16.09.2025
மக்கள் அதிகாரக் கழகத்தின் மூன்றாவது செயற்குழு கூட்டத் தீர்மானங்களை
உயர்த்திப் பிடிப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
15.10.2025 மற்றும் 16.10.2025 ஆகிய இரு தேதிகளில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலச் செயற்குழுவானது கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்களின் தலைமையில் கூடியது.
கடந்த செப் 27 ந்தேதி கரூரில் விஜய் கட்சி சார்பில் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கியது.
கடந்த மூன்று மாதங்களில் நடந்த வேலைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன.
கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பிரச்சனைகளில் ஊக்கமாகவும், எடுத்துக்காட்டாகவும் செயல்பட்டுள்ள தோழர்களை மக்கள் அதிகாரக் கழகத்தின் செயற்குழுவானது வரவேற்பதுடன் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
குறிப்பாக, ”டிரம்பின் 50% சதவீத வரிவிதிப்பு நாட்டை மீண்டும் அடிமையாக்காதே” என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு தழுவிய பிரச்சாரம், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றது. 50% வரி விதிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு உள்ளிட்டு இந்தியா முழுவதும் உள்ள தொழில்கள் பாதிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும் மோடி அரசு அமெரிக்காவிற்கு அடிமையாவதையும் தடுத்து நிறுத்த மீண்டும் ஒரு சுதந்திர போருக்கு தயாராவோம் என்று அழைப்பு விடுத்த அந்த இயக்கம் ஜனநாயக சக்திகள் மத்தியிலும், உழைக்கும் மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.
சர்வதேச, தேச மற்றும் தமிழ்நாடு தொடர்பான அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் செயற்குழு தீர்மானங்களை வாசிக்க கூட்டம் நிறைவடைந்தது.
மூன்றாவது செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்:
1. காசாவில் நடக்கும் இன அழிப்பு நடவடிக்கையிலிருந்து திசைதிருப்புவதற்காக பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக அமெரிக்க சார்பு நாடுகள் அறிவிக்கின்றன. பாலஸ்தீன மக்களுக்காகப் போராடும் ஹமாஸ் இயக்கத்தைப் புறக்கணித்து பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது காசா-வை கைப்பற்றத்துடிக்கும் அமெரிக்க – இஸ்ரேல் சதித் திட்டத்தின் அங்கமே. இதனை உலக மக்கள் ஒருபோதும் ஏற்கக்கூடாது. பாலஸ்தீனம் மீதான இறையாண்மை பாலஸ்தீன மக்களுக்கே என்பதை வலியுறுத்தும் வகையில் தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என கழக மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
2. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே முதல் கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. மீண்டும் நம்பிக்கையோடு ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கு காசாவை நோக்கித் திரும்புகின்றனர். ஆனால், காசா-வை முழுமையாக ஆக்கிரமிப்பதற்கான பாசிஸ்ட் டிரம்பின் 20 அம்சத் திட்டத்தை முன்வைத்தே பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிரம்பின் 20 அம்சத் திட்டத்தை ஹமாஸ் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்பது 20 அம்சத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம்.
இருப்பினும், தங்களின் சுயநிர்ணய உரிமையை அந்நியரிடம் விட்டுக் கொடுக்க முடியாது, காசாவில் இருந்து வெளியேற முடியாது, ஆட்சி அதிகாரத்தையும் முழுவதுமாக விட்டுக் கொடுக்க முடியாது என்று ஹமாஸ் தெளிவாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, கடந்த ஜூன் 2024-இல் நடைமுறைக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் துளியும் மதிக்காமல் இஸ்ரேல் தாக்குதலைத் தொடுத்ததுபோல் மீண்டும் தாக்குதல் தொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, போர்க்குற்றவாளி நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும்; இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; அதனிடம் நட்ட ஈடு பெற்று காசா மறுநிர்மாணம் செய்யப்பட்டு காசா மக்கள் வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை எந்தளவிற்கு கட்டியமைக்கிறோமோ அந்தளவுக்கு பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பதை கழகம் வலியுறுத்துகிறது.
3. தமிழ்நாட்டில் திமுக அரசு, பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்திருப்பதானது இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும். இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்ய முன்வராத முன்னுதாரணமிக்க நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்கிறது.
அதேசமயம், சென்னையில் நடைபெற்ற விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இனவெறி பிடித்த இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்க தி.மு.க அரசு அனுமதித்ததற்கு கழகம் தமது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், தமிழ்நாடு அரசு இஸ்ரேல் நிறுவனங்களுடனான பொருளாதார உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
4. ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி, ஆப்கான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2,205 மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு ஏற்பட்டுள்ள மூன்றாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். ஆண்டுதோறும் ஆப்கானில் நிலநடுக்கத்தால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கு காலநிலை மாற்றம் முக்கிய காரணமாக இருந்தாலும், அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதற்கும், ஆப்கான் தற்போது தாலிபான் எனும் இஸ்லாமிய பயங்கரவாத ஆட்சியின் கீழ் சிக்கியிருப்பதற்கும் அமெரிக்காவின் மேலாதிக்கவெறியே முதன்மை காரணம்.
20 ஆண்டுகளாக ஆப்கான் மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்திய அமெரிக்க தற்போது, தாலிபான்களை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை நிறுத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது. தாலிபான்களின் சர்வாதிகார ஆட்சியில் ஒருபுறம் இயற்கைப் பேரிடர்கள். மறுபுறம் அமெரிக்காவின் நெருக்கடி என சொல்லொணா துன்பங்களை ஆப்கான் மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த அநீதிக்கு எதிராக உலக முழுவதுமுள்ள உழைக்கும் மக்கள் குரலெழுப்ப வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
000
5. இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பைக்காட்டிலும் 8 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, வட மேற்கு மாநிலங்களில் அதீத மழைப்பொழிவு, மேக வெடிப்பு, பெரும் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வஞ்சித்து வருகிறது பாசிச மோடி அரசு.
இதனை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்துகிறது. மேலும், வட மாநிலங்களில் இயற்கைப் பேரிடர்களைத் தீவிரப்படுத்தும் விதமாக மோடி அரசு செய்து வரும், சுற்றுச்சூழலைச் சூறையாடும், நாசகர கார்ப்பரேட் நலத் திட்டங்களைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது.
6. அந்தமான்-நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சி எனும் பெயரில் ‘கிரேட் நிகோபார்’ எனும் நாசகரத் திட்டத்தை பாசிச மோடி அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, 166 சதுர கி.மீ. பரப்பில் ரூ.92 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம், அனல் மின்நிலையம், நகரியம் (Township) முதலானவைக் கட்டியமைக்கப்பட இருக்கிறது.
இத்திட்டத்தால், அந்தமானில் வசிக்கும் அம்மண்ணின் பூர்வகுடி பழங்குடி மக்களும் சுற்றுச்சூழலும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
7. செப்டம்பர் 24-ஆம் தேதி லடாக் யூனியன் பிரதேசத்தில் மாநில அந்தஸ்துக் கோரியும், அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை ஆறில் லடாக்கை இணைக்கக் கோரியும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் லடாக் மக்களின் உரிமைக்கான கோரிக்கைகள் வெற்றி அடைய மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது.
8. இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும், 6 வகையான அணுக் கனிமங்களையும் அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல், அகழ்ந்தெடுக்கப்படும் நிலப்பரப்பு சிறிய பகுதியாக இருந்தாலும் இத்திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான பரிசீலனையை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது. இது கனிமங்கள் மீதான மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். கனிமவள சூறையாடலை பன்மடங்கு தீவிரப்படுத்தும் இப்பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இம்முடிவைத் திரும்பப்பெற வலியுறுத்துகிறது.
