
02.11.2025
ஆக்கிரமிப்பு என்று கூறி, சாலையோரக் கடைகளை அகற்றிய ஓசூர் மாநகராட்சி!
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சாலை ஓரப் பூக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் பழக்கடைகள் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகின்றன. தற்போது நகர வளர்ச்சி, மக்கள் நெருக்கடி, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்று காரணம் கூறி, மாநகராட்சி ஆணையாளர் சபீர் ஆலம் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள், போலீசின் துணையுடன் டிராக்டர், ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இது வியாபாரிகள் மத்தியில் கோபத்தை உருவாக்கியுள்ளது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், இனி என்ன செய்வோம் என அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், 60க்கும் மேற்பட்ட வியாபாரிகளை போலீசு கைது செய்தது.
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும், ஓசூர் மாநகராட்சியின் நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆனால், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களை பெரும் தனியார் நிறுவனங்கள், அரசியல் செல்வாக்குள்ள தனி நபர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை.
உழைக்கும் மக்களுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?
அது மட்டுமல்ல, ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அலசநத்தம் சாலை முதல் மத்திகிரி பேருந்து நிலையம், வேளாங்கண்ணி பள்ளி 100 அடி ரோடு, பத்தினப் பள்ளி சாலை, ராயக்கோட்டை சாலை, பெங்களூர் ரோடு, இ.எஸ்.ஐ ரோடு என ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓர தள்ளுவண்டிக் கடைகள், சாலை ஓர கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் இருப்பதாகத் தெரிகிறது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், சாலையோர கடைகள், பூக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு முறையான மாற்று ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
![]()
இவண்,
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





