
04.10.2025
கோவை மாணவி மீதான பாலியல் வன்முறை:
தோற்றுப் போனது அரசு கட்டமைப்பு!
அழுகி நாறும் இந்த சமூகத்தை வேரறுக்காமல் நமக்கு வாழ்வு இல்லை!
கண்டன அறிக்கை
நேற்று முன்தினம் (நவம்பர் 2) இரவு தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கோவை கல்லூரி மாணவி ஒருவர் மூன்று பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மாணவியை காப்பாற்ற முயன்ற அந்த ஆண் நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டு இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த நிகழ்விற்கு பிறகு இன்று குற்றவாளிகள் மூன்று பேரையும் காலில் சுட்டுப் பிடித்ததாக போலீஸ் அறிவித்துள்ளது. பாலியல் வன்முறை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் சுட்டுப் பிடிக்கப் பட்டாலும் படுகொலை செய்யப்பட்டாலும் பாலியல் வன்முறை நிற்கவில்லை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
பெண்களை இழிவாகவும் அடிமையாகவும் கருதும் இந்த பார்ப்பனிய பண்பாடு, பெண்களை நுகர்வு பொருளாக கருதும் இந்த தனியார்மய நுகர்வு பண்பாடு இந்த இரண்டும் இணைந்து பெண்கள் மீதான வன்முறையை மிகவும் தீவிரமாக்கியுள்ளது.
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சில மணி நேரங்கள் ஆடையின்றி அந்தப் பெண் துடிதுடித்தார் என்பதை கேட்கும்போதெல்லாம் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் இப்படி ஒரு நிகழ்வும் நடைபெற்று இருக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.
சாதி – வேத – வர்ண – பார்ப்பனிய எதிர்ப்பின் தளமான தமிழ்நாட்டில் நடைபெற்ற நடைபெறுகின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தமிழ்நாட்டை பின்னோக்கித் தள்ளும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது.
குறிப்பாக இந்தியாவில் அரங்கேற்றப்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிச கும்பலின் ஆட்சியானது பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பலால் நடத்தப்படும் கலவரங்களில் சிறுபான்மையாக பெண்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுகின்றன.
உலகம் முழுவதும் பாலின சமத்துவம் மூன்றாம் பாலின உரிமை என்று பேசத் தொடங்குகின்ற இக்காலத்தில்தான் பெண்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும், அடிமையாக இருக்க வேண்டும், கணவனை கடவுளாகக் கருத வேண்டும் என்பது போன்ற முட்டாள்தனமான மூடநம்பிக்கை கருத்துக்கள் திட்டமிட்டு தற்பொழுது பரப்பப்பட்டு வருகின்றன. சதி என்ற பெயரில் உடன்கட்டை ஏறுதலைக் கூட பெருமையாக இப்போதும் கூறிக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல்.
ஆக, ஒட்டுமொத்தமாக அரசு கட்டமைப்பே பெண்களுக்கு எதிராக மாறிப் போய் உள்ள இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல் அரசு கட்டமைப்பையே விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில்தான் பெண்கள் மீதான பாலியல் வன்முறையையும் அதற்கு எதிரான எதிரணியையும் நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது.
பெண்கள் மீதான பாலில் வன்முறைக்கு காரணமான பாலியல் ஆபாச இணையதளங்கள், கஞ்சா, டாஸ்மாக், போதை, பெண்களை இழிவுபடுத்தும் நுகர்வு பொருளாக காட்டும் ஊடகங்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள், பெண்களை அடிமைப்படுத்த வேண்டும் என்ற கருத்தைத் தாங்கி நிற்கும் புத்தகங்கள், சாதி – மத வெறி அமைப்புகள், கட்சிகள், இந்த அரசு நிறுவனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்காத வரை நமக்கு வாழ்வு இல்லை என்பதையே மேற்கண்ட நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
கோவையில் மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மீது உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





