31.10.2025

கிருஷ்ணகிரி மாவட்டம்: யானைகள் தாக்கியதில் இரண்டு விவசாயிகள் பலி!

மாவட்ட நிர்வாகமும், வனத்துறையுமே குற்றவாளிகள்!

பத்திரிகை செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களில் யானை தாக்கியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை நாரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேணுகோபால் (50). இவருக்கு சொந்தமான நிலத்தில், நெல் பயிரிட்டுள்ளார். யானைகளால் பயிர்கள் சேதமாகி விடக்கூடாது என்பதற்காக, அக்.28 இரவு, நிலத்திற்கு காவலுக்கு சென்றுள்ளார். அப்போது ஒற்றை யானை தாக்கியதில், விவசாயி வேணுகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேபோல், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள நொகனூர், மரகட்டா, லக்கசந்திரம், மாரசந்திரம், தாவரகரை, அயன்பூரிதொட்டி, ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், வாழை, நெல் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

அக்.28 அன்று, 3 யானைகள் மலசோனை கிராமத்தில் ராகி வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளன. மேலும் அருகில் உள்ள கண்டகானப்பள்ளி, தாவரகரை, கேரட்டி கிராமங்களில் ராகி, தக்காளி, வாழை தோட்டங்களையும் நாசம் செய்துள்ளன. இதை அறிந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டிற்குள் யானைகளை விரட்டினர்.

இதனிடையே தாவரக்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணப்பா (65), நேற்று வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்துள்ளார். அக்.29 அன்று வனப்பகுதிக்குள் ஒரு ஆட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ஒற்றை யானை அவரை விரட்டித் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேற்கண்ட துயர நிகழ்வு நடந்த இரண்டு பகுதிகளிலும் அப்பகுதி மக்கள் யானைகளைத் தடுப்பதற்கு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, மாவட்ட நிர்வாகத்தையும், வனத்துறையையும் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே ஆந்திர மாநில எல்லையில் மகாராஜகடை, குருவிநாயனப்பள்ளி, காளிக்கோயில், வரமலைகுண்டா ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளையொட்டிய வனப்பகுதியில், 11 யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் 6 யானைகள் ஒரு குழுவாகவும், 4 யானைகள் மற்றொரு குழுவாகவும், ஒற்றை யானை தனியாகவும் சுற்றி வருகிறது. யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதிகளிலும், இரவு நேரங்களில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன.

கடந்த பல ஆண்டுகளாக யானைத் தாக்குதலால் பயிர்ச்சேதமடைவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடக்கிறது.

வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சோலார் மின்வேலி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் வாக்குறுதி கொடுத்தும் நிறைவேற்றவில்லை. யானைத் தாக்குதலால் விவசாயிகள் உயிரிழக்கும்போது வாக்குறுதிகள் கொடுப்பது, அதன் பிறகு அலட்சியமாக இருப்பது என்ற போக்கிலேயே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உள்ளன. இதனை மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமே! வனத்துறையே!

  • யானைத் தாக்குதல் அபாயம் உள்ள பகுதிகளில், விரைவாக சோலார் மின்வேலி அமைத்துக் கொடு!
  • யானைத் தாக்குதல் அபாயம் உள்ள பகுதிகளில் நிரந்தரமான கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடு!
  • உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கு!
  • வனவிலங்குகள் தாக்குதலால் சேதமடையும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்கு!


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க