17.10.2025
அரியானாவின் கூடுதல் டி.ஜே.பி பூரன்குமார் சாதிய வன்கொடுமையால் தற்கொலை!
மக்கள் அதிகாரக் கழகம் கடும் கண்டனம்!
கண்டன அறிக்கை
ஹரியானாவின் கூடுதல் டி.ஜி.பி ஒய். பூரன் குமார், கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி சண்டிகரில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கிச் சூடுக் காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய ஒன்பது பக்க “இறுதிக் குறிப்பில்”, தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும், டி.ஜி.பி கபூர், எஸ்.பி. பிஜார்னியா உட்பட பல மூத்த காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்தியதாகவும் தொழில் ரீதியான பழிவாங்குதலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
பூரன்குமாருக்கு நீதி வேண்டி ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவரின் மனைவி தொடர்ந்து போராடி வந்தார். அவருடைய போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும் குரல் கொடுத்து வந்தன. அதன் விளைவாக முதல் தகவல் அறிக்கையில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. எனினும் பூரன் குமாரால் முதல் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட அரியானா மாநில டி.ஜி.பி கைது செய்யப்படவில்லை. அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு இருக்கிறார்.
தலித் மக்கள் எவ்வளவு தூரம் படித்தாலும் எந்த பதவிக்கு சென்றாலும் தொடர்ந்து அவர்கள் மீது சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து நீடித்து வருவதையே இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
இதற்கிடையில் பூரன்குமார் மீது உள்ள ஒரு லஞ்ச வழக்கை விசாரித்து வந்த போலீஸ் உதவி ஆய்வாளர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் பூரன் குமார் ஒரு ஊழல்வாதி என்றும் அதை மூடி மறைப்பதற்காகவே சாதிய பிரச்சனையை கையில் எடுத்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.
பூரன் குமார் தற்கொலை வழக்கை நீர்த்துப்போகச் செய்து, அதன் மூலம் உயர் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக காவல் உதவி ஆய்வாளர் பலி கொடுக்கப்பட்டுள்ளாரா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
அரியானா மாநிலத்தில் தொடர்ந்து பாசிச பி.ஜே.பி ஆட்சி செய்து வருகிறது. மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரே தன் மீதான சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறார் என்பது கவலைக்குரியதாக இருக்கும் அதே நேரத்தில், பிரச்சனையை மூடி மறைக்க ஒட்டுமொத்த போலீசின் நிறுவனமுமே கிரிமினல்மயமாக செயல்பட்டு இருப்பதையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
ஆக, ஹரியானாவின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்களை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் தொடர்புடைய அனைத்து போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram