
03.11.2025
மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகள்: கார்ப்பரேட்மயமாக்கல்தான் தற்சார்பா?
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
கடந்த ஆகஸ்ட் மாதம் (27.08.2025) “மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளை தடை செய்! பாரம்பரிய நெல் விதைகளை அழிக்காதே!” என்ற அடிப்படையில் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில், ‘தற்சார்பு இந்தியா’வுக்கான திட்டத்தின் அடிப்படையில் அடுத்த ஆறு ஆண்டுகளில் மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகளைப் பயிரிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே மரபணு திருத்தப்பட்ட நெல் விதிகளைத் தடை செய்யக் கோரி விவசாயிகள் போராடிவரும் சூழலில், தற்போது மத்திய அரசு மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகளைப் பயிரிடுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இதனை மக்கள் அதிகாரக் கழகம், கிருஷ்ணகிரி மாவட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் காவு வாங்கும் வகையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் இரகங்கள் மற்றும் மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்த மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் மற்றும் பருப்பு வகைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
ஒன்றிய அரசின் கார்ப்பரேட்மயமாக்கல் நடவடிக்கையைக் கண்டித்து, பல்வேறு விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து, குறைந்தபட்ச ஆதரவு விலை கோரியும், விவசாயிகளுக்கு எதிரான உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து வெளியேறக் கோரியும் கோடிக்கணக்கான இந்திய விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக போர்க்குணத்தோடு போராடி வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே.
அவர்களுக்கு பாசிச பா.ஜ.க. அரசு துரோகம் இழைத்து வருவதும் நாம் அறிந்ததே.
இந்நிலையில், ஒன்றிய அரசின் மேற்கண்ட நடவடிக்கை, பாரம்பரிய விதைகளை அழித்துவிட்டு, ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளின் வசம் ஒப்படைப்பதற்கு வழிவகுப்பதாகும்.
மரபணு திருத்தப்பட்ட / மாற்றப்பட்ட நெல் விதைகளையும், மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகளை பயிரிடுவதை தடை செய்யக்கோரியும், விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கப்படுவதற்கு எதிராகவும் மாபெரும் மக்கள் போராட்டங்களைக் கட்டியெழுப்புவது அவசியமானதாகும்.
பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் பருப்பு வகைகள் பாதுகாக்கின்ற, இந்திய விவசாயிகளின் சுயசார்பை உறுதி செய்கின்ற, கார்ப்பரேட்மயமாக்கத்திற்கு முற்றிலும் எதிரான மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை நிலைநாட்டுவதே நிரந்தர தீர்வாக அமையும்.
இத்தகைய அரசியல் – பொருளாதார மாற்றை அடிப்படையாகக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காகப் போராடுவோம்!
![]()
இவண்,
தோழர்  இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





