20.10.2025
மஞ்சள் பட்டாணி இறக்குமதி வரி விலக்கை நீட்டிக்கும் மோடி அரசு!
இந்திய விவசாயிகளின் வருமானத்தை ஒழித்துக்கட்டி,
அதானி-குஜராத்திகளுக்கு தரை வார்க்கும் நடவடிக்கை!
பத்திரிகை செய்தி
கடந்த செப்டம்பர் 25 அன்று மஞ்சள் பட்டாணி மீதான இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கை எதிர்த்து “கிசான் மகாபஞ்யாத்து” என்ற விவசாயிகளின் அமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து ஒன்றிய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.
முதலில், மஞ்சள் பட்டாணிக்கான இறக்குமதி வரியை மூன்று மாத காலத்திற்கு மட்டும் ரத்து செய்து, அதற்கான அறிவிப்பை டிசம்பர் 8, 2023 அன்று மோடி அரசு வெளியிட்டது. ஆனால், அதன் பின்பு இந்த வரி விலக்கு ஏழு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, மே 31, 2025 அன்று இந்த வரி விலக்கை மார்ச் 31, 2026 வரை நீட்டிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.
பாசிச பி.ஜே.பி 2014-இல் ஆட்சிக்கு வந்தது முதல், உணவு பொருட்களுக்கான இறக்குமதியை அதிகரித்து வருகிறது. தற்போது உலகில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்திய விவசாயிகளை மேலும் நட்டத்திற்கு தள்ளும் வகையில், மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு 2026 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, மஞ்சள் பட்டாணி கனடா, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இப்போது இறக்குமதி வரிக்கு விலக்கு நீட்டிக்கப்பட்டதானது, மிகப்பெரும் பாதிப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும்.
உள்நாட்டு பருப்பு வகைகளுக்கு விலைகளைக் கட்டுப்படுத்தி நுகர்வோர் பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளைப் பாதுகாப்பதையும் கைவிட்டு மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்வதானது, இந்திய சந்தையில் நுகர்வோரான பெரும்பான்மை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை உருவாக்கும்.
மோடி அரசின் இந்த முடிவானது உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. குறிப்பாக நாட்டுக் கொண்டைக்கடலை மற்றும் துவரம் பருப்பு உற்பத்தி பற்றாக்குறை நிலையில் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மஞ்சள் பட்டாணி இறக்குமதி என்பது அதிகரித்ததுதான் இதற்குக் காரணம். உள்நாட்டு பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 7,000 – 8,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட இரண்டு மடங்கு குறைவாக அதுவும் இறக்குமதி வரியே இல்லாமல் மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டு குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் என சொற்ப விலைக்கு விற்கப்படுகிறது. இது உள்நாட்டு விவசாயிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும்.
தற்போது இந்த வகையான இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகள்தான் சந்தையில் கிடைக்கும். மேலும் இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளது.
இந்த சந்தையையும், லாபத்தையும் வெளிநாடுகளிலிருந்து மஞ்சள் பட்டாணியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நிறுவனமான அதானி வேர்ஹவுசிங் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் (Adani Warehousing Services Pvt Ltd) உள்ளிட்ட குஜராத்தி நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்கின்றன. அதானி நிறுவனம் ஒட்டுமொத்த மஞ்சள் பட்டாணி இறக்குமதியில் சுமார் 19 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது. அதேபோல், குஜராத்தி படேல்களுக்குச் சொந்தமான ஈ.டி.சி அக்ரோ புராசசிங் இந்தியா பிரைவேட் லிமிடட் (ETC Agro Processing India Private Limited) நிறுவனமும் இதில் ஆதிக்கம் செலுத்துகிறது.
அதானி உள்ளிட்ட குஜராத்தி நிறுவனங்களின் லாபத்திற்காக உள்நாட்டு பருப்பு உற்பத்தியையும், விவசாயிகளையும் அழிக்கத் துடிக்கிறது பாசிச மோடி அரசு. எனவே, மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
அதே சமயத்தில், குஜராத்தி, மார்வாடி, பார்ப்பன பனியா பின்னணி கொண்ட அம்பானி, அதானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பலின் லாபத்திற்காக, சூறையாடலுக்காக கட்டமைக்கப்பட்டு வரும், ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பாசிச பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், உள்நாட்டு உற்பத்தியை மையப்படுத்திய, பெரும்பான்மை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கின்ற மாற்றுப் பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டியுள்ளது.
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram