதைத்தாண்டி, இதன் பின்னால் உள்ள சமூகப் பொருளாதாரக் காரணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பார்ப்பனிய சித்தாந்தம் மேலோங்கியுள்ள நம் சமூகத்தில், பெண்களை இழிவாகப் பார்ப்பதும், மக்கள் வறுமைக் கோட்டில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும் இத்தகைய கருக்கலைப்புக்கான சமூகப் பொருளாதாரக் காரணங்களாகும். மக்களின் வாழ்வாதார நிலையை உயர்த்தப் போராடுவதும், பெண்கள் மீதான பார்ப்பனிய பிற்போக்குக் கருத்துகளுக்கு எதிராகப் போராடுவதும் புரட்சிகர, ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் உடனடிக் கடமையாக இருப்பதையே மேற்கண்ட நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. இந்தக் கோணத்திலும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கோருகிறோம்.
  28. நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விளையும் தேங்காய்கள் வெளிமாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆனால், அண்மைய காலங்களில் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது. இதனோடு சேலம் நகரப் பகுதியில் தென்னை நாரில் கயிறு திரித்து, ஏற்றுமதி செய்யும் தொழிலை ஆயிரக்கணக்கானோர் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் மானியங்கள் முறையாக சென்று சேருவதை அரசு நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
  29. தர்மபுரி மாவட்டத்தில், தலித் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சாதியப் பாகுபாட்டோடு நடந்து கொள்வது, தலித் மக்கள் சுடுகாட்டிற்குச் செல்வதற்கு ஆதிக்க சாதியினர் பாதை மறுப்பது என தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவது கடும் கண்டனத்துக்குரியது. தலித் மக்களை ஒடுக்கும் ஆதிக்க சக்திகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தலித் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
  30. தர்மபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, குடிநீர் பிரச்சினை என்பது மக்களின் அடிப்படையான பிரச்சினையாக இருப்பதை அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலை நீடிப்பதானது அம்மக்களின் உடல்நலனில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே, மாவட்ட நிர்வாகம், முழுமையான ஆய்வை மேற்கொண்டு, அம்மாவட்டப் பகுதியில் குடிநீர் பிரச்சினையை அறவே ஒழிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
  31. திருப்பத்தூர் மாவட்டத்தின் பாலார் ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தொடர்ச்சியாக நடந்து வருவதை அண்மைய செய்திகள் தொடர்ச்சியாகத் தெரிவிக்கின்றன. திருப்பத்தூர் மாவட்டம், தேவஸ்தானம் மற்றும் ஈச்சங்கால் ஆகிய 2 ஊராட்சிகளை சார்ந்த தலைவர்களும் மக்களும் இணைந்து பாலாற்றிற்கு செல்லும் வழியில் இரும்பு கேட் அமைத்து பூட்டு போடும் அளவுக்கு பாதிப்பு இருப்பதை உணர முடிகிறது. அதிகார வர்க்கத்தின் துணையின்றி மணல் கொள்ளை சாத்தியமே இல்லை. மக்களின் போராட்டங்கள் மட்டுமே மணல் கொள்ளையைத் தடுப்பதற்கான ஒரே ஆயுதம் என்பதை கடந்த கால எமது கட்சியின் அனுபவங்களில் இருந்து மக்கள் அதிகாரக் கழகம் சுட்டிக் காட்டுகிறது.
  32. நம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகளில் பிரதானமானவற்றைச் சுட்டிக் காட்டியுள்ளோம். நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, அரசு நிர்வாகம் நமது கோரிக்கைகளை நிறைவேற்றிட, நாம் அமைப்பாக ஒன்றிணைந்து போராட வேண்டியது மிக முக்கியமானதாகும். அதே சமயம் நமது பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கு அரசியல் – பொருளாதார மாற்றை நிறுவுவது அவசியமானதாக உள்ளது. அத்தகைய மாற்றை உருவாக்குவதற்கான விவாதங்களை முன்னெடுக்க, தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெண்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.
  33. நமது உரிமைகளை வென்றெடுக்க அரசியல் – பொருளாதார மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து இயங்கும் கட்சியான மக்கள் அதிகாரக் கழகத்தில் உறுப்பினராக உங்களை இணைத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கோருகிறோம்.


மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க