25.10.2025

தனியார் பல்கலைக் கழக திருத்தச் சட்டம் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றம்!

மக்கள் அதிகாரக் கழகம் கடும் கண்டனம்

கண்டன அறிக்கை

2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் திருத்த மசோதாவை கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக அரசு அறிமுகப்படுத்தியது. அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையிலும், இந்த சட்டத் திருத்த மசோதாவை, திமுக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் தனியார் பல்கலைக்கழகத்திற்கு குறைந்த பட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கர், இதர பகுதிகளில் 50 ஏக்கர் இருந்தாலே பல்கலைக்கழகம் ஆரம்பிக்கலாம் என்று சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பழுப்பு பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களாக எளிதில் மாற்றுவதற்கான திட்டங்களும் இந்த சட்டத்தில் உள்ளன.

தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விரும்பினால் பல்கலைக்கழகமாக தங்களை மாற்றிக்கொள்ளலாம். அப்படியானால், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல் கல்வித் திட்டங்கள், மாணவர்களின் கட்டணம் மற்றும் சேர்க்கை முறை வரை எல்லாவற்றையும் தனியாரே தீர்மானிப்பார்கள். அரசுக்கு அங்கு வேலை இல்லை.

மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்லூரிகள் புதிய பல்கலைக்கழகங்களாக செயல்படலாம் என்ற திட்டமும் முன்வைக்கப்படுகிறது.

உயர்கல்வியையே மொத்தமாக தனியாருக்கு தாரை வார்க்கின்ற இந்த பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருப்பதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. பாசிச மோடி அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக்கொண்டு கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களையும் கல்வியை தனியார் மயமாக்கும் திட்டங்களையும் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் புதிய கல்விக் கொள்கையை வெவ்வேறு பெயர்களில் – வடிவங்களில் திமுக அரசு திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக மாணவர் இயக்கங்களும் மக்கள் அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க