மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், 17.11.2025 அன்று பகல் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார்.
தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இவ்வமைப்புகளின் சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி, கோவை, நெல்லை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத் தோழர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தோழருக்கு சிவப்பஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.
அவ்வுரைகளில் கம்யூனிசப் பண்புகளுக்கு தோழர் முன்மாதிரியாக திகழ்ந்ததையும், தோழரிடம் இருந்து தாங்கள் கற்றுக்கொண்டதையும், தோழருடனான தங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர். தோழர் ஜம்பதாண்டு காலம் பயணித்த மார்க்சிய-லெனினிய-மாவோ பாதையில் தாங்களும் பயணிக்க உறுதியேற்றனர்.
மேலும், தமிழ்தேச மக்கள் முன்னணி, முற்போக்கு இளைஞர் முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் சிவில் உரிமைகளுக்கான ஒன்றியம் ஆகிய அமைப்புத் தோழர்களும் திரைப்பட இயக்குநர் தோழர் லெனின் பாரதி, குங்குமம் பத்திரிகை ஆசிரியர் சிவராமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்களும் ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு தோழருக்கு சிவப்பஞ்சலி செலுத்தி உரையாற்றினர். அவற்றில், மாநில அமைப்புக் கமிட்டி மக்கள் திரள் பாதையை இத்தனை ஆண்டுகாலம் கடைபிடித்து வருவதில் தோழரின் பங்களிப்பு முக்கியமானது என்பதை வலியுறுத்தி பேசினர்.
அதன்பிறகு, மதியம் 12 மணியளவில் லட்சுமிபுரம் இல்லத்திலிருந்து குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலை வரை இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. தோழரின் உடலை தாங்கிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்னணியில் பு.மா.இ.மு. தோழர்கள் ஊர்வலத்தை வழிநடத்தி சென்றனர். வாகனத்திற்கு பின்னால் மற்ற தோழர்கள் அணிவகுத்து வந்தனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான தோழர்கள் செஞ்சட்டை அணிந்து செங்கொடி ஏந்தியிருந்ததால் ஊர்வலமே செந்நிறமாக காட்சியளித்தது.
ஊர்வலத்தில் “நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்துக்கு செவ்வணக்கம்”, “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்”, “வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்”, “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு கட்டியமைப்போம்” “மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்லட்டும் வெல்லட்டும்” உள்ளிட்ட முழக்கங்கள் விண்ணதிர எழுப்பப்பட்டன.
இறுதியாக, ஊர்வலம் நிறைவுற்றவுடன் உடல் தானம் வழங்குவதற்குவதாக தோழரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
***



சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



