
25.10.2025
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 16ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட குறுவை மற்றும் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க அறுவடை செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாமல் பல வாரங்கள் காலம் கடத்துவதாலும், கொள்முதல் நிலையங்கள் தேவையான இடவசதியும் முறையான பாதுகாப்பு வசதியும் இல்லாததாளும் டன் கணக்கில் நெல் மூட்டைகள் வெயிலிலும் மழையிலும் கிடந்து சேதமடைந்து வருகின்றன.
நெல் கொள்முதலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், கொள்முதல் நிலையங்களையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டு கொள்கிறது.
தமிழ்நாடு அரசே!
- விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் கலத்திற்கு வந்தவுடன் 3 அல்லது 4 நாட்களுக்குள் கொள்முதல் செய்திடு!
- கொள்முதல் செய்யும் போது நெல் மூட்டைகளை எடைபோடுவதற்கு விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு 40 முதல் 60 ரூபாய் வசூல் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்து!
- நெல் கொட்டும் கலங்களை அரசு இடத்தில் உருவாக்கி காங்கிரீட் (சிமன்ட்) தரை அமைத்துக் கொடுத்திடு!
- அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகபடுத்திடு!
- மழை நீரினால் நெல் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிடு!
- நெல்லுக்கான விலையை எம்.எஸ். சாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி உற்பத்தி செலவுடன் 50% கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