9. வக்ஃப் சட்டத் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு இசுலாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி. வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்தில் இருக்கும் பல்வேறு இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. இதனை கழக செயற்குழு கண்டிப்பதுடன் வக்ஃப் வாரிய சட்டத்திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
10. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய்-ஐ இழிவுபடுத்தும் விதமாக வழக்குரைஞர் போர்வையில் இருக்கும் சங்கி காலணியை வீசியுள்ளான். சங்கி கும்பலின் நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பளித்தால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதே தாக்குதல் தொடுக்கப்படும் என்ற நிலை பாசிச அபாயம் மேலோங்கி இருப்பதைக் காட்டுகிறது.
பௌத்தர் மற்றும் தலித்தான தலைமை நீதிபதி மீது காலணி வீசிய நபரை பார் கவுன்சிலிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசை கழக மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
11. ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி, ஆர்.ஏஸ்.எஸ் நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலை மற்றும் ரூ.100 நாணயத்தையும் வெளியிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். என்பது இந்துராஷ்டிரம் எனும் கொடுங்கனவுடன் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு பாசிச அமைப்பு. அது தொடங்கிய நாள் முதல் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் ஒற்றுமைக்கும் எதிராகத்தான் வேலைசெய்து வருகிறது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் போது, பிரிட்டிஷ்காரர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த துரோகப் பரம்பரையைச் சேர்ந்ததாகும்.
எனவே, இத்தகைய பாசிச அமைப்பின் தொடக்க நாளில் இந்நாட்டின் பிரதமர் கலந்துகொண்டு நாணயத்தையும் அஞ்சல் தலையும் வெளியிட்டிருப்பதை கழக மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் அவற்றைத் திரும்பப்பெற வலியுறுத்துகிறது. மேலும், ஆர்.எஸ்.எஸ் எனும் பாசிச அமைப்பு தடை செய்யப்பட வேண்டிய அவசியத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
12. வேளாண் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில் 20 சதவிகித இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கியூட் நுழைவுத் தேர்வு (CUET ICAR-UG) மூலம் நிரப்பப்படும் என மோடி அரசு அறிவித்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. நீட், கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி கற்கும் உரிமையைப் பறித்து கல்விக் கட்டமைப்பை கார்ப்பரேட்மயமாக்கும் பாசிச மோடி அரசுக்கு எதிராக களப்போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
13. பீகார், பாகல்பூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆண்டிற்கு ஒரு ரூபாய் என்ற வீதம் 25 ஆண்டுகளுக்கு கௌதம் அதானியின் நிறுவனமான அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு அனல் மின் நிலையம் அமைப்பதற்காக குத்தகைக்கு விட்டுள்ளது பா.ஜ.க கூட்டணி அரசு. அதானி, அம்பானிகளுக்கான கார்ப்பரேட் சூறையாடல் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருவதை இது உணர்த்துகிறது.
ஆக்கிரமிப்பு என்ற பெயரிலும் கனிமவள சூறையாடலுக்காகவும் உழைக்கும் மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்துவரும் பாசிச பா.ஜ.க அரசு, அதானி-அம்பானி கும்பலுக்கு நாட்டின் வளங்களைத் தாரைவார்த்து வருவதற்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியுள்ளது.
14. உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் மீலாடி நபியை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் ”ஐ லவ் முகமது” என்ற தலைப்பில் பேனர் வைத்துள்ளனர். இதை மத உணர்வைத் தூண்டுவதாகக் கூறி உ.பி போலீசு 24 இஸ்லாமியர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து “ஐ லவ் முகமது” என்பது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியது.
உத்தரப் பிரதேசம் மற்றும் நாட்டின் பல நகரங்களில் இஸ்லாமியர்கள் இத்தலைப்பின் கீழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசம் போன்று இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக இருக்கும் இடத்தில் இஸ்லாமியர்கள் போராட்டக் களத்தில் இறங்கியிருப்பது வரவேற்பதாகும்.
