16.10.2025
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, தளி ஒன்றியங்கள்:
அடிப்படை வசதிகளின்றி துயரப்படும் மக்கள்
பத்திரிகை செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக சரியான சாலை, பாலம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், சுகாதார செவிலியர்கள் கிராமங்களுக்கு வருவதும் பாதிப்படைகிறது.
அன்கொண்டப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள சக்கார்லு, ராமச்சந்திராபுரம் மற்றும் சின்ன பாப்பனப்பள்ளி மற்றும் செம்பரசனப்பள்ளியில் உள்ள பெரிய பாப்பனப்பள்ளி ஆகிய நான்கு கிராமங்களில் சுமார் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், நான்கு கிராமங்களுக்கும் முறையான சாலை வசதியோ பேருந்து வசதியோ கிடையாது. மேலும், மழைக்காலங்களில் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, இந்த கிராமங்களை இரண்டாகப் பிரிக்கிறது.
சக்கார்லு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சி. முனி கிருஷ்ணப்பா (54), “இந்தச் சாலை பல ஆண்டுகளாக சரளைக் கற்களால் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த சாலை காரணமாக, சாலையில் பயணித்த ஒருவர் விபத்தில் சிக்கி, ஊனமுற்றுள்ளார். மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பாலம் நீரில் மூழ்கி விடுகிறது. எனவே, உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டும்” என்று கூறுகிறார்.
சின்ன பாப்பன்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மா (26) கூறுகையில், “மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஒரு சாலை அமைக்க வேண்டும், ஏனெனில் செம்பரசனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு மழைக்காலங்களில் எங்கள் கிராமத்து குழந்தைகள் செல்ல முடியாத சூழல் உள்ளது” என்று கூறுகிறார்.
மேலும், கிராம சுகாதார செவிலியர் எங்கள் கிராமத்திற்கு அரிதாகவே வருகிறார்கள். மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. சாலைகள் இல்லாத காரணத்தால் தேர்தலின் போது கூட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இங்கு வருவதில்லை.” எனவும் அவர் கூறினார்.
பெரிய பாப்பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனிகிருஷ்ணா (46), “பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியை அடைய தங்கள் கிராமத்திலிருந்து குறைந்தது 20 மாணவர்கள் தினமும் ஆபத்தாக உள்ள ஓடையைக் கடந்து செல்கின்றனர்” என தெரிவித்தார்.
அதேபோல், தசையன்மடுவு கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
தளி பஞ்சாயத்து ஒன்றியத்தின் தசையன்மடுவு கிராமத்தில் சுமார் 40 இருளர் குடும்பங்கள் வசிக்கின்றனர். மாநில அரசு 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்காக வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. இருப்பினும், இந்த வீடுகளில் பலவற்றிற்கு வீட்டுப் பட்டாக்கள் மற்றும் மின்சார இணைப்புகள் இன்னும் கிடைக்கவில்லை. பராமரிப்பு இல்லாததால் அவர்களின் வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. ஆனால், இன்னும் சில இருளர் குடும்பங்கள் குடிசைகளில் வசிக்கின்றன.
மழைநீர் தங்கள் குடிசைகளுக்குள் நுழைவதைத் தடுக்க, பிளாஸ்டிக் தார்ப்பாய்களை கொண்டு மூடுகின்றனர். இங்கு கழிப்பறை வசதிகளும் இல்லை. இதனால், திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலை பெண்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
அரசாங்கத்தால் கட்டப்படும் வீடுகளுக்கு மின்சார இணைப்புகள் மற்றும் பட்டாக்கள் வழங்கப்படுவதை உறுதி செய் வேண்டும்; குடிசைகளில் வசிப்பவர்களுக்கு முறையான வீடுகள் கட்டித் தர வேண்டும் எனவும் அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.
கழிப்பறை, சாலை மற்றும் வடிகால் வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேற்கூறிய சம்பவங்கள் தற்போது வெளிவந்துள்ள செய்திகள் மட்டுமே. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை கிராமங்களில் வாழும் மக்கள் சாலை போக்குவரத்து, குடிநீர், மின்சாரம் போன்ற எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிர்வாகம், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதைக் கூட செய்யாமல், அதனால் மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் சிரமங்களைப் பற்றி அக்கறையற்றும், செயலிழந்தும் இருக்கிறது.
திட்டங்கள் எனப்படுபவை, மக்கள் வரிப்பணத்தை அதிகார வர்க்கம் ஊழல் மூலம் கொள்ளையடிப்பதற்கான வழிமுறையாகவே உள்ளன.
பெயரளவிலான நடவடிக்கைகளை செய்வதையே சாதனையாக அரசு நிர்வாகம் கூறிக் கொள்கிறது. காலங்காலமாக இந்நிலைமை தான் தொடர்கிறது.
தங்களின் அடிப்படைத் தேவைகளையே போராடிப் பெற வேண்டிய நிலையில் தான் மக்கள் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram