15.10.2025

கிருஷ்ணகிரி – தென்பெண்ணை ஆற்றின் அவலநிலை:
கர்நாடகா, தமிழ்நாடு அரசுகளின் அலட்சியம்

பத்திரிகை செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து அதிகரித்து, ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நிரம்பி வருகிறது.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள சுத்திகரிக்கப்படாத மற்றும் தொழிற்சாலை கழிவுகள், தென்பெண்ணை ஆற்றில் விடப்படுவதன் காரணமாக, கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளிவரும் நீரானது, குவியல் குவியலாக நுரை பொங்கி வருகிறது.

இது மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இது முதல்முறையல்ல, பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் துயரமாகும்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள இரசாயன பதப்படுத்துதல், ஜவுளி உற்பத்தி மற்றும் மின்முலாம் பூசுதல் போன்ற தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்படும் கழிவுகளை ஆற்றில் நீர் அதிகரிக்கும் பொழுது வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இதனால், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் மிகவும் மாசடைந்து நச்சுத் தன்மையுடன் வருகிறது.

இந்த நச்சு நீரில் இருந்து பொங்கி வரும் நுரை, விவசாய விளைநிலங்களில் படிவதால் பயிர்கள் பாதிப்படைவதோடு வருவாய் இழப்பும் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த நீரை பருகுவதால், கால்நடைகளும், மனிதர்களும் நோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இந்த நச்சு நுரையால் தாங்க முடியாத துர்நாற்றமும் வீசுகிறது.

இந்த ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் உயர் புணரிய கோலிபார்ம் அளவைக் கண்டுபிடித்து, இந்த நீர் குளிக்கவோ அருந்தவோ தகுதியற்றது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த ஜூலை 2022ல் பெங்களூரிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை தென்பெண்ணை ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், இதனடிப்படையில் எந்தவிதமான நடவடிக்கையும் கர்நாடக அரசும், தமிழ்நாடு அரசும் எடுக்கவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், கர்நாடக அரசு 313 மில்லியன் லிட்டர் (MLD) கொள்ளளவு திறன் கொண்ட 12 புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்ட திட்டமிட்டு இருப்பதாகவும் இவற்றில் 4 நிலையங்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளும், மீதமிருக்கும் நிலையங்கள் அடுத்த ஆண்டு 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளும் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமா என்பது சந்தேகமே. கடந்த காலங்களில் இதுபோன்ற வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் உள்ள நந்தி மலைகளில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது.

தென்பெண்ணையாறு, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 180 கி.மீ தூரம் பயணித்து இறுதியாக கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை உள்ளிட்ட 8 அணைகள் மற்றும் தடுப்பணைகள் உள்ளன. இதன் மூலம் 6 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் முக்கிய வாழ்வாதாரமான இந்த நதி தற்போது தொழிற்சாலைக் கழிவுகளால் அபாயகரமான தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் நலனை முதன்மைப்படுத்தி தீவிரமடைந்து வரும் நகரமயமாக்கல், அதற்கேற்ற உள்கட்டமைப்புகள் உருவாக்காத அரசுகளின் கையலாகாத்தனம், வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் நலனை மட்டும் முதன்மைப்படுத்தும் கொள்கைகள், நடைமுறைகள், மக்கள் மீது அக்கறையற்ற கார்ப்பரேட் சார்பு அரசுக் கட்டமைப்பு இவை அனைத்தும் இணைந்து தென்பெண்ணை ஆற்றை அழிவுக்குள்ளாக்கி வருகின்றது.

இயற்கையை, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும், அதனூடே மக்களின் வாழ்வை மேம்படுத்தும் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களை கட்டியெழுப்புவதன் தேவையை, தென்பெண்ணை ஆற்றின் அவலநிலை நமக்கு உணர்த்துகிறது.


மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க