மேலும், நாடுமுழுவதும் போராடும் இஸ்லாமியர்களை பா.ஜ.க அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. இதுவரை நாடுமுழுவதும் 4,500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது; 285 பேரைக் கைது செய்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
15. கடந்த எட்டு ஆண்டுகளாக ஜி.எஸ்.டி எனும் பாசிச வரித் தாக்குதல் மூலம் உழைக்கும் மக்களின் இரத்தத்தைக் குடித்துக்கொண்டிருந்த பாசிச மோடி அரசு, அதை இரத்துச் செய்வதற்குப் பதிலாக தற்போது “ஜி.எஸ்.டி 2.0” என்ற பெயரில் மீண்டும் பாசிச வரி சுரண்டலைத் தொடர்கிறது.
தற்போது ஜி.எஸ்.டி மூன்று வரிவிகிதங்களாக மாற்றியமைக்கப்பட்டாலும், இது முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கானதே. உழைக்கும் மக்களுக்கும், சிறு, குறு வணிகர்களுக்கு இம்மாற்றத்தால் துளியும் பயனில்லை. இதனை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிப்பதுடன், மாநில உரிமைகளுக்குச் சவக்குழி வெட்டும் ஜி.எஸ்.டி வரியை இரத்துசெய்வதற்கான போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
16. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பா.ஜ.க., தற்போது தேர்தல் ஆணையத்தின் துணையுடன் சிறப்புத் தீவிர மறு ஆய்வு என்ற பெயரில் வாக்காளர் பட்டியலைக் காவிமயமாக்கியும், மோசடிகளை அரங்கேற்றியும் வெற்றிபெற முயல்கிறது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.
அடுத்தாண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் இப்பாசிச நடவடிக்கையை எதிர்த்து முறியடிக்க வேண்டியுள்ளது.
17. பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தமிழ்நாட்டில் தயாரித்த “கோல்ட்ரிஃப்” (Coldrif) எனும் இருமல் மருந்தை உட்கொண்ட ஏழு வயதிற்குட்பட்ட 20 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து கொடூரமான முறையில் உயிரிழந்திருக்கின்றனர். ஏற்கெனவே, 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டைச் சேர்ந்த 70 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் அரங்கேறியது. இதன்பிறகு கூட ஒன்றிய மாநில அரசு இதுகுறித்து கவனம் கொடுக்காமல், குழந்தைகளின் உயிரில் அலட்சியம் காட்டியதன் விளைவே தற்போது ம.பி-இல் அரங்கேறிய கொடூரச் சம்பவம்.
இது, ஒன்றிய – மாநில அரசுகள் நிகழ்த்திய பச்சைப் படுகொலை. மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாகி வருவதன் விளைவு. உடனடியாக நாடுமுழுவதும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்து முறைமீறலில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமையை இரத்து செய்ய வேண்டும் என்று கழகம் கெட்டுக்கொள்கிறது.
18. மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இதற்கெதிராக நாடு முழுவதும் மாணவ போராட்டங்கள் வெடித்தன.
தொடர்ச்சியாக மேற்குவங்கத்தில் கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதை கழகம் கண்டிக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசோ, இத்தாக்குதல்களைத் தடுக்க வக்கின்றி, மாணவிகள் இரவில் வெளியில் நடமாடக் கூடாது என்று திமிரடியாகப் பேசியுள்ளது.
அண்மையில், புதுச்சேரிப் பல்கலைக் கழகத்தின் காரைக்கால் கிளையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுக்கும் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யக் கோரி போராடிய மாணவர்கள் மீது போலீசு கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி கைது செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.
இவை அனைத்தும், இந்த சமூக மற்றும் அரசுக் கட்டமைப்பே பெண்களுக்கு எதிராக மாறியிருப்பதை உணர்த்துகின்றன. இதனால்தான், மாணவிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகக் கூட கடும் போராட்டங்களில் மக்கள் இறங்க வேண்டியுள்ளது. இருப்பினும், பல நேரங்களில் குற்றவாளிகள் எளிதில் தப்பித்துவிடும் நிகழ்வுகளே நடந்து வருகின்றன.
சமூகத்தின் இந்த இழிநிலைமையை மாற்றியமைக்க, பணியிடங்கள், பொது இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் வகையிலான குறிப்பான வழிமுறைகளை வகுத்து மக்கள் கண்காணிக்கத் தொடங்க வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாலியல் வெறியைப் பரப்பும் ஊடகங்கள், ஆணாதிக்க, பார்ப்பனிய ஆதிக்க, கார்ப்பரேட் சமூக, பண்பாட்டு, கலை, அரசியல் கட்டமைப்புகளைத் தகர்ப்பதற்கான போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
000
19. கரூரில் விஜய்யின் கவர்ச்சிவாத பொறுக்கி அரசியலின் விளைவாக, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கும் மக்கள் அதிகாரக் கழக மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கின்றது.
20. கரூரில் அரங்கேறிய கூட்ட நெரிசல் படுகொலைக்கு முதன்மை காரணமான நடிகர் விஜய்யை முதல் குற்றவாளியாகப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். விஜய் கட்சியிடமிருந்து, இறந்தவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை வசூலித்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்.
அதேசமயம், இத்தகைய கொடூர நிகழ்வைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய இடத்தில் உள்ள அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த நிகழ்வுக்கும் தங்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை என்பது போலச் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
21. இளைஞர்கள் கவர்ச்சிவாத அரசியலில் மூழ்கிக் கிடப்பதற்கு இதுவரை தமிழ்நாட்டை ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்துச் செயல்பட்ட கட்சிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களை அரசியல் படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மாணவர்கள், இளைஞர்கள் கவர்ச்சிவாத அரசியலுக்கு பலியாவதற்கும் போதைக் கலாச்சாரங்களுக்குப் பலியாவதற்கும் முக்கியமான காரணமாகும்.
கல்லூரிகளில் நடந்துவந்த மாணவர் சங்கத் தேர்தல்கள், கடந்த சில பத்தாண்டுகளாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்த அனுமதியில்லை. ஆகப் பெரும்பான்மை பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் செயல்படுவதற்குக் கூட அனுமதி இல்லாத நிலையே உள்ளது.
இவ்வாறு, மாணவர்களை நல்வழிப்படுத்தும் மாணவர் சங்கத் தேர்தல், மாணவர் அமைப்புகளை செயல்படத் திட்டமிட்டுத் தடுத்ததுதான், பெரும் இளைஞர் பட்டாளம் அரசியல் படுத்தப்படாததற்குக் காரணமாகும். இதுதான், கவர்ச்சிவாத அரசியலும் போதைக் கலாச்சாரமும் மாணவர்கள் மத்தியில் வளர வழிவகுத்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க என இரு அரசுகளும் போட்டிப்போட்டுக்கொண்டு மாணவர் அமைப்புகளை முடக்கியதன் பலனை நாம் இன்று அனுபவிக்கிறோம்.
ஆகவே, அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மீண்டும் மாணவர் சங்கங்கள் செயல்பட, மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கழகம் கேட்டுக்கொள்கிறது.
22. திருவண்ணாமலையில் ஆந்திர இளம் பெண் தமிழ்நாடு போலீசு இருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போலீசு தொடர்ந்து பொதுமக்கள் மீது பல்வேறு வன்முறைகளைத் தொடுத்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் – திருபுவனத்தில் (ஜூன் 28) அஜித் குமார் என்ற காவலாளி கொட்டடி (லாக்-அப்) படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் மதுரை அண்ணாநகர் போலீசு நிலையத்தில் (அக்டோபர் 9) தலித் இளைஞர் தினேஷ் குமார் போலீசால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு லாக்-அப் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஆகையால், லாக்கப் படுகொலைக்குக் காரணமான போலீசு அனைவரும் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். கொலை செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
மேலும், போலீசால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பணியின்போது போலீசு மேற்கொள்ளும் குற்றங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் சலுகைகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்று கழக மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
23. சென்னை சூளைமேட்டில் உள்ள பள்ளியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவனும் அதே வகுப்பில் படிக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியும் காதலித்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர்கள், பா.ஜ.க-வின் முன்னாள் நிர்வாகி சரவணனுடன் சேர்ந்து அச்சிறுவன் மீது, செப்டம்பர் 12-ஆம் தேதியன்று, கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதற்கடுத்து, நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே, கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி, 9-ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவரை, மறவர் சாதி மாணவர்கள் அறிவாளால் வெட்டிய கொலைவெறித் தாக்குதல் நடந்தது.
இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்திற்கு அருகில் இருக்கும் திருமயிலாடி பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்கின்ற தலித் இளைஞர் அக்டோபர் 6-ஆம் தேதியன்று, இருசக்கர வாகனத்தில் அம்பேத்கர் புகைப்படம் ஒட்டியதற்காக ஆதிக்கச் சாதி இளைஞர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை தமிழ்நாட்டின் ’திராவிட மாடல்’ அரசோ தடுப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், ‘வள்ளிக் கும்மி கலைஞர்’ என்ற பெயரில் கவுண்டர் ஆதிக்கச் சாதி வெறியரான கே.கே.பாலுவுக்கு “கலைமாமணி” விருது வழங்கியிருப்பது வெட்கக்கேடானது.
ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு துணை போகும் மேற்கண்ட தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், தலித்துகள் மீது வன்முறைகள் அதிகரிக்கக் காரணமான, ஆதிக்கச் சாதிச் சங்கங்களைத் தடை செய்ய வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. தடை செய்யப்பட வேண்டும். மேலும், சாதிவெறியைப் பரப்பும் சமுக ஊடகங்களைத் தடை செய்வதுடன், அதற்கு காரணமானவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்; சாதிவெறியூட்டும் திரைப்படங்களைத் தடைசெய்து, தயாரிப்பாளர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் தமிழ்நாட்டு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
24. மயிலாடுதுறையில் தலித் சாதியைச் சார்ந்த வைரமுத்து என்ற இளைஞர் ஆதிக்கச் சாதிவெறியர்களால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதைப் போலவே, திண்டுக்கல் வத்தலக்குண்டு அருகில் ராமநாயக்கண் பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த பெண்ணின் தந்தை மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலைக்கு துணைபோன மற்றவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டில் நெல்லை கவின் படுகொலையைத் தொடர்ந்து ஒரு மாத காலத்தில் மட்டும் இரண்டு ஆணவப் படுகொலைகள் அரங்கேறியிருப்பது, ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களின் கொட்டம் தலைவிரித்தாடுவதைக் காட்டுகிறது. ஆனால், இவற்றைத் தடுக்க தமிழ்நாடு அரசு எந்தவித தீவிர முயற்சிகளும் இன்றி, அதிகார வர்க்கத்திடம் கட்டுண்டு கிடப்பதை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க, குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்; படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். கொலை செய்தவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். ஆதிக்கச் சாதி சங்கங்கள், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆகியவைத் தடை செய்யப்பட வேண்டும். இத்துடன், விரைந்து ஆணவ படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசை கழகம் வலியுறுத்துகிறது.
25. எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது சாரம் விழுந்ததில் அசாம் மாநிலத் தொழிலாளர்கள் ஒன்பது பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்தனர். தமிழ்நாடு அரசு பலியான ஒன்பது பேருக்கு தலா ரூ.10 இலட்சம் என சொற்பத்தொகையை அளித்துள்ளது. இதனைக் கழகம் கண்டிப்பதோடு இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கவும் தொடர்புடைய அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கழகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், வட இந்தியத் தொழிலாளர்கள் குறைவான கூலி, அதிக வேலை நேரம் என்று கசக்கிப் பிழியப்படும் எவ்வித பாதுகாப்புமின்றி பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு தொழிலாளர்களை முறையான பாதுகாப்பு ஏற்பாடின்றி வேலையில் ஈடுபடுத்தும் நிறுவனங்களின் உரிமையை இரத்துச் செய்ய வேண்டும். அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவரும் காண்ட்ராக்ட்மயத்திற்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
26. சென்னை திருவொற்றியூரில் எம்.ஆர்.எஃப் (MRF) தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது. தொழிற்சங்கம், நிர்வாகத்திற்கு இடையில் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை மதிக்காமல், நிர்வாகம் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறை செலுத்திவருவதை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
27. தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி அக்டோபர் 9-ஆம் தேதி, தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தியது. மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி செப்டம்பர் 23 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில், மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் அத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தொழிலாளர் கோரிக்கைகளெல்லாம், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்பதை தொழிலாளர்கள் நினைவூப்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகின்றனர். இதைப் போலவே, தூய்மைப் பணியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போன்றவர்களுக்கும் பணி நிரந்தரம் செய்வதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு ஏமாற்றி வருகிறது.
தமிழ்நாடு அரசின் இப்போக்கை கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன், பகுதி நேர ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள், தொழிலாளர்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
28. தமிழ்நாட்டில் மதுரை திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவை மையப்படுத்தி கலவரத்தைத் தூண்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க., இந்து முன்னணி கும்பல் வேலை செய்துவருகிறது. இதன்தொடர்ச்சியாக, திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி பா.ஜ.க கும்பலைச் சார்ந்த எச்.ராஜா நடித்த “கந்தன் மலை” என்ற மதவெறி திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இப்படத்தின் பாடல் ஒன்று சங்கி கும்பலால் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டமாக இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இப்படத்தைத் தடை செய்ய தமிழ்நாடு அரசைக் கோருகிறது.
29. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிட்டு வணங்குவதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு அமைந்துள்ளது. இதன் மூலமாக, ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமின்றி, சங்கிக்கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிராக மதக்கலவரங்களைத் தூண்டி அரசியல் செய்வதற்கான வழிவகையும் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட மக்கள் அதிகாரக் கழகம் சட்டப்பூர்வமாகவும் மக்களைத் திரட்டியும் தொடர்ந்து போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறது.
30. மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்த பா.ஜ.க. பிரமுகர் குமரேசன், கிறிஸ்தவரின் நிலத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இவரது நில மோசடிக்கு ஆதரவாக கிறிஸ்தவர் மீது வழக்குப் பதிவு செய்து, துன்புறுத்தியவர் மதுரை திருப்பரங்குன்ற போலீசு ஆய்வாளர் மதுரைவீரன். சங்கிக்கும்பலின் எடுபிடியான இவரை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாத்து வருவது, திருப்பரங்குன்றத்தை மதக்கலவர பூமியாக்குவதற்கான சங்கிக் கும்பலின் சதித்திட்டம் என்பதும், அதிகார வர்க்கத்திலும் போலீசிலும் அது ஊடுருவியிருப்பதையும் இச்சம்பவம் நிரூபிக்கிறது.
பாசிச எதிர்ப்புப் பேசி ஓட்டு வாங்கிய ’திராவிட மாடல்’ அரசு இவற்றைக் கண்டுகொள்ளாமல், மதவெறியர்களுக்கு மறைமுகமாகத் துணைபோவதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
31. மதுரை மேலூர் வட்டாரம் கல்லங்காடு பகுதியில் சிப்காட்டிற்கு எதிராக பல கட்டப் போராட்டங்களை 18 கிராம மக்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 06.10.25 அன்று அமைதியான முறையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த மக்களைக் கைது செய்தது போலீசு. இதனை மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக கண்டிப்பதுடன் சிப்காட் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
32. கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தூத்துக்குடியில் முள்ளிக்காடு, பொட்டல்காடு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு கப்பல் கட்டும் தளத்திற்கான ஒப்பந்தங்கள் தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால், அப்பகுதியில் உப்பு உற்பத்தியில் ஈடுபடும் ஒரு இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதுடன், அப்பகுதியின் பல்லுயிர் தன்மை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கெதிராக அப்பகுதி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். போரடும் மக்களுக்கு கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், இந்த நாசகரத் திட்டத்தை தி.மு.க அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.
33. கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி தி.மு.க அரசு தமிழ்நாட்டிற்கான ’மாநிலக் கல்விக் கொள்கையை’ வெளியிட்டது. ஏற்கெனவே, தேசிய கல்விக் கொள்கையின் அங்கமான இல்லம் தேடிக் கல்வி, வானவில் மன்றம், எண்ணும் எழுத்துத் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்திவரும் தி.மு.க அரசானது தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமாகவே மாநிலக் கல்விக் கொள்கையை வகுத்துள்ளது. முற்றிலும் ஜனநாயக விரோதமான முறையில் இவ்வறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இதனை கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
34. செப்டம்பர் 26-ஆம் தேதி சென்னையில் நீலக்கொடி கடற்கரைத் திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், பாரம்பரியமாக இப்பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களின் கட்டுமரங்கள், வலைகள், ஃபைபர் படகுகள் முதலியவை அகற்றப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். மேலும், இத்திட்டத்தின் மூலம் கடற்கரைப் பகுதியில் கடல் மேம்பாலம் தொடங்கி எண்ணெய் எரிவாயு போன்ற நாசகரத் திட்டங்கள் அமல்படுத்தப்பட இருக்கிறது. இவ்வாறு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்கும் திட்டத்தை தி.மு.க அரசு உடனடியாக கைவிட வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
35. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி விதைகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் பலர் லட்சக்கணக்கில் நட்டமடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு போலி விதை விற்பனையாளர்களைக் கைது செய்வதுடன், நட்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கி பாதுகாக்க வேண்டுமென கழகம் கேட்டுக்கொள்கிறது.
36. 09.10.2025-இல் மதுரை அண்ணா நகர் போலீசு நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தினேஷ் குமார் என்ற வாலிபர் விசாரணையின் போது போலீசார் அடித்துக் கொல்லப்பட்டார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் காயம் இருப்பதை உறுதி செய்துள்ளனர். போராட்டத்துக்குப் பின் போலீசு ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி உள்ளனர். மற்ற போலீசு துறையினர் மீதும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.
தி.மு.க ஆட்சியில் தொடர் லாக்கப் படுகொலைகள் நடக்கின்றன. தி.மு.க அரசின் கையாலாகாத் தனத்தையும் போலீசு துறையின் பயங்கரவாத செயலையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட போலீசு துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்து தினேஷ் குமாரின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
எந்த அமைப்பும் ஒருங்கிணைக்காமலே எல்லா ஜனநாயக சக்திகளும் தானாக முன்வந்து போலீசு துறையின் அத்துமீறலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தற்கு மக்கள் அதிகாரக் கழகம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
000
நவம்பர் 7 – ரசியாவில் சோசலிசப் புரட்சி நடந்த நாள். உலக வரலாற்றையே புரட்டிப் போட்ட புரட்சி நாள்! முதலாளித்துவச் சுரண்டலை ஒழித்து, சமத்துவ சமநீதியைப் படைத்த நாள்! வருகின்ற 2025 நவம்பர் 7, ரசிய சோசலிசப் புரட்சியின் 108-வது நாளை முன்னிட்டு, மக்கள் அதிகாரக் கழகம், உழைக்கும் மக்களுக்குப் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
நமது நாட்டில் அரங்கேறிவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசத்தை முறியடித்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக் கட்டியமைக்க மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ந்து போராடும் என்று இந்த நாளில் உறுதியேற்கிறது.
★
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram