15.10.2025

அம்பேத்கர் புகைப்படம் வைத்ததற்காக ஆதிக்கச் சாதி வெறியர்களால்
தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்

பத்திரிகை செய்தி

யிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடிப் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் தனது நண்பர்களான தினேஷ் மற்றும் அஜய் உடன்  அக்டோபர் 6 அன்று இரவு 10 மணிக்கு கொள்ளிடம் சாமியம் பைபாஸில் உள்ள பேக்கரிக்கு டீ குடிக்கச் சென்றுள்ளபோது, அங்கு வந்த ஆதிக்கச் சாதி வெறிபிடித்த இளைஞர்கள் அவர்கள் மீது சாதி வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படமும் நீல சிவப்புக் கட்சி கொடியும் ஒட்டியிருப்பதைப் பார்த்து அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, இது யாரு வண்டி என்று கேட்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக பேசி தாக்கியுள்ளனர்.

இதனைப் பார்த்து ஏன் அடிக்கிறீங்க என்று ஓடிவந்து கேட்ட தமிழரசனின் நண்பர்களையும் சேர்த்து தாக்கியுள்ளனர். இதனோடு தமிழரசனை முட்டிப் போடுன்னு சொல்லிய போது, நான் முட்டிப் போட மாட்டேன்னு என்று சொன்னதால் இரு சக்கர வாகனத்தின் சாவியைக் கொண்டு தமிழரசனின் முதுகில் கிழித்து இக்கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. இப்பிரச்சனையைக் கேள்விப்பட்டு அவரது ஊர்க்காரர்கள் வந்ததும் இக்கும்பல் ஓடிவிட்டது.

இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த தமிழரசன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இக்கும்பல் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பின் தெரியாதவர்களாக உள்ளனர். இத்தாக்குதலை முழுக்க சாதிவெறி வன்மத்தோடு தான் நடத்தியுள்ளனர். இச்சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரின் மீதும் காவல்துறை வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து இருவரைக் கைது செய்துள்ளது. மற்ற இருவரையும் விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இதே மாவட்டத்தில் டி.ஒய்.எஃப்.ஐ. (DYFI) தோழர் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், கடந்த ஜூன் மாதத்தில் மயிலாடுதுறையின் குத்தாலத்தில் தலித் சாதியைச் சார்ந்தவர் இடம் வாங்கி வீடு கட்டியதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவரது வீட்டை ஆதிக்கச் சாதி வெறியர்களால் சூறையாடிய அவலம் அரங்கேறியதும் குறிப்பிடத்தக்கது.

ஆதிக்கச் சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஊடுருவுவதன் மூலம் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் மீதான சாதியத் தாக்குதல்களை தீவிரமடையச் செய்துவருகிறது. எனவே, ஆதிக்கச் சாதி சங்கங்களையும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி-யையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தி ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டி உள்ளது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க