கடந்த ஐம்பது ஆண்டுகளாக நக்சல்பாரி புரட்சிகர அரசியலுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட முதுபெரும் தோழர் சம்பத் என்கிற குமார் (70 வயது) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், நவம்பர் 17 அன்று தான் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியரான தோழர் சம்பத், தான் கல்லூரி மாணவராக இருந்த போதே நக்சல்பாரி அரசியலை ஏற்று கட்சியில் ஊழியராக செயல்படத் தொடங்கினார். உறவினர்கள், திருமணம் குறித்தெல்லாம் சிந்திக்காமல் கட்சி, தோழர்கள், கட்சி பணிகள் என்று மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார். கம்யூனிச பண்புகளுக்கும் உணர்வுகளுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார்.
தோழரின் இளமை, சிந்தனை, ஆற்றல், வாழ்க்கை என அனைத்தும் மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது போலவே, அவரின் இறப்பிற்கு பிறகும் அவரின் உடலும் இச்சமூகத்திற்கு அதிகபட்ச பயனளிப்பதாக இருக்கும் வகையில், தோழர் சம்பத்தின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
தோழரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நவம்பர் 18 அன்று அவர் வாழ்ந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில், செஞ்சட்டை தோழர்கள் புடை சூழ நடைபெற்றது. முழக்கங்கள் விண்ணதிர, செங்கொடி ஏந்திய தோழர்களின் அணிவகுப்புடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதன் பிறகு தோழரின் உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நவம்பர் 19-ஆம் தேதி அன்று காலை தோழர் சம்பத்தின் உடலை தானம் செய்வதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவுற்று ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறையின் தலைமை மருத்துவரும், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களும் ஒன்றிணைந்து தோழரின் உடலைப் பெற்றுக் கொண்டனர். தோழர் சம்பத்தின் உடலுக்கும், தோழரின் உடலை ஒப்படைக்க சென்ற மக்கள் அதிகாரக் கழகத் தோழர்களுக்கும் உரிய மரியாதை செலுத்தினர்.
“மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக, ஆராய்ச்சிக்காக உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதை நாங்கள் மதிக்கிறோம். எள்ளளவும் உடலை அவமதிக்க மாட்டோம்” என்று மருத்துவக் கல்லூரியைச் சார்ந்தவர்களும் தோழர்களும் கையை உயர்த்தி உறுதிமொழி ஏற்றனர். தோழரின் உடல் தானம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் தோழர்களிடம் வழங்கப்பட்டது.



மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், தோழர் சம்பத் ஐம்பதாண்டுகளாக மக்களுக்கு தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டது பற்றியும், அவர் இறந்தப் பிறகும் அவருடைய உடல் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக தானம் செய்யப்பட்டுள்ளது குறித்தும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

புதிய ஜனநாயகம் பத்திரிகையின் நிர்வாகியான தோழர் சண்முகராசு, “இன்பத்திற்காக வாழ்ந்தோம்; இன்பத்திற்காகப் போர்க்களம் புகுந்தோம்; இன்பத்திற்காகவே இப்பொழுது இறந்துகொண்டிருக்கிறோம். ஆகவே, துன்பம் எங்கள் பெயரோடு என்றும் இணைக்கப்பட வேண்டாம்” என்ற தோழர் ஜீலியஸ் பூசிக்கின் புகழ்பெற்ற வாசகங்களை வாசித்தார்.

இறுதியாக, தோழர் சம்பத்தின் உடல் செவ்வணக்கத்துடன் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட்டது. நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் முன்மாதிரியானதுமாகும். இது சக தோழர்களிடம் தாங்களும் தங்கள் உடலை தானம் செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
![]()
வினவு களச்செய்தியாளர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram




